Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

தமிழில் இயல்பியல் கலைச்சொற்கள்  மற்றும் பன்முக வளர்ச்சிப்பாதை

-முனைவர் நா.ஜானகிராமன் 

தமிழில் அகராதிகள் வளர்ந்து வந்தமை ஒரு நீண்ட நெடிய வரலாற்றினை உள்ளடக்கியதாகும். அகராதிகளின் வளர்ச்சிப்போக்கு காலந்தோறும் மாறும் இயல்பினைக் கொண்டதாகும். மொழிக்கென உருவான அகராதிகள் பின்னாளில் கலைச்சொற்களுக்கென உருவாக்கப்பட்டது. ஒருமொழி, இருமொழி, பன்மொழி என்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று கலைச்சொல் துறைக்குத்தாவியது. தமிழ்மொழியில் பல்வேறு துறை அறிவுகள் பெருகுவதற்கு இக்கலைச்சொற்களின் வளர்ச்சியே காரணமாகும். குறிப்பாக, அறிவியலைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதனை இக்கலைச்சொற்களின் வளர்ச்சியே நிரூபணம் செய்கிறது. கலைச்சொல் என்பதற்கு பாரதியார் சங்கேதம், பரிபாஷை, குழுஉக்குறி எனும் சொற்பயன்பாட்டைக் குறிப்பிடுகின்றார். அதாவது, “ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்திரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல்“ என்பது பாரதியார் கலைச்சொல்லிற்குத் தரும் விளக்கமாகும். இவ்வாறான கலைச்சொற்களும் அகராதிகளும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பல தோன்றி வளர்ந்தன. பின்னாளில் வெவ்வேறு துறைகளுக்கு இது சென்றது. இன்று மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் எனப் பற்பல துறைகளுக்கு அறிவியல் அறிஞர்களும், தமிழ் வல்லுநர்களும் சொல்லகராதிகளை உருவாக்கி வருகின்றனர். இத்தகு கலைச்சொல்லகராதிகள் பாடநூல் எழுதுவதற்கும், தமிழில் அறிவியல் சொற்களை இனம்கண்டு அறிந்து கொள்வதற்கும் பயன்படுகின்ற கருவூலமாக விளங்குகின்றன. அவ்வகையில் இயல்பியல் கலைச்சொல்லகராதிகளின் (Physics- Technical Terms Glossary) வளர்ச்சி வரலாறு குறிப்பிடத் தகுந்ததாகும்.

இயல்பியல் (Physics)

Physics எனும் துறைக்கான கலைச்சொல்லகராதிகள் தமிழில் பல வெளிவந்துள்ளன. 1932ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் physics என ஆங்கிலத்திலேயே இச்சொல்லைப் பயன்படுத்தியது. 1936-ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் “பூதநூல்” எனக் குறிப்பிட்டது. 1972-ல் காரைக்குடி தமிழியக்கப்பாசறை “பூதவியல்” என்று பெயரிட்டது. 1947-ல் சென்னை அரசாங்கமும், 1960-ல் கல்லூரித்தமிழ்க்குழுவும் “பௌதிகம்” எனப் பெயரிட்டன. 1960, 1975களில் இலங்கைக் குழு வெளியிட்ட தொகுதிகளிலும் பௌதிகவியல் என்றே வழங்கப்பெற்றது. 1971-ல் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் “இயற்பியல்” என வழங்கியது. அண்டபிண்ட சாஸ்திரம் எனத்தொடங்கி இறுதியில் இயற்பியல் எனும் வரையறைக்குள் வந்தது. இந்த சொல்லுருவாக்கப் பணிகள் முதலில் மருத்துவம், கணிதம் என்ற துறைகளில் அகராதி உருவாக்கப் பணிகளாகத் தொடங்கப்பட்டன.  பின்னாளில் காலமுறை இதழ்களும், தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பலவும் இயற்பியல் சொல்லாக்கத்திற்கும் அகராதிகளுக்கும் வித்திட்டன.

இதழ்ப்பணிகள்

பெரும்பாலும் கலைச்சொல்லாக்க அகராதிகளுக்கு வித்திட்டவை அறிவியல் இதழ்கள் எனலாம். ஒவ்வொருவரும் அவ்வப்போது உருவாக்கிய கலைச்சொற்களை இதழ்களில் வெளியிட்டனர். அப்போது சொல் தரவாக்கம் நடப்பதற்குரிய விவாதங்கள் தொடங்கின. 1916-ல் கலைச்சொற்களுக்கென்றே ஓர் இதழ் வெளிவந்தது. அதன் பெயர் “சாஸ்திர பரிபாஷை சங்கத்தாரின் பத்திரிக்கை” என்பதாகும். சேலத்தில் உள்ள இராஜாஜி விஞ்ஞானச் சொல் சங்கம் இதனை வெளியிட்டது. “ சாஸ்திர பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் சேலத்தில் வக்கீல் ஸ்ரீ இராசகோபாலாச்சாரியரும் ஸ்ரீ வெங்கடசுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகை தொடங்கியிருக்கின்றார்கள்” என்கிறார் பாரதியார். 1917-ல் தமிழர் கல்விச்சங்கத்தின் தமிழர் நேசன் என்னும் பத்திரிக்கை பத்து ஆண்டுகள் வெளிவந்தது. இதில் பெ.நா. அப்புசாமி பணியாற்றினார். 1933-ல் வெளிவந்த தமிழ்க்கடல் என்னும் பத்திரிக்கையில் இயல்பியல் செய்திகள் வெளிவந்தன. பின்பு, கலைமகள், செந்தமிழ், ஆனந்தபோதினி, தமிழ்த்தாய், தினவர்த்தமானி, பிரசண்ட விகடன், வீரகேசரி, ஈழ கேசரி, சுதேசமித்திரன், தியாக புமி, இளம் விஞ்ஞானி முதலிய இதழ்கள் கலைச்சொல் அகராதிப்பணிக்கு வித்திட்டன. ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நாளிதழ் பணியும் குறிக்கத்தக்க ஒன்றாகும். 1949-ஆம் ஆண்டு பூ.சா.கோ. அறநிலையத்தாரால் தொடங்கப்பெற்ற அறிவியல் திங்கள் இதழ் பல கலைச்சொற்களைத்தாங்கி கட்டுரைகளாக வெளிவந்ததன. (இராதா செல்லப்பன் 2001:29).

அகராதிகள் (Dictionaries)

1932-ல் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழு ஒன்றினை அமைத்தது. இதில் ஏறத்தாழ 7400 கலைச்சொற்கள் இடம்பெற்றன. இதில் இயல்பியல் கலைச்சொற்கள் 1000 உள்ளன. இவற்றில் பெரும்பான்மை சமஸ்கிருதம்  மற்றும் ஆங்கிலத் தாக்கத்தை உணரலாம்.

aberration- பேரணம், லங்கணம்
action – கிரியை, காதம்,
lens- லென்ஸ்
accumulator – வித்யுத் சஞ்சாயகம்,  அக்யுமுலேடர்

என்னும் சொற்கள் குறிக்கத்தக்கனவாகும். பல கண்டனங்களிலிருந்து இந்தச் சொற்கள் தப்பிவந்தாலும் அறிஞர்களால் இது   ஏற்றுக்கொள்ளப்பெறவில்லை. 1940-களில் சென்னை அரசாங்கம் கலைச்சொற்களைத் தொகுக்கும் நோக்கத்துடன் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி தலைமையில் குழு ஒன்றினை அமைத்தது. இக்குழு 1947-ல் ஒரு கலைச்சொல் தொகுதியினை வெளியிட்டது. பௌதிகம் என்னும் தலைப்பில் வெளிவந்த இக்கலைச்சொல் தொகுதியில் ஏறத்தாழ 1500 சொற்கள் இடம்பெற்றிருந்தது. இதன் தலைப்பு – List of Technical Terms ( English- Tamil) Physics- என்பதற்கு இணையாக பௌதிகம் என்று  இடப்பெற்றிருந்தது.  இதனில்,

aberration – கதி பிறழ்ச்சி, மையப்படாமை
area – விஸ்தீரணம், பரப்பளவு
lens – லென்ஸ்
accumulator – சேமக்கலம், அக்யுமுலேட்டர்

என்றவாறு சொற்கள் இடம்பெற்றிருந்ததன. சென்னை அரசாங்கம் 1959-ல் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. மாநில மொழியைப் பயிற்றுமொழியாக ஆக்க வேண்டியதன் தேவையை இவ்வாணை வலியுறுத்தியது. கல்லூரித் தமிழ்க்குழுவின் தலைவராக ஜி.ஆர்.தாமோதரன் செயல்பட்டார். 1960-ஆம் ஆண்டு “பௌதிகவியல்” கலைச்சொல் தொகுதி வெளியிடப்பட்டது.

