இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

இங்கிலாந்தில் இவ்வாரம் பல விடயங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக அலசப்பட்டு வருகிறது. இவற்றில் அதிமுக்கியமாக லண்டனில் கடந்தவாரம் நடைப்பெற்ற சுமார் நான்கு கொலைகள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளின் முடிவில் இருக்கும் இளைஞர்கள் கத்திக்குத்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத அசம்பாவிதங்களில் உயிரிழந்திருப்பது பலருக்கும் மிகவும் விசனத்தை அளித்துள்ளது. இலண்டன் மாநகர போலிஸ் பந்தோபஸ்து தேவையான அளவு இல்லை எனும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலண்டன் நகர மேயரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. இத்தகைய கத்திக்குத்துக்கள் சம்பந்தமான வன்முறைகளை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் பத்து வருடங்கள் எடுக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குரிய கருத்தாகிறது.

இன்றைய பிரதமராக இருக்கும் தெரேசா மே அவர்கள் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். இங்கிலாந்துப் போலிஸ்துறை உள்நாட்டு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அப்போது தெரேசா மே அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த முனைந்த நிதியமைச்சரின் திட்டப்படி போலிஸ்துறையின் செலவீனத்தை அதிக அளவில் குறைத்தார் அதன் விளைவாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இத்தகைய அரசாங்கத்தின் நிதிக்கட்டுப்பாடே இன்றைய மேற்படி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதவாறு இருப்பதன் காரணம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகளும், பொருளாதார நிபுணர்களும். போலிசாரின் கவனத்தை இத்தகைய வன்முறைச் சம்பவங்களின் பால் திருப்பப் போதுமான எண்ணிக்கை இல்லை என்று பலரது கணிப்பு. இதற்காக அரசாங்கம் போதுமான அளவு நிதியைப் போலிஸ்துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கோஷமாக இருக்கிறது. மேலும் சிலரோ இளம்பிராயத்திலேயே மாணவர்களுக்கு இத்தகைய வன்முறைகளின் விபரீதமான தாக்கங்களை விளக்கிக் கல்விமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

ப்ரெக்ஸிட் எனும் பூதம் மறுபடியும் தன் தலையை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஆமாம் டீலா? அல்லது நோ டீலா? எனும் கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தரப்பினரும் தமது வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். பிரதமரும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் விரைவில் தாம் இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் ஒரு தீர்வை எட்டப்போவதாகக் கூறிவருகிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகின்றன. இதற்கான காலக்கெடு மிக விரைவாக அண்மித்துக் கொண்டு வருகிறது. இதை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது இன்னமும் அனைவரின் மனதிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை இவைகளுக்கான தேர்தலை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் எஞ்சிய இரண்டு வருட பதவிக்காலத்தில் அவர் நிறைவேற்ற எண்ணும் சட்டங்களுக்கு ஏதுவாக இவ்விரண்டு சபைகளிலும் அவருடைய கட்சி பெரும்பான்மை பெறுவது அவசியம். அதேசமயம் பல சர்ச்சைகளை உலகளாவிய அளவில் ட்ரம்ப் அவர்கள் ஏற்படுத்தி வருகையில் எதிர்க்கட்சியான டெமகிரட் கட்சி பெரும்பான்மை பெற்றால் திரு ட்ரம்ப் அவர்களின் மீதான மக்களின் அதிருப்தியை எடுத்துக்காட்டும் எனும் வாதத்தோடு எதிர்க்கட்சியும் தமது பெரும்பான்மைக்காகப் பாடுபட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்து விட்டது. செனட் சபையின் பெரும்பான்மையை ரிபப்ளிகன் கட்சியும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையை டெமகிரட்ஸ் கட்சியும் பெற்றுக் கொண்டன. இது தமது கட்சிக்கு கிடைத்த பெரும் ஆதரவு என்று ட்ரம்ப் அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும். இனி அவரது கொள்கைகளைச் சட்டமாக்குவதில் சிறிது சிரமத்தை எதிர்கொள்வார் என்பதே அரசியல் அவதானிகளினது அனுமானம்.

கடைசியாக இன்று 14.11.2018 கிடைக்கும் செய்திகளின் படி இங்கிலாந்து அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து வெளியேறுவதற்கான உடன்படிக்கையை எட்டிவிட்டன. நேற்று மாலையிலிருந்து இங்கிலாந்துப் பிரதமர் தமது அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு அவரது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் இவ்வுடன்படிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதைத்தொடர்ந்து இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக விடப்படும். பாராளுமன்றத்தில் பிரதமரின் இவ்வுடன்படிக்கை வெற்றியடைவது மிகவும் கடினம் என்பதே அவதானிகள் கருத்து. தோல்வியுற்றால் அடுத்தது என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுமா? இல்லை உடன்படிக்கை எதுவும் எட்டாமல் இங்கிலாந்து வெளியேறுமா? விடையில்லாத பல கேள்விகள் அனைவரின் மனங்களிலும் தொங்குகிறது. இவற்றிற்கு வரும் நாட்கள் பதிலிறுக்குமா?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *