அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் மெய்ப்பாடு

0

முனைவர் சு. இராமர்

முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழியற்புலம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை – 21

 ————————————

மெய் என்பதை உண்மை எனவும், உடல் எனவும் குறிப்பது வழக்கமாகும். மெய்யினால் உணர்த்தப்படுவது மெய்ப்பாடு எனக் கொள்வர். மெய்யில் தோன்றுவது எனவும் மெய்ப்பாடு குறிக்கப்படுகிறது. மெய்யினால் உணர்த்தப்படும் செய்திகள், கருத்துக்கள் சைகை மொழி எனப்படுவதுண்டு. மொழி தோன்றும் முன்னால் மனிதர்கள் தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை உடல் உறுப்புகளின் வழியே வெளிப்படுத்தினர். ஓசைகள், ஒலிகள் ஆகியவை திரட்சி பெற்று மொழியாவது போல் சைகை, முகத்து வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும் மெய்ப்பாடுகளாக திரட்சி கொண்டன. அவை மனிதர்களின் கலைகளில் வெளிப்படுவனவாகவும் அமைந்தன. அவ்வாறு மெய்ப்பாடுகள் குறித்து கூறும் கலையாகப் பரதநாட்டியம் காணப்படுகிறது. நாட்டிய சாஸ்திரம் பற்றிய நூலை இயற்றியவரான பரத முனிவர் மெய்யுணர்வுகளை ரசம் எனக் கொண்டார். ரசங்கள் எட்டு என்று குறிப்பிட்டாலும் நாடகவியல் நூல் எழுதிய சூரிய நாராயண சாஸ்திரி அவற்றை ஒன்பது எனக் கண்டார். ஒன்பான் சுவை எனக் கூறுவது வழக்காகும். ரசம் என்பதும், பாவம் என்பதும் தமிழில் சுவை, குறிப்பு என்று கூறப்படுகின்றன.

மனித உணர்வுகள் மெய் வழி வெளிப்படுவது பாவம் என்று வட நூலார் குறிப்பிட அதுவே தமிழில் மெய்ப்பாடு என்றும் குறிப்பு என்றும் கூறப்படுகின்றன. மெய்ப்பாட்டினை விளக்கிக் கூறும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை எளிதில் விளங்குமாறு “சுவை – காரணம், மெய்ப்பாடு – காரியம். இலக்கியத்தில் சொற்கள் சுவையையும் வருணனைகள் மெய்ப்பாட்டையும் விளக்குகின்றன” (ப.வேல்முருகன்.2012:3) என்று குறிப்பிடுகிறார் ப.வேல்முருகன். அடிப்படையில் சொற்களினால்தான் மொழியும் முழுமையடைகிறது. சொற்களின் வெளிப்பாடு உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் சுவை கொண்டதாக மாறுகிறது. இலக்கியத்தில் சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் மாறுபடுவது சுவையூட்டும் சொற்களைப் பயன்படுத்தும் திறனால்தான் எனலாம்.  சுவை காரணப் பொருளாக இலக்கியத்தில் வெளிப்படுகிறது. குறிப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

“மெய்ப்பாடாவது உலகத்தாருள்ளு நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதொருவழியால் வெளிப்படுதல் என்றும் மெய்ப்பாடு பொருட்பாடு என்றுங் கூறுவர் பேராசிரியர். பொருள் – உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு). பாடு – வெளிப்படுதல். படுதல் – தோன்றுதல் – வெளிப்படுதல். உலகத்தாருள்ளு நிகழ்ச்சி என்றது, உலகத்திலுள்ளனொருவன் ஒரு பொருள் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப்பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு) என்றபடி. புலப்படுவதொரு வழி என்றது சத்துவத்தினை. ஒருவனிடத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்டால் தோன்றுமென்பது” (தொல்காப்பியம், பேராசிரியம், ப.1) என்று மெய்ப்பாட்டியலுக்கு தொல்காப்பியத்தில் விளக்கம் கூறப்படுகிறது. ஒருவன் உலகத்து நிகழ்ச்சி அல்லது பொருளைக் காணுமிடத்து அவனது உள்ளத்துத் தோன்றும் உணர்ச்சியே மெய்ப்பாடு. அது அவனது உடலின் மூலமே வெளிப்படும். உள்ளத்துத் தோன்றும் உணர்வினை முகம் வெளிப்படுத்தும் என்று கூறுவதைத்தான் அடுத்தது காட்டும் பளிங்கு என்று முகத்தினை விளிப்பர். அது போலவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கூற்றும் இதனையே கூறுவதாக அமைகிறது. படைப்பாளியின் மனமானது உலகத்து நிகழ்ச்சிகளை தன் மனத்தில் இறுத்தி அகப்பாரிமாணமாக வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டது.