1971-ல் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பல கலைச்சொல் தொகுதிகளை வெளியிட்டது. அவற்றுள் பௌதிகவியல் கலைச்சொல் தொகுதியும் ஒன்றாகும். இதில் ஏறத்தாழ 2800 கலைச்சொற்கள் இடம்பெற்றன.

1936, 1938ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தமிழ்ச்சங்கம் பல கலைச்சொல் தொகுதியினை வெளியிட்டது. “பூதநூல்” என்னும் கலைச்சொல் தொகுதியினை 1000 சொற்களோடு வெளியிட்டது இச்சங்கம்.

1960, 1975 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து பல தொகுதிகள் வெளிவந்தன. 1960-களில் இலங்கையின் அரச கரும மொழித்திணைக்களம் பௌதிகவியல் என்னும் தலைப்பில் ஏறத்தாழ 11000 கலைச்சொற்களை வெளியிட்டது. 1975-ல் இலங்கையின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பௌதிகவியல் சொற்றொகுதி என்ற தலைப்பில் 7200 சொற்களை வெளியிட்டது.

கலைக்களஞ்சியங்கள் பலவும் தமிழில் வெளிவந்தன. 1959-ஆம் ஆண்டு டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் பணி தொடங்கியது. ஏறத்தாழ 25,000 சொற்கள் இதில் இடம்பெற்றன.

பல்கலைக்கழக முயற்சிகள்

பல்கலைக்கழகங்கள் பல கலைச்சொற்களின் வளர்ச்சிக்கு உதவின. மதுரைப் பல்கலைக்கழகம் 2400 கலைச்சொற்கள் அடங்கிய அகராதியினை வெளியிட்டது. aircell- என்பதற்கு காற்றுச்சிமிழ் எனவும், transformer- என்பதற்கு மின்மாற்றி எனவும், சொல்லாக்கம் செய்யப்பட்டன. 1997-ல் ப.க.பொன்னுசாமியைப் பதிப்பாளராகக் கொண்டு “இயல்பியல் களஞ்சியம்” என்ற நூல் வெளிவந்தது. இதில் 642 கலைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு கலைக்களஞ்சியம் போலானது. மேலும், இயல்பியலைப் பதினொரு நுண்பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு சொற்கள் விளக்கப்பெற்றுள்ளன. 1997-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் பேரா.இராம சுந்தரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு,2400 சொற்கள் கொண்ட அகராதியினை  உருவாக்கியது. 

கலைச்சொல்லகராதிகளை உருவாக்கலும், செம்மைப்படுத்தலும்

கலைச்சொல்லகராதிகள் பல்வேறு நிலைகளில் உருவாக்கித் தரப்படுத்தம் செய்யப்படும். சொற்களைத் தேர்வு செய்தலும், அதனைத் தரப்படுத்தலும் முக்கியமான பணியாகும். அறிஞர்கள் உருவாக்கும் சொற்கள் பல சமயங்களில் மக்களைச் சென்று சேர்வதில்லை. சில சொற்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன. சில சொற்கள் ஏற்கப்படுகின்றன. கலைச்சொல்லகராதிகள்  பின்வரும் படிநிலைகளில் உருவாக்கப்படுகின்றன.  அவை, பின்வருமாறு.,

 1. தமிழ்ச் சொற்களுக்கே முன்னுரிமை (only Tamil word)
 2. வழக்குச்சொல்லுக்கு முதன்மை (present use word priority)
 3. இலக்கியச்சொற்களுக்கு முதன்மை (literary usage)
 4. ஒரே சொல் மறித்து வரக்கூடாது (avoid repetition)
 5. கருத்துப்புலக் கூறு (concept categories)
 6. சுருக்கச்சொல் தேர்வு (words economy)
 7. நிலைபெற்ற சொற்களை மாற்றாமை (standard words)

இத்தகைய கூறுகளை மையமாக வைத்துக் கலைச்சொல்லகராதிகளை உருவாக்குதல் வேண்டும்.

