-அ. மைக்கேல்
இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தோமையார் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவுதற்கு இந்தியாவின் தென் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் புனித தாமஸ் மீனவர்களைக் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றியது பற்றியோ, கடற்கரை பகுதிகளில் அற்புதங்கள் நிகழ்த்தியது பற்றியோ எந்த குறிப்பும் எழுதப்படவில்லை. “மார்க்கோபோலோ தன்னுடைய பயணக் குறிப்பில் புனித தாமசின் (தோமையார்) கல்லறை பற்றியும், புனித தாமஸ் கொலையுண்டது பற்றியும், சென்னை நகரை மலபாரின் மக்கள் தொகை குறைவான ஒரு சிறு நகரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். என்று கே.ஏ.நீலகண்டசாஸ்திரி தமது நூலில் குறிப்பிட்டுகிறார். (Nilakanda Sastri. K.A, History of South India – P. 138).
16-ம் நூற்றாண்டில் வருகை புரிந்த போர்ச்சுக்கல் நாட்டு துறவி பிரான்ஸிஸ் சேவியர் (புனித சவேரியார்) முதன் முதலில் மீனவர்களைக் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றினார். மலபாரில் இருந்த கேரள முக்குவர் இன மீனவர்களே கிறிஸ்தவ சமயத்தை முதலில் தழுவினார். பின்னர் படிப்படியாகக் குமரி மாவட்ட மீனவர், முக்குவர், பரதவர் எனப் பெரும்பான்மையான மீனவர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார் என்றும் ஸ்டீபன் சாம் தமது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வில் பதிவு செய்கிறார். (ஸ்டீபன் சாம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் ஓர் ஆய்வு ப.47)
மீனவர்களால் வழிபடப்படும் தெய்வங்கள்
மாதா, வேளாங்கண்ணி மாதா, புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா கன்னிமரியாள், பனிமயமாதா, புனித சவேரியார், புனித சூசையப்பர், மிக்கேல் சம்மனசுகள், அன்னம்மாள், கப்ரியேல், புனித தோமையார் ஆகிய தெய்வங்களைத் தமிழக மீனவர்கள் வழிபட்டு வருகின்றனர். புதிதாக வழிபடக்கூடியதற்கு தகுதியானவர் என ரோமன் கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்ட பின்னரே அவர்களை கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் மேற்கூறப்பட்ட தெய்வங்களில் சிலவற்றை முக்கியத்துவம் கொடுத்தும் மிகவும் பக்தியுடனும் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக மாதாவின் அருள்பெற்ற வேளாங்கண்ணி மாதா, பனிமயமாதா, கன்னிமரியாள், புனித அந்தோணியார் ஆகிய தெய்வங்களை மிக்க பக்தியுடன் வழிபடுகின்றனர். மாதாவைத் தங்கள் தாயாக வழிபடுகின்றனர். கடும்புயல் காற்றும் இடி மழையாலும், கலங்கிடும் போது பனிமய மாதா வேளாங்கண்ணி மாதா ஆகிய தெய்வங்கள் கருணையுடன் காப்பதாக மீனவர்கள் பெருமையுடன் நம்புகின்றனர்.
‘குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அதிகமாகக் காணப்படும் கோயில்களில் வணங்கப்படும் தெய்வமாக புனித அந்தோணியார் திகழ்கிறார். அந்தோணியார் தெய்வத்தை மீனவர்கள் “கோடி அற்புதர்” என அழைக்கின்றனர். (வி.பி. ஞானப்பிரகாசம், பரதகுல மக்கள் தமிழியல் ஆய்வு ப.22) அவர் மீது உள்ள பக்தியின் காரணமாகக் கடற்கரை மீனவக் குழந்தைகளுக்குத் தலைமுடி வெட்டும்போது வட்ட வடிவில் பட்டம் சூட்டியது போன்று வெட்டி வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை அந்தோணியார் தெய்வத்திற்கு திருவிழா எடுத்து கொண்டாடுவர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை நேரங்களில் “நவநாள்“ வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதைக் குமரிக் கடற்கரை மீனவ கிராமங்களில் அதிகமாக காண முடியும்.
