-கி. ரேவதி

முன்னுரை:

இடையர் சமூகப் பிரிவின் ஓர் இனக் குழுவைக் கதையாடலாகக் கொண்ட இந்நாவல் சாதாரண சம்பவ விவரிப்புகளின் ஊடாக இனத்திற்குரிய அடையாளங்களான நாடோடியம், இருப்பிடம், தொழில்முறை, பழமொழி கதை, பாடல் போன்ற வழக்காறுகள், அவர்களுக்குரிய நம்பிக்கை, சடங்கு, தெய்வம், வாழ்க்கை முறைமைகளான திருமணமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறைமை போன்றவை குறித்த அழுத்தமான பதிவாக வாசிப்பை முன்நகர்த்துகிறது.

விளிம்புநிலை மக்கள்:-

பெண்கள், உழைக்கும் களங்கள், இயற்கைத் தொடர்பு இவற்றை வட்டார மொழி நடையில் யதார்த்தத்துடன் கீதாரி நாவல் அமைத்துள்ளது. ஒரு சமூகப் பிரிவினரின் வாழ்வியல் முறைமைகளை வட்டார மொழி நடையில் தொடர்ந்து அடையாளப்படுத்தும் ஆளுமையாக விளங்குபவர் சு. தமிழ்ச்செல்வி. கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் அமைந்தன அவர் படைப்புகள். ‘இடையர் தலைவன்’ என்பது வட மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து நாடோடியாக வாழும்முறையை நடத்தும் விளிம்புநிலை இடையர் சங்கத்தைக் கதைப் பொருளாகக் கொண்டுள்ளது.

விளிம்பு நிலையிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் நிலையான வாழ்க்கை முறைமையுடன் கூடிய நிலவுடைமை, பொருளாதாரம், சமூக மதிப்பீடு போன்ற புறக்காரணிகளின் அடிப்படையில் தங்களை மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது இன்றளவில் காணப்படுகிறது.

சமுதாய நிலை:-

ஒவ்வோர் இனக்குழுவிற்கும் சமூகப்பிரிவு, வாழிடம், தொழில்முறை, இயற்கையோடு உள்ள தொடர்பு ஆகியவை சார்ந்து நம்பிக்கைகளும், சடங்குகளும் வெவ்வேறானவையாக இருக்கும். இடையர்குல இனக்குழுவிடம் தொழில்முறை சார்ந்து சில நம்பிக்கைகள் இருப்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. ஆடுகள் மேய்க்கும்பொழுது முயல் சிதறி ஓடுவது தீய சகுனமாக நம்பப்படுகிறது. (ப-127)

சடங்குகள்:-

பொங்கலன்று ஆடுகளைப் பெட்டை கிடா என்று தனித்தனியாக அலங்கரித்து பின் தளுவை போடும் இடத்தில் தெப்பம் கட்டி ஆட்டுக்குட்டியின் காதை அறுத்துச் சடங்கு செய்வது (ப-114) போன்ற சடங்கு முறைமைகளும் கதையோட்டத்தின் ஊடே நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கைகள் சடங்குகள் நிறுவனமயமாக்கப்பட்ட சமயப் பின்புலத்தில் இல்லாமல் இனத்திற்கேயுரிய, இயற்கையோடு இயைந்த, நாட்டார் தன்மைக் கொண்டனவாக உள்ளன. உணவுமுறையைப் பார்க்கும் பொழுது நெல்லரிசி சோறு, குழம்பு, புலம்பெயர் இடத்தில் கிடைக்கக்கூடிய தானிய வகைகள் போன்றவையும் ஆடுகள் இறந்தால் அதன் கறியை வற்றல் போட்டு வைத்துக் கொண்டு உண்பதும், மிளகாய் சாந்து அரைத்து வைத்துக் கொள்வதுமான உணவுமுறைகள் கூறப்படுகின்றன. புழங்கு பொருட்கள் பெரும்பாலும் மண்ணாலான பானை, சட்டிகள், தொழில்முறை நாடோடியாக சார்ந்து அம்மி முதலிய கல்லாலான புழங்கு பொருட்கள் விலக்கப்படுவதையும் (ப-119) இந்நாவல் பதிவு செய்கிறது.

திருமணச் சடங்கு:

திருமண முறையைப் பார்க்கும்போது சித்தப்பா முறையில் திருமணம் செய்துகொள்ளுதல் (ப-98), அண்ணன் இறந்தால் அவன் மனைவியைத் தம்பி திருமணம் செய்துகொள்ளும் முறையும் (ப-134) திருமணச் சடங்கில் மாப்பிள்ளைக்குப் பதிலாக அவன் ஆடு மேய்த்த தடிக்கம்பை வைத்து திருமணம் செய்யும் போக்கையும் (ப-101) திருமணத்திற்குச் சீதனமாக ஆடுகளும் (ப-52) பாத்திரப் பண்டங்களுடன் மாளிகை சாமான்களையும் சீதனமாய்க் கொடுப்பதும் ஆட்டுக்கார இடையர்களின் வழக்கமாயிருந்தன என்பதை இந்நாவல் விளக்குகிறது. இது தொழிலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்கும் தன்மையைக் காட்டுகிறது.