kinetics – விசையியக்கவியல், knob- குமிழ் என்பன போன்ற கலைச்சொல்லாக்கத்தில் தமிழ்மொழி ஆளுமையினை உணரலாம். lightning conductor – என்பதற்கு மின்னல் கடத்தி எனச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. அகராதியிலும், சொல்லாக்கத்திலும் ஒரு சொல் மீண்டும் வருதல் கூடாது. பொருள் மாற்றச் சூழலில் இடம்பெற்றால் தவறில்லை. உருவாக்கத்திற்கான சொல்லமைப்பு எளிமையுடன் இருத்தல் வேண்டும். நீண்டநாள் நிலைத்த சொல்லை மாற்றக் கூடாது என்பன போன்ற வரையறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும். absolute expansion – என்பதற்குத்  தனி என சொல்லாக்கம் செய்துள்ளனர். angular magnification – என்பதற்கு கோண உருப்பெருக்கம் என்று ஆக்கம் செய்துள்ளனர். இதில் கருத்துப்புலப்பாட்டுக் கூறு முக்கியமானதாகும். fading – என்பது மங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும். இது சுருக்கச்சொற்களின் வகைப்பாடாகும். absorption – என்பது உட்கவர்தல் அல்லது உட்கவரல் என்னும் பொருளில் உள்ளது. சொற்சுருக்கத்திற்கு இது சான்றாகும்.

தரவுருவம் செய்தல் (standardization)

சொற்களை அகராதிக்கு அனுப்புமுன்  தரவுருவம் செய்தல் வேண்டும். அனைத்துச்சொற்களையும் அகராதியில் செலுத்தி பொருள் வழங்க முற்படுதல் கூடாது. காரணம், அனைத்துச் சொற்களின் அமைப்புநிலையிலும் ஒற்றுமைத்தன்மை வேண்டும் என்பதுவே ஆகும். எனவே தரப்படுத்தம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 1. பணித்தரவுருக்கள்
 2. பயன்பாட்டுத் தரவுருக்கள்
 3. எடையளவுத்தரவுருக்கள்
 4. திட்டத்தரவுருக்கள்
 5. சோதனைத்தரவுருக்கள்
 6. இயல்பறித்தரவுருக்கள்
 7. பாதுகாப்புத்தரவுருக்கள்
 8. பொருள் தரவுருக்கள்
 9. செயல்முறைத்தரவுருக்கள்
 10. தகவல் தொடர்புத் தரவுருக்கள்

எனப் பல்வகையாகப் பாகுபடுத்தலாம் (2006:148 இராதா செல்லப்பன்) என்னும் வகைப்பாடு அகராதிக்குக் கலைச்சொல்லை ஏற்றும் முன் செய்யப்பட வேண்டிய படிநிலைகளாகும். தரப்படுத்துவதன் வாயிலாக ஒரு சீர்மையை உருவாக்கிட முடியும். கருத்தொருமித்தலுக்கும் பயன்பாட்டுத்தெளிவுக்கும் வழிபிறக்கும். உரைப்பொருளும், உள்வாங்கும் பொருளும் ஒத்து இயங்குதல் வேண்டும். ஒரு கருத்தினை மற்றவருக்கு எடுத்துப்புரிய வைப்பதில் இது முக்கியப்பங்கு ஆற்றுகிறது. புரிதல்களுக்குரிய இயல்புகளில் சிறக்கிறது. தொடர்பு கொள்வோர்களுக்கிடையே கலைச்சொல் தெளிவும் சிறப்பும் அதிகரிக்கும்.  மேலும், பல கருத்து ஒரு சொல்லைத் தவிர்க்கலாம். ஒரு கருத்து பல சொற்களை விளக்கலாம். கலைச்சொற்கொள்கைகளுக்கு ஏற்பப் புதிய சொல்வகைகளை உருவாக்க வழிவகைச் செய்யலாம்.

கலைச்சொற்களைத் தரவுருக்களாக அறிவிப்பதன் மூலம் கலைச்சொல் சீர்மையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கலாம். கலைச்சொல்லுக்கும் அது குறிக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக நிலைநிறுத்துவதன் மூலமும் பயன்பாட்டு ஒருமையைச் சீர்படுத்தலாம். சான்றாக, அளக்கும் கருவி எனும் கருத்தைக் குறிக்கும் “மானி” என்ற கலைச்சொல் எந்தச்சூழலில் பயன்படுத்தப்பட்டாலும் அதே கருத்தையே மாற்றமின்றித் தாங்கி நிற்பதற்குத் தரப்பாடு உதவுகிறது.

