கருத்தலெப்பை, மீன்குகை வாசிகள் நாவல்கள் புலப்படுத்தும் – சாதி

-ஜா. கிருஷ்ணாகுமாரி

முன்னுரை

கீரனூர் ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை, மீன்குகை வாசிகள் நாவல்களில் ராவுத்தர், லெப்பை, சாதிய  ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை இக்கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியா போன்ற பல் சமயத்தவர் வாழும் நாட்டில் சாதியப் பிரச்சனை மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது.  வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான மோதல்களும் ஒரே மதத்தைச் சேர்ந்த வெவ்வேறு சாதியினரின் மோதல்களும் சமூக நல்லிணக்கத்தைக் கலங்கடித்து வன்முறைகளைத் தூண்டிவிடுகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நடைப்பெற்ற குஜராத் கலவரம், பீஹார் கலவரம், மாலைகானி ஏற்படுத்திய கலவரங்கள் பேசப்படுகின்றன. உலக அளவில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்து ஷியா, ஷன்னி போன்ற பிரிவுகள் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மோதிக்கொள்வதைச் சாதியப் பிரச்சனைகளுக்கு உதராணமாக நாம் கருத்தில் கொள்ளலாம்.

சாதியப் பிரச்சனைகள்

தமிழகத்தில் ஒரே மதத்தவரைப் பிறந்த குலம், பின்பற்றப்படும் கொள்கை, அவர் சார்ந்து இயங்கும் கோட்பாடு, அவர் மேற்கொண்டுவரும் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காணமுடிகிறது.  “ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களை நாம் மேல்தட்டு பணக்காரப் பிரிவினர், மத்தியதர வர்க்கத்தினர், வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள அடித்தட்டுப் பிரிவினர் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.” என்று பொருளியல் சார்ந்த பகுப்பியலை கௌரி குறிப்பிடுகிறார்.” (கௌரி. ஜி. நாகராஜன், சிறுகதைகளில் சமுதாயப் பார்வை, ப.26)

தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுகத்தில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்னும் மூன்று பெரும் பிரிவினர் வாழந்து வருகின்றனர்.  இவர்கள் செய்யும் தொழில் மற்றும் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

ராவுத்தர்

தொன்மைக் காலங்களில் தமிழக இஸ்லாமிய அரபுகளுக்கு ராவுத்தர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.  நாளடைவில் குதிரைவணிகம் மட்டுமல்லாமல், அரசு சேவையில் குதிரை வீரராகவும், குதிரை அணியின் தளபதியாகவும் இந்தச் சொல் பயன்பட்டுள்ளது.  திருப்பெருந்துறையில் குதிரைவணிகராக வந்து,  தனது துயர்களைந்த இறைவன். ‘துய்ய பேருலகிற்கெல்லாம் துலங்கிய ராவுத்தராயன்’ என வாயார வாழ்த்துகிறார் வாதவூர் அடிகள்.  இராமய்யன் அம்மானை குதிரையணி தளபதியை ‘ராவுத்த கர்த்தன்’ எனக் குறிப்பிடுகிறது.”  ராவுத்தராயன், ‘ராவுத்தகர்த்தன்’ என்ற வழக்குகள் இஸ்லாமியத் தமிழர்களைச் சுட்டுவதற்காக எழுந்த சொற்களாகும், இந்தச் சொற்களுக்கான வேர், எந்த மொழியில் ஒட்டியுள்ளது என்பது ஆய்வுக்குரியதாகும்.” (எஸ்.எம். கமால், தமிழகத்தில் முஸ்லிம்கள், ப.32.)

பெரும்பாலான முஸ்லிம்கள், இன்றும் ‘ராவுத்தர்’ என்ற விகுதியைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வதுபோலத் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழிபேசும்  நாயக்கர்களில் ஒரு சிறுபிரிவினர் தங்கள் பெயருடன் ‘ரவுத்’ என்ற விகுதியையும் இணைத்து வழங்குகின்றனர்.  “தென்னகத்தில் நிலவும் சாதிகளையும் குடிகளையும் முழுமையாக ஆய்வுசெய்து பல தொகுதிகளாகத் தமது ஆய்வை ’தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்னும் நூலாக எழுதிய எட்கார் தர்ஸ்டன், ராவுத்தர் என்பவர்கள் இஸ்லாமிய மக்களான லெப்பை, மரைக்காயர் மற்றும்  சோனகர் பயன்படுத்தும் விருதுப்பெயர் என்றே குறிப்பிட்டுள்ளார்.” (மேலது. ப.33)

தங்களுடைய தொன்மையை இவ்விதம் நினைவுகூறும் வகையில் தமிழக ராவுத்தர் இன்றும் மணவிழாக்களின்பொழுது,  மணமகனை நன்கு அலங்கரித்துக் குதிரை மீது ஏற்றிவைத்து,  மணமகள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.  இந்தப் பழக்கம், தமிழக  முஸ்லிம்களிடையே நானூறு  ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்து வந்தது என்பது பெரும்புலவர் உமறுவின் பாடல்களில் இருந்து புலப்படுகிறது.  இறைமறையை வெளிப்படுத்தி விவரிக்கும் சீறாப்புராண காவியம், தமிழ்நாட்டில் இயற்கைப் பின்னணி, பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகப் புனையப்பட்டுள்ளது. மணமகனாகிய முஹம்மமுநபி (ஸல்) அவர்கள் மணக்கோலத்துடன் பரியில் அமர்ந்து பவனியாகப் மணமகள் இல்லம் சென்றதை.