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் மீனவ கிராமங்களில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 100 சதவீதம் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
கோவில்கள்
மத நம்பிக்கை அதிகம் உள்ள மீனவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கடவுளுக்குக் கோயில் கட்டி வழிபடுவதால் தங்களுடைய தொழிலில் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும், செல்வத்தை பெருக்கவும் முடியும் என நம்புகின்றனர். குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மீனவ கிராமங்களாக நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 42 கிராமங்கள் என அரசின் கணக்கெடுப்பில் கூறப்பட்ட போதும், குமரிக் கடற்கரைப் பகுதிகளில் 57 மீனவக் குடியிருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்கள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வானுயர்ந்து காட்சி தருகின்றன. ஊருக்கு ஒவ்வொரு கோயில் கட்டப்பட்டு உள்ளன. இவை தவிர ஊரில் உள்ள ஆலயத்தின் துணை அமைப்பாக ஒரு குருசடியும், கிறிஸ்தவக் கடவுள்களின் உருவங்கள் வைக்கப்பட்ட கோயில் போன்ற சிறிய அமைப்பு நிறுவி உள்ளனர். குமரி மாவட்டம் கடற்கரையோரம் உள்ள கன்னியாகுமரியில் உள்ள மாதா ஆலயம், இனையம் புத்தன்துறை ஆலயம் போன்ற கோயில்கள் தங்களது பொருளாதார சக்திக்கு மீறிய செலவில் மீனவர்களால் கட்டப்பட்டுள்ள கோயில்களாகக் காட்சி தருகின்றது. இனையம் புத்தன்துறை கோவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. 1982-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1992-ல் முடிக்கப்பட்டது. சிமெண்ட் விலை ரூ. 30-ற்கு விற்கப்பட்டு வந்த வேளையில் இக்கோயிலைக் கட்டிமுடிக்க பொருள்நிதிச் செலவாகியுள்ளதை கோயில் தோற்றத்தை வைத்துக் கூறிவிட முடியும். இதே போன்று கன்னியாகுமரி மாதாகோவில், தூத்துக்குடி அதிசய பனிமாதா கோவில், வேளாங்கன்னி மாதாகோவில் ஆகியவை கடற்கரையில் அமைந்த வானுயர்ந்த பெரிய கோவில்கள் ஆகும்.
மக்கள் தொகையில் 700 மற்றும் 800 எண்ணிக்கை கொண்ட கடற்கரை மீனவ கிராமங்களிலும் இவ்வளவு செலவில் கோவில்களை எழுப்பப் போதுமான நிதி இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது வியப்பாகவே உள்ளது. இது பற்றிய ஆய்வின் போது மீனவ மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கோவில்களுக்கு கொடுக்கின்றனர் என்ற உண்மை தெரிய வருகிறது.
இனையம் புத்தன்துறை, பள்ளம் போன்ற மிகப் பெரிய கோவில்கட்டும் பணி நடைபெற்று முடியும் வரை அந்த ஊரைச் சார்ந்த மீனவர்கள் தினமும் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் கோயிலுக்குச் செலுத்த வேண்டும். அதாவது 100 ரூபாயில் 5 ரூபாய் கோயிலுக்குச் செலுத்த வேண்டும் என ஊர் ஆலய நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது. தற்போதும் கோயில் கட்டும் மீனவ கிராமங்களில் இம்முறை அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அமுல்படுத்த அரசு ஆணைகளோ, காவல் துறையின் ஒத்துழைப்போ, திருச்சபை சட்ட திட்டங்களோ கோயில் நிர்வாகத்திற்கு தேவை இல்லை. தாமாகவே மீனவர்கள் கோயில் கட்டும் பணி முடியும் வரை நிர்ணயிக்கப்பட்ட தொகையை கோயிலுக்குத் தந்து விடுகின்றனர்.