துறை வல்லுநர்கள் தம் துறைசார்ந்த செய்திகளைப் பற்றித்  தம்முள் தொடர்பு கொள்கின்றனர். தெளிவான வரையறைகளையுடைய தரவுருக்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனுறுத் தொடர்பை உருவாக்கலாம். ஒரு கலைச்சொல்லின் தொடர்பாற்றல் குறிப்பிட்ட குறியீட்டில் அதன் உட்புகுதிறன், ஒத்த கருத்தோடு அதற்குள்ள நேரடித்தொடர்பு, உரைப்பொருளோடு கருத்துள்ள தகவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகிறது. ஒரு கருத்தினை மற்றவருக்குப் புரியவைக்கும் முயற்சியை எளிதாக்குகிறது. ஒரே கருத்தைக் குறிக்கும் அறிவியலாரும், மொழிபெயர்ப்பாளரும் அதனைப் பல்வேறு கண்ணோட்டத்துடன் அணுகும்போது உருவாகும் ஒரு கருத்துப் பலசொற்களிலிருந்து ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தரவுருவாக அறிவிக்கக் கலைச்சொல் தரப்பாடு உதவுகிறது. குறிப்பிட்ட ஒரு பொருளைக் குறிப்பிட்ட ஒருவர் புரிந்துகொள்ளத் தேவையான பண்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதாவது, கலைச்சொல் குறிக்கும் இயல்புகளை வரையறுக்கிறது. பாதுகாப்புத் தரவுருக்களை உருவாக்குவது உயிர்த்தொடர்பான பாதுகாப்பு, சூழல்பாதுகாப்பு ஆகிய இயல்புகளுக்கு ஏற்றம் தருகிறது.

தரப்பாட்டுக் கொள்கைகள்

 1. தரவுருக்கள் பொது ஒப்புதல் பெற்றவையாக இருக்கவேண்டும். கலைச்சொற்கள் குறிப்பிட்ட அறிவுத்துறை வல்லுநர்களாலும் கலைச்சொல்லியலாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட சொற்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கலைச்சொல்லைப் பயன்படுத்துவோரின் பொதுஒப்புதல் பெற்றதன் அடிப்படையில் தரவுருவாக்கம் நடைபெற வேண்டும்.
 2. தரவுருவின் பயன்பாட்டு நோக்கத்தைத் தரப்படுத்துவோர் கவனத்தில் கொள்ளவேண்டும். (காட்டாக.,) வாக்கியங்களில் தரவுருவைப் பயன்படுத்துகையில் அவை ஏற்புடையனவாக அமைதல் வேண்டும். தொடர்புடைய சொல்லாக்கங்களுக்கு வழிவகுக்கும் முறையில் தரவுரு அமைதல் நலம். தரவுருக்கள் எளிமை மற்றும் தரமுடன் இருத்தல் வேண்டும்.
 3. தரப்பாடு திட்டமிடப்படவேண்டும். தரவுருக்களைத் தயாரிக்கவும், வெளியிடவும் பாதுகாக்கவும் ஆகும். செலவோடு சமூகப் பொருளாதாரப் பயனை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஏற்கனவே நிலைபெற்ற அல்லது நிலைபெறும் வாய்ப்புடைய சொற்கள் தரவுருக்களாக நிலைப்படும். தரவுரு என்பது முக்கியமான சொல்தேர்வைக் குறிக்கிறது. கலைச்சொற்களில் ஒருமைப்பாடு காண்பதும் அவற்றைத் தரப்பபடுத்துவதும் ஒரு முக்கியமான பணியாகும். தரவுருச்சொற்கள் கலைச்சொற்கோவைகளைக் காட்டிலும் நிலைபேறு உடையனவாகவே இருக்கும். எனினும் அவற்றின் நிலைபேற்றுத்தன்மை முழுமையடைந்ததாகக் கூறமுடியாது. இத்தரவுருக்களைக் குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை மதிப்பீடு செய்வதுடன் அவற்றின் ஒப்புறுதியையும் அறுதியிடவேண்டும். இந்தத் தரவுருக்களை மறுமதிப்பீடு செய்யலாம். புதிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கவும் இச்செயல்பாடு தேவை.
 4. தரப்பாட்டுப் பணி இரட்டிப்புப் பணியாக இருக்கக் கூடாது. தரப்பாட்டுப்பணி பல்வேறு மட்டங்களிலும் செய்யப்பெறும் நிலை உள. தனிப்பட்டோர், கழகங்கள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் முயற்சி ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். சொற்களைத் தரப்படுத்தும் முயற்சியில் கலைச்சொல் துறையில் ஆர்வமுடைய அனைவருடைய கூட்டு முயற்சியும் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். இலங்கையில் அரச வெளியீட்டுத் திணைக்களம் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதித் தொகுதிகளை வெளியிட்டுள்ளன. தமிழிலும் பல வெளிவந்துள்ளன. 

