ஆத்திரத்தை ஆத்திரத்தால் வெல்ல முடியுமா?

“நேற்று எனக்கு என் கணவர்மேல் ஒரே கோபம்!” என்றாள் என் சிநேகிதி குமுதினி.

நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒரு நாள் விட்டு ஒரு நாள் குப்பையை வெளியில் போடவேண்டியது அவருடைய கடமை. அவரோ மறந்துவிட்டதுபோல் இருந்தார். எல்லா வேலையும் நானே செய்ய வேண்டும் என்றால் எப்படி? அதான் அவரோடு பேசுவதை நிறுத்திவிட்டேன்”.

அப்போது வந்த என் கணவர், “உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்?” என்று குமுதினியை விசாரித்தார், மரியாதையை உத்தேசித்து.

அவள் பதில் சொல்லுமுன் நான் முந்திக்கொண்டேன். “தெரியாது. அவள் நேற்று ராத்திரியிலிருந்து அவருடன் பேசுவதில்லை!”

நாங்கள் மூவரும் சேர்ந்து சிரித்தோம். எந்த தாம்பத்தியத்தில்தான் பிணக்குகள் இல்லை?

இம்மாதிரி – சில நாட்கள் `மௌன விரதம்’ கடைப்பிடிப்பது — உணர்ச்சிபூர்வமான ஒரு மிரட்டல்தான். சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றலாம். ஆனால், கோபத்தையோ, ஏமாற்றத்தையோ, தடுமாற்றத்தையோ வெளிக்காட்ட வேறு வழி தெரியாததால் இப்படிச் செய்கிறோம்.

பால்யப்பருவத்தில் இம்மாதிரியான நடத்தை சாதாரணமாக நிகழ்வது.

என் சக ஆசிரியை மிஸஸ்.சிங், “நேற்று எனக்கு என் மகன்மேல் ஒரே கோபம். நான் சொல்வதையே கேட்பதில்லை. Go to hell! (நரகத்திற்குப் போ!) என்று கத்திவிட்டேன்,” என்றாள். குற்ற உணர்ச்சியா, இல்லை பேச ஏதோ ஒன்று கிடைத்ததே என்பதாலா என்று புரியவில்லை.

இதையேதான் சிறுவர்களும் எதிர்பார்க்கிறார்கள். சிறுவர்கள் அப்படி நடந்தால், கவனியாது இருந்துவிடுவதே நலம்.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால், அழுதபடி தாயை அடிப்பார்கள்! தம் வேதனையை வேறு எப்படித்தான் வெளிக்காட்டுவது!

(எங்கள் வீட்டுப் பூனைக்குட்டியும் அப்படித்தான். தூக்கம் வந்துவிட்டாலோ, தொலைகாட்சியில் வருத்தமான காட்சி வந்தாலோ, தாங்கமுடியாது என்னை அடிக்கும். உணர்ச்சிப்பெருக்கை வெளிக்காட்ட அதற்குத் தெரிந்த வழி அது. காட்சி புரியாவிட்டாலும், சோக இசை புரியும் போலிருக்கிறது).

சிறுவர்களோ, பெரியவர்களோ, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விடலாமா? பல சந்தர்ப்பங்களில் நம்மையும் அறியாமல் அப்படித்தான் செய்துவிடுகிறோம்.

சிலர் எதற்கெடுத்தாலும் பிறர்மீதே குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, தாமும் நிம்மதியில்லாமல், பிறருக்கும் நிம்மதி கிடைக்காமல் செய்வார்கள். எதிர்பார்ப்புகள் மிகையாக இருப்பதும் ஒரு காரணம்.

கதை

உமாராணி செல்லமாக வளர்ந்தவள். மூன்று அண்ணன்களுக்குப்பிறகு பிறந்ததால், அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. தமிழ் திரைப்படங்களில் வரும் குழந்தைகள்போல் அவள் பெரியவர்களை எதிர்த்துப் பேசுவாள். அதையும் வியந்து பாராட்டுவார்கள், `எவ்வளவு தைரியமாகப் பேசுகிறாள்!’ என்று.

இப்படி வளர்ந்தவள், கணவன் சிவராமனும் எல்லா விஷயங்களிலும் அவளை அனுசரித்துப் போகவேண்டுமென்று எதிர்பார்த்ததில் அதிசயமில்லை. தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அளவுக்கு மீறிய கோபம் எழ, உதட்டை இறுக்கியபடி, சில நாட்கள் அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள்.