“தாவியபரிமேற் சேனைத் தளத் தொடும் விதிவாயின்
  மேவியவள்ளலார் தம் மெய் எழில் நோக்கி-
  கடுநடைப் புரவமேலாய் கவிகைமாநிழற்றவந்த
  வடிவடைமுகம்மதின் தன் வனப்பலால்  வனப்புமில்லை-
  திரையின்றி பிறந்மொழியார் செழுமனித் தீபங்களேந்த      இருபுறநெருங்கிஅயினிநீர் கழற்றவெண்ணில் ஆலத்திஎடுப்ப  பாவையின் மறையில் குரவையுஞ் சிலம்பபரியை  விரட்டிரங்கின என்றே” எனவும் அவர் பாடியுள்ளார்.” (மேலது. ப.33).

மரைக்காயர், இராவுத்தர் என்பது அவர்கள் செய்துவந்த தொழில்களின்  அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருக்கிறது.  “தமிழ் மொழியில் இராவுத்தர் என்றால் குதிரைஓட்டி என்று பொருள்.  குதிரை வணிகம்  செய்துவந்தவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர்.  மரைக்காயர் என்றால் கப்பல்மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.  அரபுமொழியில் ‘ரா. இத் என்றால் குதிரைவீரன் என்று பொருள்.  வடமொழியில் ‘ராஹீத்’ என்றும் தெலுங்கில் ‘ராவுத்து’ என்றும் பொருள்.” (மேலது, ப.79).

கருத்தலெப்பை என்னும் நாவலில் இராவுத்தர்கள் பள்ளிவாசல்களில் லெப்பையர்களுக்கு உரிமை வழங்கப்படாமையை எடுத்துரைக்கிறார்.  “நிலத்துக்கும் இறை இல்லத்துக்கும்  இறை இல்லத்துக் என்னடா சம்பந்தம்? வெள்ளைக்காரனின் ஈனப்புத்தியை மிஞ்சிவிட்டானடா ராவுத்தன். ஊருக்குள் முணுமுணுப்புக் கிளம்பாமலில்லை, முணுமுணுக்கிற வாய்க்கு எதிர்த்தும் கேட்கத் துப்பில்லை.  இது முழுக்கமுழுக்க ராவுத்தர்கள் சேர்த்துக்கட்டிய பள்ளிவாசல் லெப்பையோ மீன்காரனோ, சொந்தம் கொண்டாடமுடியாது” (கீரானூர் ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை நாவல்கள் ப.,44) என்று ராவுத்தர்கள் கூறும் செய்தி விளிம்பு நிலைகளான லெப்பையர்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

லெப்பை என்ற சொல் தமிழகத்திலும் எல்லைப்பகுதிகளிலும் பரந்து வாழும் இஸ்லாமியரைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாக உள்ளது.  அரபுத் தாயகத்திலிருந்து வந்து நாளடைவில் தமிழ் முஸ்லிம்களாக மாறிய பொழுதும், அவர்களுடைய தலையாயக் கடமை ஓதுவதும் பிறருக்கு ஓதுவித்து  உணர்த்துவதுமே என்றாலும்,  இவர்களுடைய வாழ்க்கைநிலை, நெசவாளியாக, விவசாயியாக, கடல் தொழிலாளியாக இருந்து வந்தது.  ஆனால் இவர்கள் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுவரை லெப்பைகள் என்ற பொதுப்பெயரிலேயே வழங்கப்பட்டனர்.

      சொல்லவேநால்வேதம் லெப்பைமார்கள்
      சொற்பெரியஉலகத்தில் கர்மிதன்னை
      மெல்லவேஆண்டவனைக் காட்டுமென்பார்
      மேதியினிற்  பணம்பொன்னுக் காசைவைத்து
      நல்லவேசொல்லியிட்டுப் பணம்பிடுங்கி
      நலமாகஉன்னையவரேய்பாரப்பா.
“உல்லவேநால்வேதம் காரணக்கு

      உண்மையுள்ள ஆண்டவனுக்கு மெய்யுமாமே”. 

(மு.முகம்மது உவைஸ், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, ப.127)

யாக்கோபு வகாரகளங்கு என்னும் வாத வைத்தியம் (300 – 79) என்னும் யாக்கோபு சித்தரின் பாடல் ஒன்றில் லெப்பைமார் என்ற சொல் இடம் பெற்றுள்ளதைக்  காணமுடிகிறது.

கருத்தலெப்பை நாவலில்,” நாலெப்பைக் கூட்டத்துல்ல பொறந்தவன்… நீங்க?  கருத்தலெப்பைக் கேட்டதும் அபுபக்கருக்கு மூக்குமேல் கோபம் வழிந்தது. செருப்புபிஞ்சிடும் நாயே… யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்ட? நா அக்மார்க் லெவக் கூட்டமாக்கும்.  ஒன்னமாதிரியில்லை…. “அவன் மேல பாய்ந்து வந்தார்.  கருத்தலெப்பை அவரை அதே வேகத்தில் முஷ்டியால் தள்ளிவிட்டான்.  நிலைகுலைந்து போனார் அபுபக்கர். அமீது பதற்றமாகிச் டேய் டேய் வேண்டாம். “என்று தன் இருப்பைவிட்டு எழுந்தார். “பெரியமனுஷனா இருக்குறியேன்னு விடுறேன்  இல்லேன்னா. “கருத்தலெப்பை கொக்கரித்தான்”  என்பதாக நாவலாசிரியர் முன்வைக்கும் செய்திகள் மூலம் இன உணர்வு மேலோங்கி இருப்பதைத் தெளிவுப்படுத்த முடிகிறது.” (கீரனூர் ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை, ப.45)

சாதிய ஏற்றத்தாழ்வு

இஸ்லாம் என்னும் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘பாய்’ என்னும் சொல்லை அதிக அளவு பயண்படுத்துகின்றனர்.  பாய் என்னும் உருது சொல்லுக்கு ‘சகோதரன்; என்னும் பொருள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளான தலீத் சமூகத்தவர் பெருமளவு இஸ்லாம் என்னும் சமயத்தை ஏற்றுக்கொண்டதாகத் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

வழிபாட்டு முறையிலும்,  தொழுகை நிலையிலும் வேறுபாடுகள் காணப்படாவிட்டாலும் இஸ்லாமியக்குள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வு மனோநிலை இருப்பதை மீன்குகைவாசிகள் நாவல் தெரிவிக்கிறது.  “என்னத்தான் பம்பாய்க்கு போய் தொழில் செய்து பணம் சம்பாதித்து ஒரு முஸ்லிம் பெண்ணை மணம் புரிந்திருந்தாலும் பள்ளி வாசலுக்குள் நுழையும் போதே “இவன் துருத்தி மகன் நாசுவன்” என்பார்கள்  பள்ளிவாசல் முத்தவல்லி இருக்கிறரே அவரில்லையானலும் அவருடைய பிரபலமான மலைத்தொப்பை முன்வந்து இவளை விரட்டும்.  “போ போ நாசுவனே! உனக்கென்ன இங்கே வேலை?” என்று திண்டுக்கல்லிலிருந்து வந்து குடியேறியிருக்கிற நிஜாம்தீன் தன் உருண்டு சிவந்த விழிகளால் “அம்பட்டையா! போய்விடு இங்கிருந்து” என்பார்.  வேண்டாம் விட்டுவிடலாமென்று இஸ்லாத்தை கைவிட்டால, நர்கீஸ் வேண்டுமானால் இஸ்லாம் வேண்டும். இஸ்லாம் வேண்டுமானால் தனக்கு அங்கு சம அந்தஸ்து வேண்டும். என்ன செய்ய? இருதலை எறும்பாய்த் தவித்தான்.” என்று இஸ்லாம் என்னும் சமயத்தை ஏற்றுகொண்ட நாவிதரை ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு கருதி விலக்கி நிறுத்துவதைத் தம் நாவல் வழியாகப் புலப்படுத்துகிறார். (கீரனூர் ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள், பக்.191-192).

முடிவுரை

முஸ்லிம் காலத்தில் ராவுத்தர் என்றால் உயர்ந்தவர்கள் என்றும், லெப்பை என்றால் தாழ்ந்தவர்கள் என்றும் நினைத்து அவர்களுக்குள்ளாகவே பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் முஸ்லிம் பெண்ணை நாவிதர் திருமணம் செய்தால் அவனுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் விலக்கி வைக்கும் சாதியச் சூழலும் இக்கட்டுரையில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. கமால் எஸ்.எம் – தமிழகத்தில் முஸ்லிம்கள் அடையாளம்                1205/ கருப்பூர் சாலை, புத்தாந்தம் – 621310, 2016
  2.  கீரனூர் ஜாகிர்ராஜா – கருத்தலெப்பை, மருதா பதிப்பகம், சென்னை. 2007
  1. கீரனூர் ஜாகிர்ராஜா – மீன்குகை வாசிகள்,   ஆழி பப்ளிஷர்ஸ். சென்னை. 2010
  1. ம. முகம்மது உவைஸ் – இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. 1983.

*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவி
ஸ்காட் கிறித்தவக் கல்லூரி
மனோன்மணீயம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்

 

 

Leave a Reply

Your email address will not be published.