தமிழில் வெளிவந்துள்ள சில இயல்பியல் அகராதிச் சொற்கள்   

A Activating devise செயலூக்கக் கருவி
  Adiabatic change மாறாவெப்ப மாற்றம்
  Aerial அலைவாங்கி
B Bell jar மணிஜாடி
  Bench அளவுச்சட்டம்
  Bevel edge சாயுமோரம்
C Cell கலம்
  Centre of orbit சுற்றுப்பாதை மையம்
  Cavity radiation பொந்துக்கதிர்வீச்சு
D Dielectric slab மின்கடத்தாப் பாதாளம்
  Destructive test அழிவுச்சோதனை
  Depth of force குவிய ஆழம்

* இச்சொற்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட இயல்பியல் கலைச்சொல்லகராதியில் இடம்பெற்றுள்ளது.(2001)

 

நிறைவாக:

இயல்பியல் கலைச்சொல்லகராதிகள் பல தமிழில் வெளிவந்துள்ளன. அவற்றில் எடுத்தாளப்பெற்றுள்ள சொற்கள் பலதரப்படுத்தப்பட்டவையாகும். சில சொற்கள் நிலைபேறடையாமலும் உள்ளன. சில சொற்கள் நிலைபெற்றுவிட்டன. அகராதியில் இடம்பெறும் சொற்கள் பொதுமைத்தன்மையுடன் இருத்தல் வேண்டும் என்பதில் கலைச்சொல்லறிஞர்கள் கவனம் செலுத்திவருகின்றனர். பலவேளைகளில் சொல்மயக்கங்கள் ஏற்படுவதுண்டு. அத்தகைய சூழலில் தேர்ந்தெடுப்புச் சொற்களை உற்றுநோக்கவேண்டும். வல்லுநர்களின் கூற்றுகள் பொருத்தப்பாடுடையதுதானா என்ற நோக்கில் கலைச்சொல் அகராதி உருவாக்குநர் ஆராயவேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு கலைச்சொற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அறிவியலைத் தமிழில் தரவேண்டுமெனில் கலைச்சொற்கள் நிறைய அளவில் படைக்க வேண்டும். தனிநிலையில் மட்டுமன்றி வாக்கிய நிலைகளிலும் அவை பயன்பாடுடையதாக உள்ளதா என்று பரிசீலித்து அகராதிக்குள் நுழைக்கவேண்டும். தற்போதைய காலகட்டங்களில் கணினியைப் பயன்படுத்தி அகராதியை உருவாக்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது உகந்ததே ஆகும். இம்முறையில் கூறியதுகூறல் தவிர்க்கப்பெறுகின்றது. கலைச்சொல்லகராதிகளை உருவாக்குவதற்கு முன்பு அகராதி தரும் பொருள்குறித்து விவாதித்துப் பின் சேர்க்க வேண்டும். அகராதியில் சேர்த்த பின்பு வழக்கிழந்த சொற்களாக எதுவும் மாறல் கூடாது. தரவுருக்களைத் தேர்வு செய்வதற்கும், தேர்வு செய்யப்பெற்ற தரவுகளை அகரவரிசையில் இணைத்து உருவாக்கம் செய்வதற்கும் நம் பணி பெரியதாகும். இப்பணி விரிவாகும்போது தமிழ்வழி அறிவியலுக்கும், தமிழ்வழித் தொழில்நுட்பத்திற்கும் மிகுந்த பயனளிப்பாக அமையும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் கூற்று மெய்யாகும்.

——————

கருவி நூல்கள்

 1. இரத்தினம். கா.பொ ( 1974), கலைச்சொல்லாக்கம், கலைக்கதிர், பூ.சா.கோ. அறநிலையம், கோயம்புத்தூர்
 2. இராதா செல்லப்பன் (2006), கலைச் சொல்லியல், தாமரை பப்ளிகேஷன்ஸ், அம்பத்தூர், சென்னை.
 3. இராதா செல்லப்பன் (2001), இயல்பியல் கலைச்சொல் தொகுதி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24.
 4. சுந்தரம். இராம. (1984), தமிழ்வழி அறிவியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 5. பொன்னுசாமி. ப.க (1983), தமிழில் அறிவியல், ஒரு பார்வை, தமிழ்க்கலை, தமிழியல் காலாண்டு ஆய்விதழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 6. Thirumalai M.S (1979), Language in Science, Geetha Book House, Mysore.
 7. Shanmugam S.V. (1975), Moderenisation in Tamil, anthropological Linguistics, Indiana University, Bloomington.

*****

கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர்- 621 107 janakirambdu@gmail.com
contact : 9842523869.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க