தோழா கேள்
– ஏறன் சிவா
எதிர்பார்த்த உன்வெற்றி
இடம்மாறிப் போகலாம்!
புதிதாகத் தோல்விகளும்
போர்த்தொடுத்து நிற்கலாம்!
சதியெல்லாம் உனக்கெதிராய்
சாட்டையைச் சுழற்றலாம்!
சிதறாதே! சிதையாதே!
சிறகுண்டு பறந்துபோ!
நெஞ்சத்தில் உதிப்பதெல்லாம்
நேராமல் தவறலாம்!
பஞ்சுபோன்ற உன்னிதயம்
பாரத்தைச் சுமக்கலாம்!
நஞ்சுணவை அமிழ்தமென்று
நம்பினோரே ஊட்டலாம்!
அஞ்சாதே! துஞ்சாதே!
அத்தனையும் கடந்துபோ!
நாளெல்லாம் உன்நிலையோ
நலிந்துகொண்டே இருக்கலாம்!
மாளாத துயரத்தில்
மனம்சிக்கித் தவிக்கலாம்!
தாளாத உன்மேனி
தளர்ந்தொருநாள் முடங்கலாம்!
வீழாதே! தோழா..கேள்
விடிவுவரும் தொடந்துபோ!
-06/02/2019