கவியோகி வேதம்

சிற்பியின் கைகள் நடுங்குமெனில்

    சிலைகளும் எவ்வா றுருவாகும்?

கற்பவன் கல்வி சிறந்திடுமோ,

    கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?

கற்பிலா மாதர் தலைவியெனில்

    கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?

சொற்களும் இவைபோல் சக்திபெறா,,

    சொலும்காப் பியமே  ‘சக்கை’எனில்!

.

 கதிரவன் சக்தி வராநிலத்தில்

     கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!

 முதியவர்  ‘சோடை’- போம்ஊரில்

     முன்னேற் றமென்றும்  இருப்பதில்லை!

 சுதிகளே சேரா வீணைகொண்டால்

     ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!

  கதியிலா ஏழை வாழ்வதெங்கே?

      கருணையே பாயா ஆட்சிதன்னில்!

.

பயிற்சியே செய்யா சோம்பல்மனம்

   பகுத்தறி புத்தி கொள்வதில்லை!

அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்

    அற்புத  ‘ஸித்தி’ வருவதில்லை!

வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்

   வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!

கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’

   கடவுளே! உனையான் விடுவதில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *