1. அபகரிப்பு
வெயிலற்ற மழைக்காலப் பொழுதுகளில்
தனித்துத் திரிகிறேன்
வாயு வெளிகளினூடாகப் பறக்கும் பறவையொன்று
உணவின் திரளைப் பறித்துக்கொண்டது
அதன் சகாக்களுடன் விருந்து
தலைசாய்ந்து இறுமாந்து நோக்கிய அதன் ஆணவம்
அறிவுஜீவிகளின் அவையில்
அலைகளின் நுரையெனக் கரைந்தது
கருந்திராட்சைக் கூந்தலில் சூடிவிட்டார்கள்
சொற்களின் மகுடத்தை
தாழம்பூ மணந்து கிடக்கிறது வீடுவரை
2. சட்டகம்
சூரிய விரல்கள் அள்ளித் தெளித்திருக்கும்
வெள்ளிக் காசுகள் தரையில்
அதில் லயித்தவன் தன் சொற்களைத் தொடுக்கிறான்
அம்மா உன்னக் கல்யாணம் பண்ணிக்கிறேன்
நான் அவனை அணைத்துக்கொண்டேன்
மழலை என்னைச் சுற்றி வளைத்தது
புள்ளியாகிப் போவதா
எங்கும் பரவிக் கிடப்பதா
பறத்தலின் சுகமா
எது பிம்பம்
அகப்படவில்லை அன்பின் வடிவு
உனக்கு என்னைப் போலொரு பெண்
நீங்களிருவரும் தாமரையும் நாயகனும் அல்ல
ஆற்றல்களின் இணை என்றேன்
அவன் ஒரு பெயரைத் தேட ஆரம்பித்திருந்தான்.

Leave a Reply