நிர்மலா ராகவன்

 

வாழ்க்கை எனும் மிதிவண்டி

“சௌக்கியமா?” ஒருவரைச் சந்திக்கும்போது கேட்கப்படுகிற உபசார வார்த்தை.

சிலர் புன்சிரிப்புடன் தலையாட்டுவார்கள். வேறு சிலர், “என்னமோ இருக்கேன்!” என்று வேண்டாவெறுப்புடன் பதிலளிக்க, ”ஏனடா இவரைக் கேட்டோம்!’ என்று ஆகிவிடும்.

இவர்கள் அனைவரும் உடலைத்தான் குறிப்பிடுகிறார்கள். உண்மையில், பிறருடன் சுமுகமாகப் பழகுவதும், திருப்தியும்கூட ஆரோக்கியத்தில் அடங்கும். மனநிறைவு இருந்தால் ஆரோக்கியமும் தொடர்ந்து வருமே!

“உனக்கு ரொம்பத்தான் சுயநலம். உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறாய்!” என்று பழிப்பவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. நம்மை நாமே சரிவர கவனித்துக் கொள்ளாவிட்டால், பின் யாரை நோவது? அத்துடன், நாம் நன்றாக இருந்தால்தானே பிறரது நலனில் அக்கறை செலுத்தமுடியும்? தெளிவான, உறுதியான மனத்திற்கு தன்னைத்தானே கவனித்துக்கொள்வது முக்கியமில்லையா!

ஒருவரது சிந்தனை, கூறும் வார்த்தைகள், நடத்தை எல்லாமே செம்மையாக இருக்கவேண்டும். நாம் சொல்வதால் பிறரும் மகிழ்ந்து சிரிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

ஆக்ககரமான சிந்தனை, அடுத்த நாள் செய்யவேண்டியதைப்பற்றிய திட்டங்கள் ஆகியவை உடல், மனம் இரண்டையும் உற்சாகப்படுத்த வல்லவை.

பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் சிந்திக்கிறார்கள், `நாளைக்கு ரவி என் சிநேகிதனாக இருப்பானோ?’ என்று. இருவரும் இன்று நட்புடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இரவு தூங்கப்போகுமுன், நாளையைப்பற்றிய கவலையும் எழாமல் இராது.

நமக்கும் இதுபோல்தான் வேண்டாத கவலைகள் எழுகின்றன. நமக்கு நடப்பது 20% என்றால், அவை நல்லபடியாக நடக்குமோ என்றெல்லாம் நாம் அநாவசியமாக யோசிப்பது 80%!

கதை

“நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன், ஆன்ட்டி” என்று குறைப்பட்டாள் சுகந்தா. அவளுக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

“அதில் என்ன தவறு? உனக்கு மகிழ்ச்சியுடன் பெரிதாகச் சிரிக்கவும் தெரிந்திருக்கிறது, பிறருக்காக வருந்தவும் முடிகிறது. இரண்டும் இல்லாமல், ஜடம் மாதிரி இருக்கப்போகிறாயா?”

அவள் முகம் மலர்ந்தது. “அதானே!” என்றாள், நிம்மதியுடன்.

சிறு வயதில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கும் சுகந்தா அவைகளால் தளர்ந்துவிடாது, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்திருக்கிறாள். குடித்துவிட்டு முகத்தில் கத்தியால் கீறிய தந்தை, அருமையாகப் பேசிப் பேசி, வேலைக்காரிபோல் நடத்திய உறவினள், சிறு வயதிலேயே பாலியல் வதை! அவள் அனுபவிக்காத துயரமே கிடையாது எனலாம்.

கடந்துபோனதையே எண்ணி வருந்தி, அல்லது `மீண்டும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ!’ என்று பயப்படாது, உறுதியுடன் எல்லாவற்றையும் ஒதுக்கி நடந்திருக்கிறாள் சுகந்தா.

“வாழ்க்கை என்பது மிதிவண்டி போன்றது. கீழே விழாமலிருக்க நகர்ந்தபடி இருத்தல் அவசியம்,” என்று சரியாகத்தான் சொல்லிப்போனார் ஐன்ஸ்டீன்.

ஆரோக்கியம் கெட்டபின்தான் அதன் அருமை புரிகிறது.

“மனுசனாப் பிறந்தா, என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு!” என்று ஒரு மாது சலித்துக்கொண்டதைக் கேட்டேன், அண்மையில். அறுபது வயதில் உடல் நலம் குன்றிப்போக, நாள் தவறாது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததில் எழுந்த சலிப்பு அது.

கவலையை அகற்ற ஏதேதோ வழிகள். `எனக்கு ஏதாவது கவலை வந்தால், சாப்பிட்டால் அது குறைந்துவிடும்!’ என்பார்கள் சிலர்.

வருத்தத்திற்கு மாற்றுமருந்து உணவா! எடை கூடிக்கொண்டே போகிறதே என்ற கவலையில் இன்னும் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாதா? உடற்பயிற்சி அதைவிட நல்ல பலனளிக்குமே!

ஆனால், எல்லாருமே சாப்பிடுவதில் நிறைவு கண்டுவிடுவதில்லை.

கதை

வேலை நிமித்தம் மலேசியாவிற்கு வந்திருந்தவள் அனிதா. “என் ஒருத்திக்காக என்ன சமைப்பது! தினமும் கடையில்தான். இல்லாவிட்டால், நூடுல்ஸ்! எனக்குக் கறிகாய்கள் பிடிக்காது!” என்றாள்.

அவள் கொள்ளை அழகு. இப்போது உடல் இளைத்து, சக்தி குன்றி இருந்தவளைப் பார்த்து, “தினமும் என்ன சாப்பிடுகிறாய்?” என்று முகத்தைச் சுளித்தபடி நான் கேட்ட கேள்விக்குப் பதில் அது.

“உன் கணவர் வீட்டில் சாப்பிட மாட்டாரா?” என்று மேலும் துளைத்தேன்.

“நல்லவேளை, அவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துவிட்டது! இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்!”

திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள்ளேயே இல்வாழ்க்கை அலுத்துவிட்டதா!

“அவர் கூட இருந்தவரை, நான் வெளியில் எங்கும் போகக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. அவருக்கு நண்பர்களே கிடையாது. நானும் அப்படி இருக்க முடியுமா?” என்று பொரிந்தாள். “வேலை முடியும் சமயம் வந்துவிடுவார், என்னை அழைத்துப்போக. எப்பவும் வீட்டிலேயேதான்! வீட்டிலேயேதான்!” அனிதா அழாதகுறை.

மெல்லச் சிரித்தேன். “நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான்! இப்போது என்ன செய்கிறாய்?”

“சிநேகிதிகளுடன் ஊர் சுற்றுகிறேன். பேசிக்கொண்டே வெளியில் சாப்பிடுவோம்! தினமும் கூப்பிட்டுக் கேட்கிறார், இன்று என்ன செய்தாய் என்று!”

கசப்பான மருந்துகள் பலனளிப்பதைப்போல, நம்மை வெகுவாகச் சோதிக்கும் அனுபவங்கள்தாம் நம்மைப் புடம் போடும். அவைகளிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதில்தான் நம் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.

“வாழ்க்கை எளிதாக இருக்கவேண்டும் என்று கடவுளைத் துதிக்காதே. கடினமானதைத் தாங்கும் சக்தி வேண்டும் என்று வேண்டிக்கொள்!” (ப்ரூஸ் லீ)

திருமணத்திற்குப்பின் சில பெண்களின் உடல்நிலை கெட்டுவிடும். பிறந்தகத்தில் கிடைத்த சலுகையை புக்ககத்தில் எதிர்பார்க்க முடியுமா!

புதிதாக ஓர் உத்தியோகத்தில் அமர்ந்த பின்னரும் வித்தியாசமான நபர்களுடன் பழக முதலில் கஷ்டமாக இருக்கும். அவர்களால் உண்டான பாதிப்பையே நினைத்துக்கொண்டிராது, நமக்குப் பிடித்ததை, நம்மால் இயன்றதை, சரிவர செய்துவந்தால் நாளடைவில் புதிய சூழல் பழகிப்போகும்.

இரு பெண்கள், ஒரே கதை

சுவேதா வசதி குறைந்த பெற்றோருக்கு மூன்றாவது மகள். நாளேட்டில் வந்த `மணமகள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கணவர் அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருந்தார். வரதட்சணையும் கேட்கவில்லை.

வேறு என்ன தடை! அதிகம் விசாரிக்காமல் அக்கல்யாணத்தை முடித்தனர்.

சுவேதாவுக்கு வாய்த்தவரோ மனநிலை சரியில்லாதவர். உத்தியோகம் பார்க்கமுடியுமே தவிர, பிறருடன் பழகத் தெரியாது. எப்போதும் தனிமைதான். `நீ பைத்தியம்!’ என்று வார்த்தையாலேயே மனைவியை வதைத்தார்.

கணவரை விட்டுப்போவது பெற்றோருக்கு வருத்தத்தைத் தரும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் சுவேதா.

அவருக்குச் சரியாக எதிர்த்து வாதாடினால் தானும் அவரைப்போலவே ஆகிவிடும் அபாயம் என்று புரிந்து, அவருக்கு நேர் எதிராக இருக்க ஆரம்பித்தாள். அதாவது, அமைதியைத் தன் ஆயுதமாக ஆக்கிக்கொண்டாள். அவர் என்ன ஏசினாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். `நான் அவருடைய ஓர் அங்கமல்ல. எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது!’ என்று துணிந்தாள். சிரிப்புடன் வளையவந்தாள். ஆரோக்கியம் குன்றவில்லை.

கிட்டத்தட்ட அதேபோன்ற ஒருவரை மணந்த கமலா படித்தவள். பரம சாது. தனக்கென எதைக் கேட்கவும் அவளுக்கு உரிமை இல்லை. உத்தியோகம் பார்க்கக்கூடாது, பிறருடன் பழகவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். `கணவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!’ என்று நம்பியவள் தானும் அவரைப்போலவே பித்துப்பிடித்தவளாக ஆனாள்.

இயற்கை மருத்துவம்

நமக்கு ஏதாவது உடற்கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரைத் தேடிப்போகிறோம். அவசியமே இல்லை. “ஆறு சிறந்த மருத்துவர்கள்: நீர், காற்று, சூரிய ஒளி, சத்தான உணவு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி,” என்கிறார் திரு.அனுபவசாலி.

ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை செய்யும்போதும், அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து குருட்டு யோசனை செய்யும்போதும் மனம் தளர்ந்து, வேண்டாத கவலைகள் சூழ்ந்துகொள்கின்றன.

“ஆச்சு! ரிடையர் ஆக இன்னும் பதினைஞ்சே வருஷம்தான் இருக்கு!” என்ற அற்ப திருப்தி அடைந்துவிடுவார்கள் சிலர். வாழ்க்கையில் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுபோல் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

எந்த வயதானாலும், ஒத்த மனதினருடன் பழகுவது, இசை, நடனம், படிப்பது என்று பிடித்தது எதிலாவது மனத்தைச் செலுத்தினால் புத்துணர்ச்சி பிறக்குமே!

நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிறரது கட்டாயம் நம்மைப் பாதிக்க விடலாமா?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.