மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

வெள்ளம் ஒருபக்கம் விபத்துகள் ஒருபக்கம்
தெள்ளுதமிழ் நல்லறிஞர் பிரிவுத்துயர் ஒருபக்கம்
நல்லநட்பு என்றுசொல்லி நம்பவைத்த நாடுகளும்
நரிகளாய் மாறிநின்று நாசம்செய்யும் ஒருபக்கம்
உள்ளூரில் அரசியலார் ஊழல்கொள்ளை ஒருபக்கம்
உயர்கல்வி உடையாரின் உன்மத்தம் ஒருபக்கம்
நல்லபல இருக்கின்ற நற்பாரத நாட்டினிலே
தொல்லை எலாம் தொலைந்து நிற்க
சுதந்திர நாள் வேண்டி நிற்போம் !

பாரதத்தாய் மடிமீது பலதலைவர் இருந்தார்கள்
பாரதத்தாய் துயர்துடைக்க பாடுபட்டார் பலவகையில்
பாரதத்தாய் கண்ணீரை பார்ப்பதற்கு விரும்பவில்லை
பாரதத்தாய் முகமலர்ச்சி பார்ப்பதற்கே விரும்பிநின்றார்
பாரதத்தாய் துயர்படவே பலரிப்போ இருக்கின்றார்
பாரதத்தாய் பக்குவத்தை பார்த்துவிட மறுக்கின்றார்
பாரதத்தாய் பெருமைதனை பார்முழுக்க பார்ப்பதற்கு
பாரதத்தின் மக்களெலாம் காத்துநிற்போம் சுதந்திரத்தை !

மகான்களின் ஆசிபெற்று மகத்துவத்தைக் கண்டநாடு
மாபெருந் தத்துவங்கள் வாழ்வுக்கு தந்தநாடு
இலக்கியங்கள் இலக்கணங்கள் இங்கிதங்கள் சொன்னநாடு
இமயம்முதல் குமரிவரை எல்லையினை கொண்டநாடு
சிற்பமொடு ஓவியமும் சிறந்தபல கோவில்களும்
எத்திசையில் பார்த்தாலும் எங்குமே நிறைந்தநாடு
இத்தனையும் நிறைந்துநிற்கும் ஏற்றமிகு பாரதத்தின்
எழிலான சுதந்திரத்தை எல்லோரும் போற்றிநிற்போம் !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க