வாழ்ந்து பார்க்கலாமே 49

மகிழ்ச்சியை எங்கே தேடுவது? – க. பாலசுப்ரமணியன்

“என்னங்க, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரித் தெரியுதே ” என் மனம் என்னைப் பார்த்துக் கேட்டது.

“அப்படியா… உங்கள் கண்ணுக்கு வேண்டுமானால் நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தெரியலாம். எனக்குத் தானே தெரியும் என் துயரம்…” நான் சற்றே முனகினேன்.

பல நேரங்களில் நமக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா அல்லது துயரத்தில் இருக்கின்றோமா என்று கூடாது தெரியாமல் இருக்கின்றோம். எது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகின்றது எது துயரத்தைத் தருகின்றது என்றுகூட அறியாமல் தவிக்கின்றோம்.

“அப்படியில்லீங்க.. நல்ல பசித்த வேளையில் அருமையான சுவையான சாப்பாடு கிடைத்தது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்கிறார் ஒருவர்.

“சார். ரொம்ப நாள் கழித்து நான் எதிர்பார்த்த பதவி உயர்வு எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சியாக உள்ளது.” என்கிறார் இன்னொருவர்.

“சாதித்துவிட்டேன் சார். என்னிடம் இதைச் செய்ய முடியாது என்று சவால் விட்டவர்கள் முகத்தில் கரிபூசிய மாதிரி நான் சாதித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது. ” இது இன்னொரு நண்பர்.

இப்படி பல பேர்கள் நடுவில் “அந்தப் பையன் படிக்க ரொம்ப கஷ்டப்படுகின்றான். அவனை சரியாக ஆதரிக்க யாருமில்லை. ஏதோ என்னால் முடிந்தது அவனுக்கு ஒரு வருட கல்லூரிப் படிப்புக்கான பணத்தை நான் கட்டினேன். ரொம்ப மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது” என்று சொல்லும் இன்னொருவர்.

தங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களை பரிமாறிக்கொள்ளும் உலகில் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது என்ற கேள்வி நம்முன்னே எப்பொழுதும் கேள்விக்குறியாகவே நிற்கின்றது.

மகிழ்ச்சியின் பரிமாணங்களை அர்ச்சுனனுக்கு விளக்கும் கண்ணன் பகவத் கீதையில் மகிழ்வின் மூன்று பரிமாணங்களை விளக்குகின்றார். முதலாவதாக புலன்களால் கிடைக்கும் மகிழ்ச்சி. உணவு, தூக்கம், சிற்றின்பம் போன்ற பல அனுபவங்களால் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. ஐம்பொறிகளின் பசியினால் தூண்டப்பட்டு நாம் செய்யும் பல செயல்களினால் நமக்கு கிடைக்கின்றது. இது சிறிய நேரத்திற்கு மட்டும் கிடைக்கக் கூடியது. இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்வுகள் காலாவதியாகும் பொழுது இதன் தேவைகளும் தாக்கங்களும் மீண்டும் மீண்டும் நம்மை வாட்டிவதைக்கும். இது ஒரு தீராப் பசி.

இரண்டாவதாக பதவி, புகழ், மரியாதை, மற்றும் நம்முடைய தொழில் சாதனைகளால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. இது முந்தியத்தைக் காட்டிலும் சற்றே உயர்வானது. இருந்தாலும் இவைகளும் காலத்தால் கட்டுப்பட்டவை. தொடர்ந்து புகழும், பதவியும், மரியாதையும் கிடைக்கும்வரை மனம் ஒருவிதமான பெருமையையும் நிறைவையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். அவை நீங்கியவுடன் அவைகள் இல்லாத தாக்கத்தில் மனம் வேதனையில் துவண்டு விடும். அவை ஒரு மனிதனின் உண்மை நிலையை மறைத்து மனதில் ஒருவித மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கும்.

மூன்றாவதாகக் கிடைக்கின்ற மகிழ்ச்சி நம்முடையது என்று நாம் நினைக்கின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், தனித்துவத்தை விட்டு விலகி இந்த உலகிற்கு நம்மை அர்பணித்துக் கொள்ளும்பொழுதும், சேவை மனப்பான்மையுடன் செயல் படும்பொழுதும், தியாக மனப்பான்மையுடன் செயல்படும்பொழுதும் கிடைக்கின்ற ஒரு நிறைவே ஆகும். இதுவே உண்மையான மகிழ்ச்சி.

எனவே மகிழ்ச்சியின் பல நிலைகளை நாம் புரிந்துகொண்டு செயல்படும் பொழுது நமக்கு அதன் உண்மையான பொருளும் அதனுடன் சேர்ந்த உயரிய உணர்வுகளும் தெளிவாகின்றன.

“மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமே மகிழ்ச்சிதான்” என்று பகவான் ரமண மகரிஷி கூறுகின்றார். “மகிழ்ச்சியைத் தேடுவது தவறல்ல. ஆனால் அதை உன்னுள்ளே தேடவேண்டும். வெளியே தேடுவதால் பயனில்லை.” இதே கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல அறிஞர்கள் “துயரம் நம்மைத் தேடி வருவதில்லை. நாம்தான் துயரத்தைத் தேடித் செல்லுகின்றோம்” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “மகிழ்ச்சியே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பொருளுமாகும்.” என்று பேரறிஞர் அரிஸ்டாட்டில் விளக்குகின்றார்.

ஆங்கில மொழியின் மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய மில்டன் தனது பாரடைஸ் லாஸ்ட் என்ற கவித்தொகுப்பில் “மனம் அது இருக்கும் இடத்தில தான் இருக்கின்றது. அதை சொர்கமாகவோ அல்லது நரகமாகவோ ஆக்குவது நமது கையில்தான் இருக்கின்றது.” (“The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven..”)என்று எளிதாக எடுத்துரைக்கின்றார்.

“அதுசரிங்க… இந்த மகிழ்ச்சியை அடைய என்னதான் வழி?” தூரத்திலிருந்து ஒருவரின் கேள்வி எனது காதில் விழத்தான் செய்கின்றது.

கெளதம புத்தர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கூறுகின்றார்.
“மகிழ்ச்சிக்கு வழியென்று எதுவும் கிடையாது. மகிழ்ச்சியேதான் வழி.”(There is no path to Happiness: Happiness is the path” ) என்ன அருமையான வார்த்தைகள் !

எப்பொழுது மகிழ்ச்சியை நமது உள்ளுணர்வாக ஏற்றுக்கொள்ளுகின்றோமோ அப்பொழுது நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும் மகிழ்ச்சியைக் காண முடியும். செய்யும் செயல்களின் பலன்களில் கிடைக்கும் மகிழ்வைவிட அதைச் செய்யும் செயல்பாடுகளிலும் அந்த நோக்கத்திலும் அந்த முயற்சியிலும் நமக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கின்றது.

இதை நன்கு உணர்ந்து வாழும் பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சியின் முத்திரை பதிந்திருக்கும்.

இனிய புத்தாண்டில் ஒவ்வொரு நாளும் அனைவரும் மகிழ்வோடும் அமைதியோடும் வாழ இறைவன் அருள்புரியட்டும். நல்வாழ்த்துக்கள். !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.