கலைஞர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி

முத்துவேலர் பெற்ற முத்தே – நீர்
முத்தமிழ்க் காவலர் ,
முத்தமிழ்க் கலைஞர்,
முத்தமிழ் அறிஞர் ,
முத்தமிழ்க் களஞ்சியம்

எத்தனை பட்டங்கள் ,
எத்தனை பதவிகள் ,
எத்தனை பொறுப்புகள்
எத்தனை படைப்புகள்
அத்தனையும் முடித்து
நித்திரை கொண்டாயோ ?

பெரியார் , அண்ணா வழியினிலே
பகுத்தறிவாளராய் உருவெடுத்தாய்
மூட நம்பிக்கைகள் ஒழித்திடவே
முழுமூச்சாகக் குரல் கொடுத்தாய் .

இந்திய அரசியல் வரலாற்றில்
இந்தியத் தலைமைகள் உருவாக்க
இன்றியமையாத தலைவனாய்
இருந்தது உன்போல் யாருமிலர் .

சட்ட மன்ற உறுப்பினராய்
தோல்வியே காணாது
சாதனை படைத்தாய் -இன்று
சரித்திரமானாய்

தமிழன் பெருமையும் ,
தமிழின் பெருமையும்
தரணியெல்லாம் பரவ
தமிழ் வளர்க்கத் துறைகள் அமைத்தாய்
தமிழ் மாநாடுகள் நடத்தி வைத்தாய் .
தமிழறிஞர்களை கௌரவித்தாய் .
தமிழே எந்தன் மூச்சென உரைத்தாய் – தன்
தலை மகனை இழந்தாள் தமிழ்த்தாய் .

அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்தாய் – இன்று
அண்ணாவின் அருகினில் இடம் பிடித்தாய்.
தங்கத் தலைவா நீ உறங்கு – உன்னை
வங்கக்கடலலை தாலாட்டும்.

உன்னிடம் இருந்த திறமையினால்
உன்னதத் தலைவனாய் உருவெடுத்தாய் .
உன் இடம் இனிமேல் வெற்றிடமே .
உன்னை மறவாது தமிழினமே .

கண்ணீருடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
07.08.2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *