கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

லகு வாசிஷ்டம்
——————–
வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும்
அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம்
ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை
ராகவா ஆடு ரசித்து….!
ஆர்பரித்து ராகவா மேற்புரத்தில் ஆடுநீ
பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல் -நீர்பரப்பாய்
அஞ்சின்(ஐம்புலன்) அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!
இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
ராகவா, ஆகவே மோகவாய் போகாது
யோகமாம் வாசிஷ்டம் எய்து….கிரேசி மோகன்….!
குரு பஞ்சகம்….!
———————
ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)
திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)
மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)
அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)
ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)