எதற்கெடுத்தாலும் அவள் குற்றம் கண்டிபிடிக்க, அவன் பதிலுக்குக் கத்த, அவர்கள் உறவே கசப்பாகிவிடுகிறது என்று சில மாதங்களில் புரிந்துகொண்டான் சிவராமன்.

`உன்னைப் பாதிப்பது எது? சொன்னால்தானே புரியும்?” என்று ஒரு தடவை சொல்லிவிட்டு, அகன்றுவிடுவதே சரியான முறை என்று தோன்றிப்போயிற்று.

இந்த குழந்தைத்தனம் தான் சொன்னதாலோ, செய்ததாலோ இல்லை, அவள் வளர்ந்த முறையால்தான் என்று தெளிந்தான். பெற்றோர், அண்ணன்மார்களை மகாராணிபோல் அதிகாரத்துடன் நடத்தியவள் இல்லையா! அவளுடைய கோபத்தை அலட்சியம் செய்தான். அவனிடம் எந்த எதிர்ப்பும் இல்லாதுபோக, உமா அந்த நடத்தையைக் கைவிட்டாள்.

`என்னுடன் ஒருவர் மோதுவதா!’ என்று ஆணவம் தலைதூக்கும்போதுதான் சச்சரவுகள் எழுகின்றன.

கதை

ஒரு பலசரக்குக்கடைக்கு நான் போனபோது, கடையை மூட அரைமணியே இருந்தது. நான் எப்போதும் போகும் கடைதான். என்னென்ன சாமான் வேண்டும் என்று நான் கூற, “முன்னாலேயே வந்திருப்பதுதானே? இவ்வளவு லேட்டா வந்து கழுத்தறுக்கறீங்களே!” என்று கடைச் சிப்பந்தி எரிந்துவிழுந்தார்.

`கடை இன்னும் திறந்துதானே இருக்கிறது? உங்கள் வேலை எங்களைக் கவனிப்பதுதானே?’ என்ற ரீதியில் நானும் ஆத்திரப்படவில்லை.

பிறர் நம்மீது ஆத்திரப்படுவது, அனேகமாக, அவர்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பதால்தானே! பிறரது நடத்தைக்கெல்லாம் நாம் பொறுப்பேற்று, குற்ற உணர்ச்சிக்கோ, கோபத்திற்கோ ஆளாவது முட்டாள்தனம்.

`நாள் பூராவும் வேலை செய்து களைத்துப் போயிருக்கிறார், பாவம்! அத்துடன், அயல்நாட்டுக்கு வந்திருப்பதால் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கம் வேறு!‘ என்று புரிந்தது.

“எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள். நானே எடுத்துக்கொள்கிறேன்!” என்று ஓரிரு சாமான்களை எடுக்க, அவருக்கு அழுகை வந்துவிட்டது.

இன்னொரு கடையில், சில வருடங்களாக வேலை பார்த்துவந்த கணபதியை எனக்குத் தெரியும், எல்லாரிடமும், மலாய், ஆங்கிலம், தமிழ், இந்தி என்று பல மொழிகளிலும் கலகலப்பாகப் பேசுவார். திடீரென்று அவர் நடத்தை மாறியது. ஒரே சிடுசிடுப்பு. ஏதாவது கேட்டால், மரியாதை இல்லாது கத்தினார்.

சற்று யோசித்ததில், அடுத்த தெருவிலேயே குளிர் சாதன வசதியுடன் அக்கடையின் பெரிய கிளை ஒன்று திறக்க, கூடுதல் சம்பளத்துடன் அதை வகிக்க இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஆத்திரப்படுகிறார் என்று ஊகித்தேன். அவரே நொந்திருக்கும்போது, நானும் அவர் மனதைக் காயப்படுத்த வேண்டுமா என்று விலகிப்போனேன்.

எப்படிச் சமாளிப்பது?

நமக்கு ஆத்திரம் ஏற்பட்டாலோ, அல்லது பிறர் நம்மீது ஆத்திரப்பட்டு அவர்களைப்போல் நம்மையும் மாற்ற முயன்றாலோ, நமது உணர்ச்சிப்பெருக்கை அடக்க சிறந்த வழி மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விடுவதுதான்.

எல்லோரிடமும் அடிக்கடி ஆத்திரப்படுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்களை, `அது அவர் வந்த வழி. அவர் எப்படியோ தம் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!’ என்று விடவேண்டியதுதான். கெடப்போவது அவரது ஆரோக்கியம்தானே!
தொடருவோம்

Leave a Reply

Your email address will not be published.