Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

அண்ணாவின் படைப்புகளில் சமுதாய மாற்றங்கள்

-ஆறு. செல்வமணி 

ஒரு சமுதாயச் சிந்தனையாளனின் சிந்தனை வன்மைக்கும், வெளிப்பாட்டு மென்மைக்கும் அவன் வாழும் சமுதாயத்தின் நிலை, காலம், சூழல், மன உணர்வு, வரலாறு, கல்வி, இயக்கங்கள் ஆகியவை காரணங்களாக அமைகின்றன. இவை மட்டுமின்றி மொழி, பண்பாடு, இலக்கியங்கள் என்பனவும் ஒரு சமுதாயச் சிந்தனையாளனின் இன எழுச்சிக்கு வாயிலாக அமையும் என்பதனை அறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகள் உணர்த்துகின்றன. அறிஞர் அண்ணா தனது படைப்புகளில் பழைய மதிப்புகளை மாற்றத்திற்குள்ளாக்குகின்றார். சமுதாயத்தில் நிலவும் எண்ணற்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் மாற்றத்தைக் கூறுகிறார்.

சமய விழிப்புணர்வு

மனிதனைப் பண்படுத்தி நன்னெறியில் செலுத்துவது சமயம் ஆகும். மனிதனை மனிதன் கடவுளின் பெயரால் சுரண்டுவதற்கு ஏற்ற களமாகவும், சுகமான வாழ்வுக்குத் தக்க நெறியாகவும் இத்தகைய சமயத்தைத் தூய்மையான சமயச் சான்றோர்கள் எண்ணுவதில்லை. இதனால் மனிதனின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இன்பமான வாழ்வை மேற்கொண்டு வரும் போலிச்சமயவாதிகளையும், சமயத்தின் நோக்கத்தையும் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறும் விதமாக அண்ணா தம் படைப்புகளைப் படைத்துக்காட்டினார். இந்து சமயத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளைத் தமது படைப்புகளில் காட்டியுள்ளார். இப்பிரச்சினைகளிலிருந்து மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தம் படைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களையும் கூறியுள்ளார். இந்தவகையில் இந்து சமயத்தில் பின்பற்றப்படுகின்ற வேதம் ஓதுதல் மக்களைப் பிரிக்கும் செயல் எனக் கூறுகிறார்.

சாதி ஒழிப்பு

சமுதாயத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஆணி வேராக இருப்பவை சாதிப் பிரிவினைகள். சாதிப் பிரிவுகளும் சமயப் பிரிவுகளும் இருக்கின்ற வரையில் சமுதாயத்தில் மூடப்பழக்க வழக்கங்களும் இருக்கவே செய்யும். புத்தர் முதல் பெரியார் வரை தோன்றிய சீர்திருத்த அறிஞர்கள் பலரும் சாதிப் பிரிவினைகளைச் சாடியே வந்தனர். காந்தியடிகள், இராஜாஜி போன்றோர் இத்துன்பங்கள் நீங்கச் சிறந்த வழி கலப்புத் திருமண முறைதான் என்று பேசியதோடு செயலிலும் காட்டினர்.

‘‘ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால், பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக வேண்டும். ஆனால் இந்த நாட்டிலே, ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம். மனத்திலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை. எனவேதான் பேதமற்ற சமுதாயத்தை – சமத்துவத்தை – சமதர்மத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகின்றது.’’ என்ற அண்ணாவின் பேச்சு சாதியச் சமுதாயத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றது.

கலப்பு மணம்

சமுதாய நலன் நாடுவோர் திருமணத்தில் ஆதிக்கங் கொண்டிருந்த சாதிச் சிக்கலை வீழ்த்துவதற்குக் கலப்பு மணத்தைச் சிறந்ததொரு படைக்கலனாகக் கண்டறிந்தனர். திரு.வி.கல்யாணசுந்தரமும், ‘சாதி நோயை அறவே நீக்கவல்ல மருந்து தேவை என்று நினைந்தேன் நினைந்தேன் பன்னெடுநாள் நினைந்தேன். என்கின்றார்’.

‘‘கலப்பை மூலம் நிலத்தில் நாம் உண்டாக்கும் கலப்பை மாந்தர் நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோமாயின் கலப்பு மணம் உருவாக வழியுண்டாகும் கலப்பு மணத்தால் சாதி செத்தே போகும்’’ என்பர் கவிஞர் சுரதா. சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சாதியும், பொருளாதார வேறுபாடுகளும் மறையக் கலப்பு மணம் தேவையென்பதை அண்ணா தம்முடைய பல படைப்புகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பகுத்தறிவுச் சிந்தனைகள்

‘சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு’ என்பார் பெரியார். ‘குருட்டுத்தனமாக மனிதனையோ, மதத்தையோ, பின்பற்றுவது மானங்கெட்ட செயல். பகுத்தறிவுப்படி நடப்பது மிகவும் கண்ணியமானது’ என்பது அறிஞர் இங்கர்சாலின் கருத்தாகும். ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவினைச் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கைப் பாதைக்கு ஒளிபாய்ச்ச வல்லது பகுத்தறிவு என்பதனை,

‘‘பச்சை விளக்காகும் உன் பகுத்தறிவு தம்பி
பச்சை விளக்காலே   நல்ல பாதை பிடி தம்பி”

எனப் பாரதிதாசன் பாடுகின்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் இருந்த அண்ணாவும் தமது பகுத்தறிவுக் கருத்துக்களைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளார். தமது படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பெரிதும் இடம்பெறச் செய்துள்ளார். இதன்மூலம் இச்சமுதாயத்தில் உள்ளவர்களின் மனங்களில் இருந்து அறியாமை இருளை அகற்றிப் பெரியார் கண்ட கனவை நனவாக்கத் தம் இலக்கியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

தாம் வாழ்ந்த காலத்திலேயே புதுமையைப் புகுத்தி வெற்றி கொண்ட புதுமையாளர்களுள் அறிஞர் அண்ணாவும் ஒருவர் என்பதற்கு சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகம் சான்றாகும். இதில், “மாடா போ, மரமா போ, புழுவாகப் போ என சாபம் கொடுக்கிற காலமா? இது இல்லே நம்ம கையில அக்கினி இருக்குன்னு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும்.” என வரும் உரையாடல் காலத்தால் நிகழ்ந்துள்ள மாற்றத்தை உணர்த்தும். விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது படைப்புகளை அறிஞர் அண்ணா படைத்துள்ளார் என்பதை உணர இயலும்.

வரலாறு என்பது உண்மைகளின் உறைவிடமாக இருக்க வேண்டுமே தவிர, பொய்களின் கூடாரமாக விளங்கக்கூடாது. தமிழில் உள்ள புராணங்கள் அனைத்தும் பல பேருடைய கனவுகள் என்கிறார் அண்ணா. இந்தக் கருத்தைப் பள்ளியறையில் பரமசிவன் என்ற கதையில் புலப்படுத்துகிறார். இக்கதையில் வரும் வீரன், பரமசிவனும் பார்வதியும் உரையாடுவதைப் போல கனவு காணுகிறான். அதைத் தன் நண்பனிடம் கூறுகிறான். அக்கனவில் வரும் பரமசிவன், பார்வதி ஆகிய இருவரின் உரையாடல் மூலமாகப் பல்வேறு விழிப்புணர்வுச் சிந்தனைகளை அளிக்கின்றார் அண்ணா. இறுதியாக வீரனின் வாயிலாகப் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகிறார்.

இருபதாம் நூற்றாண்டிலும் பிள்ளைபெற வேண்டி நடக்கும் மூடப்பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டி அவையெல்லாம் வைதீகர்கள் தங்களது பிழைப்பிற்காக ஏற்பாடு செய்தவை இந்தக் கருத்து சமுதாய மாற்றத்திற்கான அண்ணாவின் குரலாக  அமைந்துள்ளது.

மூடநம்பிக்கை ஒழிதல்

மக்களுக்கு வரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் கிரக பலன்களால் தான் ஏற்படுகின்றன என்ற கருத்து பழங்காலத்தொட்டே நிலவிவருகிறது. இதனைச் சோதிடத்தால் யார் யாருக்கு எப்பொழுது கிரக பலன்கள் எப்படி இருக்கின்றது என்பதை கணித்துக் கூறமுடியும் என்ற கருத்தும் உள்ளது. இதில் முன்கூட்டியே வரும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்குப் பரிகாரம் செய்தால் நமக்கு வராது என்பது போன்ற பல நிலைகள் உள்ளன. இதுபோன்ற செயல்களை அண்ணா மூடப்பழக்கவழக்கங்களாகக் கருதுகிறார். இம்மூடப்பழக்கத்தைத் தன்னுடைய பல படைப்புகளிலும் சாடியிருக்கின்றார்.

மக்கள் புரட்சி

பொதுமக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வர்க்கத்தினரை அடையாளம் கண்டு மக்களே அவர்களைத் தண்டிக்கும் புரட்சி ஏற்பட வேண்டும் என்ற கருத்தை அண்ணா தம்முடைய படைப்புகளில் பதிவு செய்துள்ளார். மக்கள் புரட்சியினால் மட்டுமே எந்தச் செயலும் சாத்தியமாகும் என அண்ணா உணர்ந்திருந்தார். உலகத்தில் நிகழ்ந்த மக்கள் புரட்சிகளைக் கருவாகக் கொண்டும் படைப்புகளைத் தந்துள்ளார் அண்ணா. இதயம் இரும்பானால், மக்கள் கரமும் மன்னன் சிரமும், அரசாண்ட ஆண்டி ஆகிய குறும் புதினங்கள் உலக வரலாற்றில் நடைபெற்ற மக்கள் புரட்சியைக் கொண்டு எழுதப்பட்டவையாகும். மக்கள் புரட்சியைக் கூறும் இவ்வரலாற்றுப் படைப்புகள்மூலம் தாம் சார்ந்திருந்த சமுதாயத்திலும் ஒரு புரட்சி தோன்ற வேண்டும் என்ற அண்ணாவின் எண்ணம் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவம் ஒழிதல்

ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதலாளிகளின் வளர்ச்சி தொழிலாளிகளின் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்பதைத் தன்னுடைய இலக்கியங்களில் பதிவுசெய்யத் தவறவில்லை. ஆனால் அந்த உழைப்பாளிகளை முதலாளிகள் தங்கள் அடிமைகளாகக் கருதி இழிவாக நடத்தும் செயலை அண்ணா மிகக் கடுமையாகச் சாடுகின்றார்.

செவ்வாழை என்னும் சிறுகதையின் மூலம் உழைப்பவர்படும் துன்பம் உணர்த்தப்படுகிறது. பாடுபட்டும் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மனவருத்தப்படும் செங்கோடனின் நிலை அன்றைய கால உழைக்கும் வர்க்கத்தினரின் நிலையாக இருப்பதை, ‘‘பாடுபட்டோம், பலனைப் பெறப்போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் – பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக்கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான்.” என்னும் கூற்று உணர்த்தும். அதோடு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற செங்கோடனின் மனத்தில் தோன்றும் சிந்தனை வழியாக உழைப்பவர்களுக்குக் காலத்தால் ஏற்பட வேண்டிய மாற்றத்தின் வித்தை விதைக்கின்றார் அறிஞர் அண்ணா.

அரசியல் மாற்றங்கள்

நாட்டில் நிலவும் இருவேறு காட்சிகளின் தன்மையை எடுத்துக்கூறுவதாக அமைவது இரு காட்சிகள்… என்னும் சிறுகதையாகும். ஒரே நாட்டில் மன்னர் வாழ்க்கையும் சாதாரண மக்கள் வாழ்க்கையும் இருக்கும் நிலையை எடுத்துக்கூறுகிறது இச்சிறுகதை. வசதியின் உச்சத்தில் இருக்கும் மன்னர், அமைச்சர்கள் அவர்தம் உறவினர்கள் போன்றோரது நிலையையும் அதே நாட்டில் வாழும் மக்களின் நிலையையும் ஆராயும் விதமாக அண்ணாவால் எழுதப்பட்டது. மக்களுக்கான அரசியலையும் சட்டங்களையும் உருவாக்குவதற்கான மாற்றத்தின் வித்தை அண்ணா இச்சிறுகதையின் வழியாக மக்கள் மனத்தில் விதைத்துச் செல்கின்றார்.

நீதித்துறையில் மாற்றம்

சட்டத்தைக்கூடத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஏழைகளை அல்லல்படுத்தும் ஆதிக்கக்காரர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட நீதிபதி வக்கீலாகும் கதையைச் சமுதாய மாற்றமாக அண்ணா படைத்துக்காட்டியுள்ளார். ‘‘உங்களுக்காக ஆம் உண்மை ஆனால், நீங்கள் குற்றம் செய்துகொண்டே இருக்கவும், நான் வாதாடவும் அல்ல நீதிக்காக உமக்கும், உம்மை அடக்கிஅழிக்க எண்ணும், ஆதிக்கக்காரருக்கும், நீதியை மதித்து நடந்திடும் மனப்போக்கு, செயல்முறை ஏற்பட நான் வக்கீலானேன்.” என நீதிபதியாக இருந்து வக்கீலாகும் பாதிரியப்பன் கூறுவது ஏழைகளின் துயர்துடைக்க நீதித்துறையில் நிகழும் மாற்றத்தை அண்ணா தனது நீதிபதி வக்கீலானார் என்ற சிறுகதையில் காட்டியுள்ளார்.

பெண் விழிப்புணர்வு

அரசியலில் பெண்களும் ஈடுபட வேண்டும், தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் துடைத்தெறிந்துவிட்டுத் துணிச்சலுடன் போராடி வாழவேண்டும் என்ற கருத்தையும் பார்வதி என்ற பாத்திரத்தின் வாயிலாகப் புலப்படுத்துகின்றார். ஆடவரால் ஏமாற்றப்படும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்து மேற்கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம் என்ற வழிமுறையையும் உத்தமி என்ற பாத்திரத்தின் மூலம் சொல்கின்ற தன்மை பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அண்ணா தரும் அறிவுரையாகவும் உள்ளது.

சுயமரியாதைத் திருமணம்

தமிழரும், ஆரியரும் நேர்எதிர்ப் பண்பாட்டினர். தமிழர் களவு, கற்பு நெறியைப் போற்றிவர ஆரியரோ பிரமம், பிரசாபத்தியம் முதலான எண்வகை மணமுறையை வகுத்து வளர்த்தனர். இதில் ஆண் பெண்ணை விரும்புவது என்பதற்கோ அன்றிப் பெண் ஆணை விரும்புவது என்பதற்கோ சிறிதும் இடம் இல்லை. ஏனெனில் அத்திருமண முறைகளில் மணப்பெண் பருவம் அடையாதவளாக – குழந்தையாக – இருக்க வேண்டும் என்பது விதி. ஒரு பெண், தன்னைப் பெண் என்று உணர்வதற்கு முன்பே அவள் ஒருவனின் மனைவியாக்கப்பட்டாள். விருப்பம் ஒத்த இணையரே வாழ்வில் இணைவர். பெண் தான் விரும்பியவனும் தன்னை விரும்புவனுமான ஆணையே களவு முறையிலோ அன்றிக் கற்பு முறையிலோ துணைவனாக ஏற்பாள். அதனால்தான் ஆரியரின் காந்தர்வ மணமுறை ஓரளவு தமிழர் மணமுறையோடு ஒத்துள்ளது என்கிறார் தொல்காப்பியர். தமிழரின் மணமுறைகளின் வளர்ச்சி வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்ப அமைந்தது.

முடிவுரை

அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் சமுதாய மாற்றம், வீறுகொண்ட சமுதாயம் அமைதல் போன்றவை அடிக்கருத்தாக அமைந்துள்ளன. மக்களால் தோன்றும் புரட்சி, முதலாளித்துவம் ஒழிந்து மக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடுதல், மக்களைக் கவனிக்காத அரசியல்வாதிகள் குறித்த மக்களின் மனமாற்றம், நீதித்துறையில் நீதியை நிலைநாட்ட நீதிபதி வக்கீலாகும் நிலை போன்ற மாற்றங்கள் அண்ணாவின் படைப்புகளில் காட்டப்பட்டுள்ளன.

துணைநூற்பட்டியல்

1.அண்ணா பரிமளம் (தொ.ஆ), பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி, ப.888
2.இரா.சேது, அண்ணாவின் படைப்புத்திறன், ப.74
3.திரு.வி.க, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முதல் தொகுதி), பக்.145-146
4.சுரதா, தேன்மழை, ப.87
5.அறிஞர் அண்ணா, வேலைக்காரி, ப.95

*****

கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
Sweetselva87@gmail.com

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க