குளச்சல் கோயில் கட்டும் பணி முடிவடைந்தது வரை மீனவர்கள் “கூறு” என்னும் முறையை பின்பற்றிக் கோயிலுக்கு நிதி செலுத்தியுள்ளனர். “கூறு” என்பது ஏலம் போடும் முறை ஆகும். ஓர் ஆண்டிற்குக் கோயில் நிர்வாகத்திடமிருந்து மொத்த ஏலம் எடுத்த நபர் கோயிலுக்கு உண்டான குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவார். ஏலம் எடுத்தவர் குறிப்பிட்ட அந்த ஓர் ஆண்டுக்குள் மீனவர்கள் கடலிலிருந்து மீன் பிடித்து வரும்போது அவர்களிடமிருந்து மீனைக் “கூறு” முறையின் மூலம் ஏலம் விட்டுத் தொகையைப் பெற்று கொள்வார் இதையே ‘கூறு” என்று கூறுவர்..
உவரி, மணப்பாடு ஆகிய ஊர்களில் “அஞ்சுமீன் குத்தகை” என்ற பழக்கம் இருக்கிறது. தொழில்முடிந்து கரைக்குத் திரும்பும் மீனவர் தங்கள் மீன்பாட்டிலிருந்து 5 மீன்களை கோயிலுக்கு வரியாக வழங்குவர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில் பொறுப்பாளர்கள் விழாச் செலவைக் கவனிப்பர். இன்னும் கோயில்களுக்குச் சொந்தமான கடைகள், மண்டபங்கள், அரங்கங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை பணம், பிறர் தரும் நன்கொடைகள், வெளிநாட்டுத் தன்னார்வலர்கள் சிலர் தரும் நிதி, மறை மாவட்டம் தரும் நிதி போன்றவையும் இவர்களின் கோயில் கட்டும் நிதிச் செலவிற்குப் பயன்படுகின்றன. இவ்வாறாகப் பல இலட்சம் செலவில் கட்டப்படும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீனவர்களின் வழிபாட்டிற்கு மட்டுமில்லாது இயற்கைப் பேரிடர் காலங்களிலும் மீனவர்கள் தங்குவதற்கும் அடைக்கலம் அளிக்கும் அரணாகவும் விளங்குகிறது எனலாம்.
மீனவர் வழிபாட்டு முறைகள்
கிறிஸ்தவ மீனவர்கள் தாங்கள் சார்ந்த சமயத்தின் மீது மிகுந்த பக்தியும் பொறுப்பும் உடையவர்களாக செயல்பட்டு வருகின்றனர். கடற்கரை மீனவ கிராமங்களில் இருக்கும் தாய்ப் பங்கு (பங்குப் பணியாளரை பொறுப்பாகக் கொண்ட) தேவாலயங்களில் தினமும் திருப்பலி நடைபெறுகிறது. குறிப்பிட்ட பங்கு (கிறிஸ்தவ சபை) சார்ந்த பங்கு பணியாளர் (மத போதகர்) திருப்பலியை நடத்துகிறார். இது தினமும் காலை 6.30 மணியிலிருந்து 9 மணிக்கு உள்ளாக நடைபெறுகிறது. இதில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இவை தவிர தாய்ப் பங்கில் திருமணம், ஞானஸ்நானம், புதுநன்மை, உறுதிபூசல் குருத்துவ பட்டமேற்பு விழாக்கள், மதச் சிறப்பு நாட்கள், திருவிழா நாட்கள், இறப்பு, ஞாயிற்றுக் கிழமைகள் ஆகிய நாட்களில் சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு தாய்ப் பங்கிற்கும் துணைப் பங்குகள் 1 அல்லது 2 இணைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் துணை பங்குகளில் முக்கிய நாட்களில் திருமணம், திருவிழா, ஞானஸ்நானம், புது நன்மை, உறுதிப்பூசல் குருத்துவ பட்டமேற்பு விழாக்கள், மத சிறப்பு நாட்கள், இறப்பு ஆகிய நாட்களிலும், இதே போன்று முதன் முதலில் கருவுற்ற பெண்ணுக்கு, ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் “சூல் வளையல்”, அணிவிக்கப்படும் சீமந்தம் அல்லது வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. (ஸ்டீபன் சாம் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் ஓர் ஆய்வு ப. 35)
மீனவ சமய சடங்குகள் அனைத்திலும் நிகழ்வாக, தேங்காய் உடைத்தல், சூடம் பற்ற வைத்துத் தீபம் காட்டுதல், திருநீர், சந்தனம், குங்குமம் ஆகியவை தட்டில் வைத்துக் கொடுத்தல், மலர்மாலைகள் அணிவித்தல் ஆகியவை முக்கிய நிகழ்வாக இருக்கிறது.
திருவிழாவின்போது சிறப்பு மதச் சடங்குகளில் மீனவர்கள் ஈடுபடுகின்றனர். மந்திரம் ஓதுதல், விரதம் இருத்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றின்போது பல சிறப்புச் சமய சடங்குகளில் ஈடுபடுகின்றனர். மாலை அணிந்து விரதம் இருத்தல், புது வீட்டிற்கு அடிக்கல் நாட்டுதல், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவும் புது படகு, வலை, கருவிகள் வாங்கி பயன்படுத்தும் முன்பாகவும் பல்வேறு சமய சடங்குகளை செய்கின்றனர்.
இவை தவிர குமரி மீனவர்கள் பூப்புனித நீராட்டு, திருமணம் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சமயச் சடங்குகள் செய்கின்றனர். திருமணத்தின்போது மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படும் தங்கத்தால் ஆன தாலி மதகுருவால் மந்திரிக்கப்பட்டு (தீர்த்த நீரால் ஆசீர்வதிக்கப்பட்டு) மணமகன் கையில் கொடுக்கப்படுகிறது. மணமகன், மணமகள் ஆகியோர் அனைவர் முன்னிலையிலும் தேவாலயத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு தேவாலயப் பதிவேட்டில் மணமகள், மணமகன் சாட்சிகளுடன் கையெழுத்து இடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலத்தில் சிறுவர்கள் “கிறிஸ்துமஸ் தாத்தா” வேடம் அணிந்து இரவில் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுகின்றனர். இதனை “பஜனை” என்பர். வீடுகளில் இருப்பவர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இதில் பெண்களும், ஆண்களும் கலந்து கொள்கின்றனர். வீடுகளில் குடில்கட்டி கிறிஸ்தவக் கடவுள்களின் சிறிய உருவங்கள் (சிற்பங்கள்) வைத்து, மின்விளக்கு, நட்சத்திரம் கட்டுகின்றனர். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு சிறப்பு வழிபாடும், சடங்குகளும் ஆலயத்தில் நடைபெறுகிறது.
முடிவுரை
மேற்கண்ட நிலையில் குமரி மாவட்ட மீனவர்களின் தெய்வங்களை வழிபடுகிற போது தனித்த பல நம்பிக்கை மற்றும் சடங்கு முறைகளைப் பின்பற்றி வழிபடுவதைக் காணமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
- அமல்ராஜ். ஆர். எஸ். – புனிதர்களின் பாதையில், தமிழ் இலக்கிய கழகம், நாகர்கோவில். 1983,
- ஐசக் அருள்தாஸ்.ஜி – குமரி மண்ணில் கிறிஸ்தவம், கிப்ற்றோ, 8- 79, குளத்துவிளை, தெங்கம்புதூர் – 629603, 2010,
- சேவியர். ம.பி. – பதுவை புனித அந்தோணியார், நாஞ்சில் பதிப்பகம், 67- 1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் – 1 , 2003
- நற்சீசன் . சே.ரா, – குமரி கிறிஸ்தவர்களின் பயணப்பாதை, நாஞ்சில் பதிப்பகம், 67-1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் – 1, 2000.
- ஸ்டீபன் சாம், என், -குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வியல் ஓர் ஆய்வு, தங்கம் பதிப்பகம், 17- 63, மேற்கு கல்லுக்கூட்டம், 2004.
- Nilakanda Sastri. K.A. – History of South India
******
கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,ஸ்காட் கிறித்தவக் கல்லூரி,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

Leave a Reply