இறை நம்பிக்கை:-

இடையர்கள் வணங்கும் தெய்வங்களாக நல்லமுனி, நெறஞ்சாயி, மகமாயி, மாரியம்மன் போன்ற நாட்டார் மரபுசார்ந்த தெய்வங்கள் கூறுகின்றன. இவை மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகனை வணங்குவது நிறுவனமயமாக்கப்பட்ட ஸ்கந்தன் மரபும் நாட்டார் தெய்வம் சார்ந்த வேலன் மரபும் கலந்த நிலையைக் காட்டுகிறது.

தொழில்:-

இடையர் சமூகத்தை அடையாளப்படுத்தும் இந்நாவல் அச்சமூகத்தின் தொழில்முறை குறித்த நாட்டார் வழக்காற்றுக் கதையாடல் ஒன்றை முன்வைக்கிறது. இக்கதையில் இடையர்கள் ஆடுமேய்த்து நாடோடிகளாகப் பிழைப்பதற்கான வழக்காற்றுக் கதையாடல் கூறப்படுகிறது. தொழில்களாக ஆடு மேய்த்தல், இடை கட்டுதல் போன்றவை கூறப்பட்டுள்ளன. தொழில் முறையில் ஆண், பெண் வேறுபாடில்லை. ஆடு இல்லாத இடையர்கள் ஆடு வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு (ஓராண்டிற்குப் பிறகு ஓர் ஆட்டிற்கு இரண்டு ஆடாகத் திருப்பித் தருவதாகக் கூறி) வாங்கி அதன் புழுக்கைகளை விற்று பிழைப்பை நடத்துகின்றனர்.

இவற்றைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை. கேட்டாலும் தெரியாது என்பது மாதிரியான விடைகள்தாம் வரும் (பக்.165) இவர்கள் தொழில் ரீதியாக நிலவுடைமைச் சமூகத்தினரை அண்டி ஆதரவுச் சமூகமாகத் தங்களுடைய வாழ்வை முன்நகர்த்தக் கூடியவர்களாக உள்ளனர். வழக்காறுகளாகப் பழமொழி, கதை, பாடல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. நாவல்முழுக்கத் தங்கள் சாதியம் குறித்த பழமொழிகள் (ப.132) பொதுவான வாழ்முறை குறித்த பழமொழிகள் (பக்.137) எனப் பல்வேறு பழமொழிகள் கூறப்பட்டுள்ளன. கிடைகட்டும் பொழுது தூக்கம் வராமல் இருக்கப் பாடும் தெம்மாங்குப் பாடல் (பக்.208) சக்களத்தி சார்ந்த பாடல்களும் இயல்பாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அவர்களுடைய கலையாகவோ பொழுதுபோக்காகவோ கொள்ள முடியாது.

இடையர்களின் கதை:-

இடையர்கள் ஏன் மழையிலும் தண்ணீரிலும் கிடந்து வருத்தப்படுகிறார்கள் என்பது இந்நாவலின் வழியாக அறிய முடிகின்றது. அவர்களின் கதையை கரிச்சா வாயிலாக வெள்ளைச்சாமி அறிந்து கொள்கிறான். மழைபெய்து வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது ஓர் ஆட்டுக்காரன் மட்டும் தனியாக காட்டிற்குள் தங்கியிருந்தான். ஆட்டிற்குத் தண்ணீரிலேயே கிடையைப் போட்டு வேலியில் படர்ந்து இருந்த பிரண்டை கொடிகளை எடுத்து மெத்தையாக விரித்துக் கொண்டான்.

தென்னைக் கீற்றால் பின்னிய கீற்றை மேலே வைத்துச் சுகமாகத் தூங்கியிருக்கிறான். அவ்வாறு தூங்கும்போது என்ன சுகமாக இருக்கிறது. தன் மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். இந்த சுகமானது ஆண்டவனுக்குக் கூட கிடைத்திருக்காது என்று எண்ணும்போது பார்வதியும் பரமசிவமும் படி அளப்பதற்காக வரும்போது அவன் கூறியதை கேட்ட இவர்கள் நம்மைவிட நன்றாக இருக்கும் ஒருவனுக்கு நம்மால் என்னசெய்ய முடியும் என்று எண்ணி அவனை பார்க்காமல் நீ இப்படியே இரு என்று வரம் கொடுத்தார்களாம். அதனால் தான் ஆடு மேய்ப்பவர்கள் இன்னும் மழையிலும் தண்ணீரிலும் இருந்து வேதனைப்படுகிறார்கள். ஆடு மேய்ப்பவர்களின் கதையானது பழைய மரபுபோல் பின்பற்றப்படுகிறது. இன்றளவும் அவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது.

