எம் கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

 

ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

அதிரூப சுந்தரியுன் அழகுமிகு புன்னகை
நதியாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்குதம்மா

மதி சூடிய மாதா, மலை மகளே மா தேவியே
மதி மயக்கமின்றி நின் பாதமென் மதி பதியம்மா

வேதியர் வேத கோஷமொடு விழாக் கோல
வீதியுலாக் காட்சியுன் திருவருள் செப்புதம்மா

சந்நிதியில் நினைப் போற்று மெமை

நிதியாக நீயே வந்தருள்வா யம்மா

விதியெம் வாழ்வில் விளையாடுங் காலத்தே
ஓதிடுமுன் அபய ஒலி ஓங்கார மாகுதம்மா

சதி சூழ் பூவுலகில் சந்ததமுனை சிந்தித்தால்
விதியும் மாறிடும் வேதனையும் மறைந்திடுமே

உதித்த காலம் முதல் உதிரும் வேளை வரை
பதித்திட அருளிடு நின் பதமலரடி நெஞ்சமதை

பதியின் பாதி யுன் பத மலர் போற்று மெம்
கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

38/2018
நாகை வை. ராமஸ்வாமி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க