படைப்பாளியின் உள்ளத்து உணர்வுகள் புறவெளியிலிருந்து பெறப்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றன. புற நிகழ்வுகள் மனிதனுக்குள் ஏற்படுத்தும் அகப்பரிமாணமே படைப்பாக வெளிப்படுகிறது. படைப்பாளியின் மனம் புறச் செயல்பாடுகளிலிருந்தே படைப்புக்கான ஊக்கத்தைப் பெறுகின்றது. நா.வானமாமலை இலக்கியத்தில் உள்ளடக்கம் தோன்றும் வகையினைக் கூறும் போது “புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம், இவ்வரையறையில் படைப்பாளியின் உள்ளத்திற்கு வெளியே உள்ள புறவய யதார்த்திற்கும் அவனுடைய உள்ளத்தில் அது பிரதிபலிக்கும் அகவயக் கருத்துகளுக்கும் (படிமம்) உள்ள உறவை நாம் சிந்திக்கிறோம். வேறு சொற்களில் கூறுவதானால் உண்மைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் உள்ள உறவை இது குறிப்பிடும்” (நா.வானமாமலை. இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும், ப.11) என்ற கருத்தானது புறவய யதார்த்தம் என்னும் உண்மையைப் படம் பிடித்துக் கொள்ளும் மனதானது அவ்வுண்மையை கலைப்படைப்பாக மாற்றும் போது அகவயப் பரிமாணம் வெளிப்படுகிறது. கலைப்படைப்பில் உள்ளத்து உணர்வுகள் புறவயச் சூழலை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுகின்றன. அதில் தோன்றும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்ச்சிக் குறிப்புகள்  இலக்கியத்திற்குச் சுவையூட்டும் வகையினவாக அமைகின்றன. சமூக சூழல்களிலிருந்தும் படைப்பாளியின் மனம் கட்டமைக்கப்படுகிறது. எனவே கலைப்படைப்பில் உருவாகும் மெய்ப்பாடுகள் அப்படைப்பின் மூலமாக சமுதாயத்தின் இயங்கு திசையை காட்டுகின்றன.

தொல்காப்பியமானது ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்று நிலையினை நான்கு காரணிகளைக் கொண்டு குறிப்பிடுகிறது. நகை என்றால், எள்ளல், இளமை, பேதமை, மடம் என்னும் நிலைகளில் தோன்றும் என்கிறது. எள்ளுதல் என்பது இகழ்தல் ஆகும். இகழ்தல் மூலம் நகைச்சுவை தோன்றும் அது போல சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதில் நகை தோன்றும், அறிவற்ற செயல்கள், அறிந்தும் அறியாத நிலையில் குறிப்பிடும் செய்திகள் ஆகியன நகையைத் தோற்றுவிக்கும் என்று கூறுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் நான்கு காரணங்களைக் கூறுகிறது. மெய்ப்பாடுகள் உள்ளத்துணர்வினை வெளிக்காட்டும் எனப்படுவதால் சமூகச் சூழ்நிலைகளில் தோன்றும் நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன.

படைப்பாளிகள் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காகவும் இலக்கியம் படைக்கின்றனர். எனவே அவற்றில் மெய்ப்பாடுகள் அமைந்திருப்பது இயல்பாகும். சங்க காலப் புலவர்களுள் அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவரான அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்கள் பெண்ணின் அகத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. அவற்றில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் தலைவியின், தலைவனின் உள்ளத்துணர்வுகளை காட்சிப்படுத்துகின்றன. அள்ளூர் நன்முல்லையார் மொத்தம் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். குறுந்தொகையில் மட்டும் 9 பாடல்கள் பாடியுள்ளார். புறப்பாடல் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் எனப் அகப்பாடல் பத்தும், புறப்பாடல் ஒன்றும் எனப் பாடியுள்ளார். குறுந்தொகைப்பாடல்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் காம வெளிப்பாட்டையும் ஏக்கத்தையும், அச்சத்தையும், தலைவன் மீதான கோபத்தையும் கொண்டுள்ளன. அக்காலச் சமூக நிலையில் பெண்கள் மீதான உடைமைச் சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களின் உள்ளத்துணர்வுகளை குமுறலுடன் வெளிப்படச்செய்திருக்கிறது என்பதை இவரது பாடல்கள் காட்டுகின்றன. பிரிவுத் துயரை பெரிதும் வெளிப்படுத்துவனவாக குறுந்தொகைப் பாடல்கள் காணப்படுகின்றன.

“காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்

பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்

மாஎன மடலொடு தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிவுதலை வரினே” (குறுந்.32)

என்னும் பாடல் காமத்தினை வெளிப்படுத்தும் தலைவனது கூற்றாக அமைகிறது. தலைவியைச் சேர முடியாத தலைவன் காமத்தினை பொய்யாக்கும் காலப்பொழுதுகள் பற்றி தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. உள்ளத் துணர்வுகளில் மகிழ்ச்சியை குறிப்பதாக காமம் காணப்படுகிறது. இக்காமச் சுவையை பெறுவதற்கு தலைவன் தலைவியின் மீதான காதலை வெளிப்படுத்த மடலேறினால் அது தலைவிக்குப் பழியையும் தருமென்று கருதுகின்ற தலைவனின் உள்ளமானது ஏக்கத்தையும், பரிதவிப்பையும், ஏமாற்றத்தையும், பழி நேருமோ என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றது. பொய்யே காமம் என்று கூறுவதன் அறியாமையையும் தலைவனது கூற்று வெளிப்படுத்துகிறது. அறியாமை என்பது சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடாக நகையை வெளிப்படுத்துவதாகும். இங்கு மடலேறும் செயல் பேதமைத் தன்மையை வெளிப்படுத்தும் எனவே இதுவும் நகைக்கான மெய்ப்பாடு எனலாம். பழி நேருமோ என்னும் அச்சம் கொள்ளும் தலைவனின் உள்ளத்து உணர்வானது சமூக நிலையில் பெண்ணின் மீதான கட்டுப்பாடுகளையும் நிலவுடைமைச் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூக நிலையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. தலைவன் பற்றிய தோழியின் கூற்றினை விளையாட்டுக்குக் கூறியதாகத் தலைவி எண்ணிக் கொள்வதை “நகை என உணரேன் ஆயின்” (குறுந்.96) எனக் கூறுகிறாள். அறியாப்பிள்ளை என்பதும் நகையை வரவழைக்கக் கூடிய மெய்ப்பாட்டிற்கான காரணியாகும். அச்சத்தை வெளிப்படுத்தும் தலைவியின் மனமானது விடியலை எண்ணி வாடுகிறது.

“குக்கூ என்றது கோழி அதன்எதிர்

துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்

தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (குறுந்.157)

என்னும் இப்பாடல் தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தலைவனைப் பிரியும் வகையில் கோழி கூவும் காலை வந்தது என்று அஞ்சுகிறாள். கவலை கொள்ளும் தலைவியின் மனமானது தலைவனைப் பிரிவதை எண்ணி அஞ்சியதாக பாடல் குறிப்பிடுகிறது. இப்பாடலில் அச்சம் வெளிப்படுகிறது. இப்பாடலும் அக்காலத்துப் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஊரார் அறிந்து விடக் கூடும் என்ற நிலையில் தலைவன் யாரும் அறியாமல் சென்று விட வேண்டும் என்ற அச்சமும் இதில் வெளிப்படுகிறது எனலாம். வருத்தம் அல்லது அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பாடல்,

“நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்

கட்கு இன் புதுமலர் முட்பயந்தா அங்கு

இனிய செய்தநம் காதலர்

இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே” (குறுந்.202)

என்னும் பாடலில் முல்லை நிலத்து சிற்றிலைகளைக் கொண்ட நெருஞ்சி முட்களை மிதித்து விட்டால் அது துன்பத்தைத் தரும் அது போல தலைவனும் தனக்குத் துன்பம் தருகின்றான் என்று வருந்துகிறாள். இப்பாடலானது தலைவியின் அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. புலிகள் பாய்ந்து கொள்ளும் புலிகள் உள்ள காட்டினைக் குறித்து தலைவனது செயலை ஒப்பிடுகின்ற தலைவியின் கூற்றில் அச்சம் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகிறது “கோட்புலி வழங்கும் சோலை, எனைத்துஎன்று எண்ணுகோ முயக்கிடை மலைவே” (குறுந்.237) என்ற பாடல் அச்சத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது. தலைவியைத் தலைவனுடன் இணைந்து வாழ்கவென்று வாழ்த்தும் பெருமித உணர்வை,

“வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்

கூறேம். வாழியர் எந்தை செறுநர்

களிறிடை அருஞ்சமம் ததைய நூறும்

ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்

ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க

சென்றீ பெரும! நிற் தகைக்குநர் யாரோ” (அகம்.46)

என்ற பாடல் கூறுகிறது. வாயில் மறுத்துத் தோழி தலைமகனுக்குச் சொன்னது. தலைவனின் செயல்களை சினந்து கூறும் வகையில் அமையால் அவன் நாணும்படி அவனது செயலைப் பாராட்டிப் பெருமிதம் கொள்வதாக பாடல் அமைகிறது. நான் ஊடுவதற்கு நீ எனக்கு என்ன உறவு இவ்வூரில் உள்ள நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்ணை மணந்துள்ளதாக அறிந்து கொண்டேன். அவளுடன் நீ வாழ்க என்று வாழ்த்துவது போல அவனை செயலை எள்ளுகிறாள். இது தலைவனுக்கு நாணத்தை அளிப்பதாக அமையும் என்று அவ்வாறு கூறுகிறாள். இதில் தலைவிக்காகத் தோழி பேசுகிறாள். வாயில் மறுத்தல் மூலம் தன் சினத்தைக் காட்டுகிறாள். தலைவனின் செயலை எள்ளுவதன் மூலம் நகைப்புக்குரியதாக தலைவனின் செயலை மாற்றுகிறாள். தலைவன் பிறிதொரு பெண்ணுடன் வாழ்வதால் அவனை வாழ்த்துவது போல வாழ்த்துகிறாள். அதில் அவள் பெருமித உணர்வை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு பல்சுவையும் விளங்க பாடல் அமைந்துள்ளது.

“உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்

நிலம்கரி கள்ளி யங்காடு இறந்தோரே” (குறுந்.67)

என்னும் பாடல் தலைவியின் கூற்றாக அமைகிறது. தோழியிடம் கூறுகிறாள். தலைவனின் பிரிவினை எண்ணி வருந்தும் தலைவி பறவையின் அலகில் உள்ள வேப்பம்பழம் அணிகலன் செய்பவரின் கையில் பிடித்திருக்கும் பொற்காசு போல காணப்படுகிறது என்கிறாள். தலைவன் தன்னை மணந்து கொள்ளும் ஆவலை இதில் வெளிப்படுத்துகிறாள். இதில் ஏக்கமும், தலைவனின் பிரிவால் வருத்தமும் கொண்டிருக்கும் சுவைகள் வெளிப்படுகின்றன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி, பெருமிதம் என்பன போன்ற சுவைகள் ஒவ்வொரு மனிதரிடத்தும் வெளிப்படும். அவற்றை படைப்புகளில் வெளிப்படுத்தும் போது சூழல் சார்ந்து ஒவ்வொரு சுவையும் வெளிப்படும். உணர்வுகளை தூண்டும் வகையிலான மெய்ப்பாடுகளை சங்கப் பாடல்கள் பரிதும் கொண்டிருக்கின்றன. தலைவன், தலைவி இருவரிடையே நிகழும் காதல் நிகழ்வுகளில் இம்மெய்ப்பாடுகள் வெளிப்படுவதைக் காணலாம். சங்க மாந்தர்களின் உள்ளத்துணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவே இவை அமைகின்றன. அன்றைய சூழலில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் மெய்ப்பாட்டு உணர்தலில் வெளிப்படுகின்றன. ஆணுக்கு இருந்த சுதந்திரமான வாழ்வும். பெண்ணுக்கு இருந்த கட்டுப்பாடான வாழ்வும் உணர்வுகளையும் கட்டமைத்தன என்பதைக் காணலாம். அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் பெண்ணின் தகவமைதல் சார்ந்த பல்வேறு உணர்வுகள் சுவைகளாக வெளிப்படுகின்றன. பெருமித உணர்வை தலைவனை இகழ்வதற்கு வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. நகை, அழுகை அல்லது வருத்தம், தலைவனின் பேதமை போன்ற சுவைகள் பாடல்களில் வெளிப்படுகின்றன.

துணைநூல்கள்

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், கணேசையர் பதிப்பு,
  2. ந.முருகேசபாண்டியன், அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,
  3. தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை,
  4. ப.வேல்முருகன், தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் சங்கச் செவ்வியல் குறுந்தொகையும் புள்ளியியல் ஆய்வு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.