இடையர்களின் பிரிவுகள்:-

தமிழ்ச் சமூகத்தில் நாடோடி வாழ்முறை சங்ககாலம் தொட்டுத் தொடர்ந்த ஒன்றாக, காலச் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிலைகளில் தம்மைத் தகவமைத்துக் கொள்பவையாக உள்ளன.

“நிலையான ஆதரவுச் சமூகங்களுக்கிடையில் இடம்விட்டு இடம் செல்லும் நாடோடிச் சமூகமானது வெவ்வேறு பங்கு பணியாற்றும் மிதவைச் சமூகமாக இணைப்புச் சமூகமாக இயங்கி வருகின்றது”என்ற பக்தவத்சல பாரதியின் நாடோடிச் சமூகம் குறித்த கருத்தும் நினைவுகூறத் தக்கது.

தற்காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்ட இடையர் சமூக ஒரு பிரிவினரின் வாழ்வியலை இயல்பாகப் பதிவுசெய்யும் இந்நாவல் அவர்களுக்கென நிலையான இருப்பிடம் எதையும் பதிவு செய்யவில்லை ‘மேமங்கலம்’ என்ற ஊர் சொந்த ஊராக இருந்தாலும் தொழில்முறை சார்ந்து புலம்பெயர் வாழ்க்கையே மேற்கொள்கின்றனர். மாவட்டங்கள் விட்டு மாவட்டங்களுக்கும் மாவட்டத்திலே ஊர்விட்டு ஊர்களுக்கும் சென்று நிலையான இருப்பிடம் இல்லாமல் வாழிடம் சார்ந்து கூண்டோ, வளசையையோ அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான எண்ணம் நிலவுவதையும் நாவல் பதிவுசெய்கிறது. இவை காலச்சூழல் பொருளாதாரம் இவற்றின் பின்புலத்தில் நடுத்தர வர்க்கச் சிந்தனை தோற்றம் கொள்வதை உணர்த்துகின்றது. (பக்.120)

இடையர்கள் கோனார், நைனார், நம்பியார், பிள்ளை, மந்திரி, கரையாளர், யாதவர் எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றனர். இப்பெயர்கள் குலப்பிரிவு, வட்டாரம், பொருளாதாரம், சமூக மதிப்பீடு சார்ந்து உருவானவையாகக் கொள்ளலாம். இடையர் சமூகத்தில் பெரும்பாலான பிரிவுகள் இரட்டைத் தொழில்முறை கொண்ட நிலவுடைமைச் சமூகமாக, வைணவ சமயத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்களாக, யாதவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆடு மேய்ப்பவர்களின் சிக்கல்கள்:-

ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போலப் பிழைப்பு நடத்தும் ஆடு மேய்ப்பவர்களின் நிலையானது ஊமைகளாகவெ எங்கும் இருக்கிறார்கள். கோபம் அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒருபோதும் நினைப்பதேயில்லை. கூலியைக் கூப்பிட்டு இவர்களை எவ்வளவுதான் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். எவ்வளவு கீழ்த்தரமாக திட்டினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு வாய்திறக்காமல் போகும் இயல்புடையவர்களாகவும் இவர்களின் இந்தப் பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாக இருக்கும். “யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக போன வருசம் மொத வருசத்துல அவுக கொல்ல பயிறு பச்சியில எங்க ஆடுக மேஞ்சிருக்கும். அந்த கோவத்துல அடிக்கிறாக. அவுக அடிக்கிறது ஞாயந்தானே? நம்மமேல தப்புருக்கு, பட்டுக்கிட்டுத்தானே போவனும்” (கீ.ப.111)

என்று மிக இயல்பாக பதில் கூறுவார்கள் இவ்வாறு இடையர்களின் வாழ்க்கை நிலையானது படம்பிடித்து காட்டப்படுகிறது.

முடிவுரை:

விளிம்புநிலை இடையர் சமூகத்தினருள் ஒரு குழுவை மட்டும் அடையாளப்படுத்தும் இந்நாவல், அவர்களின் சமூக உறவுகள், மதிப்பீடுகள் பண்பாட்டு அசைவியக்கங்கள் சதா தங்கள் வாழ்வைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் தொழில் முறைமைகள், நம்பிக்கை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் சாதாரணச் சம்பவ விவரிப்புகளின் ஊடாக வலி, துயரம், மரணம் இவற்றின் பின்னணியில் பதிவு செய்கிறது.

துணை நூல்கள்:-

  1. எனது படைப்பு மொழியும் அனுபவங்களும், ப.24 கவிதாசரன் இதழ் டிசம்பர் -2006.
  2. தமிழ்ச்செல்வி.சு கீதாரி நியு சென்சுரி புக் ஹவுஸ் சென்னை 2010

*****

கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி),
விழுப்புரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கீதாரி நாவலில் விளிம்புநிலை மக்கள்

  1. title should be change as keethari navalil idaiyar valviyal panpadu. otherwise article very good. valthukkal

  2. சிறந்த நாவல் என்று தான் கூறுவேன்.
    இவர்களுக்கும் உணர்வு உண்டு என்பதை அனைவரும் புரிஞ்சுக்கணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *