(Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை
முனைவர் இரா.வீரபத்திரன்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
கோவை.
ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை
அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் பரந்த உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்த பெருமை, நம் முன்னோர்களையே சாரும். தமிழ்ப் பாரம்பரியத்தில் உதித்த மரபு வழிப்பட்ட நெறிமுறைகள், இன்று நமது வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு படிப்பினையாகவும் விளங்குவதை நாம் அறிய முடிகிறது. அதில் கலையின் ஒரு கூறாகக் குரவைக் கூத்து இடம் பெறுகிறது. அக்கூத்து ஆயர் குடியில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
குரவைக் கூத்து
தமிழ்ப் பாரம்பரியக் கலையாக்கங்களுள் கூத்துக் கலையும் ஒன்று. அத்தகைய கூத்துக் கலைகளுள் குரவைக் கூத்தென்பது முல்லை அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முட் கைகோர்த்தாடும் கூத்து என்றும், மகளிர் விழாக் காலங்களில் நாவால் குழறி இடும் மகிழ்ச்சியொலி என்றும் குறிப்பிடப்படுகின்றது.1 குறிஞ்சி நில மக்கள் ஆடும் கூத்து குன்றக் குரவை என்றும் முல்லைநில மக்கள் ஆடும் கூத்து ஆய்ச்சியர்க் குரவை என்றும் சிலப்பதிகாரம் தனித் தனிக் காதைகளில் குறிப்பிடுகின்றது. மேலும் குரவைக் கூத்தென்பது எழுவர் மங்கையர் கைகோர்த்து ஆடும் ஆட்டமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.2
குரவை என்பது, காமம் அல்லது வெற்றி தொடர்பாக ஆடப் பெற்றது. குரவைக் கூத்தென்பது பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுகளுள் ஒன்றாகும். குரவை என்பதற்குத் தெற்றியாடல் என்ற ஒரு பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
குரவை தழூஉதல்
குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரையொருவா் தழுவிக் கொள்ளுதல், குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும். இதன் பொருட்டே குரவையாடுதலைக் குறிப்பிடும் பொழுது பெரும்பாலான இலக்கியங்களில் குரவைத்தழூஉதல் என்று குறிக்கப்பட்டுள்ளது. தழுவுதலைப் பற்றியே “தழூஉ” என்றே குரவை குறிக்கப்பட்டது.
“தாதெரு மன்றத் தயவர் தழூஉ” 3
என்று முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.
தலைக்கை தருதல்
குரவைக் கூத்துகளில் தலைதருதல் அல்லது தலைக்கை தருதல் என்ற வழக்கம் இருந்தது. முதன்முதலில் ஆண்பாலரோ பெண்பாலரோ தழுவி ஆடும்முறை இருந்திருக்க வேண்டும். இருபாலரும் இணைந்து ஆடும் நிலையில் தலைக்கை தரும் வழக்கம் வழக்கில் வந்திருக்க வேண்டும். ஆடவரும் பெண்டிரும் இணைந்து குரவை நிகழ்த்தும் வேளை, தழுவுதல் வேண்டி இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். ஆடிய வண்ணமே தழுவும் தமது இணையை மாற்றுவர். ஒரே பிணையோடு இறுதிவரை ஆடுவதில்லை. இவ்வாறு பிறரைச் சேர்த்து ஆரத் தழுவி ஆடும் குரவையில், ஒருவர் முதன்முதலில் பிணைவேண்டிய வண்ணம் கையினைத் தருதலே தலைக்கை தருதல் எனப்பட்டிருத்தல் வேண்டும். இத்தழுவுதல் பல பிணையாக முறைப்படி நிகழும் வேளை, குரவை காண்போருக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும்.
‘தலைக்கை தருதல்’ என்னும் கைகோர்த்தலில் கற்கடக்கை (நடுவிரல்) விரலும், அணிவிரலும், முன்னே நின்று மடித்து மற்றை விரல்கள் மண்டலித்து நின்றாட வேண்டும் என்ற நெறி வலியுறுத்தப்படுவதனை,
“செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து
அந்நிலையே யாடல் ஆராய்ந்துளார்” 4
என்னும் சிலப்பதிகார அடிகள் சுட்டுகின்றன.
அரசர்களுள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகளிர்க்குத் தலைக்கை தந்து ஆடியதாக,
“தழூஉப் பணை ஆக
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து”5
என்று பதிற்றுப்பத்துக் குறிப்பிடுகிறது.
குரவைக் கூத்தானது கள்ளுண்ட மயக்கத்தில் ஆடப்பட்ட நிலையினை,
“வாங்கு அமைப் பழனிய தேறல் மாக்கள்
வேங்கை முன்றில் குரவை அயரும்”6
“நறவு நாட்செய்த குறவர் தம் பெண்டிரொடு
…………………. அயரும் குரவை”7
என்ற சங்கப் பாடல்கள் விளக்குகின்றன.
குரவைக் கூத்தின் சமுதாயப் பயன்
சமூக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவே கூத்து முதலிய கலைகள் உருவாயின. சமூக உறவு என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள உறவு. ஒரு குடும்பத்திற்கும் இன்னொரு குடும்பத்திற்கும் உள்ள உறவு என்று அத்துணை உறவுகளையும் ஒருங்கிணைக்கும் சொல்லாட்சியாகும். சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த இத்தகைய நிகழ்த்து கலைகளே ஊடகங்களாகச் செயல்பட்டன.
மேலும் ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுகளைப் போலவே குரவைக் கூத்தும் சிறந்த பொழுது போக்காக விளங்கியது என்று பாக்கியமேரி குறிப்பிடுவார்.8
குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப் பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று பலவித இசைக்கருவிகள் குரவையில் பயன்பட்டன.
முல்லைக்கலியில் குரவைக் கூத்து
ஏறு தழுவுதல் நடந்து முடிந்தபின் ஊர்மன்றத்தில் குரவைக் கூத்து நடைபெறும். முல்லைக் கலியில் ஊர் மன்றமாவது சிறுகுடி என்றும் தாதெரு மன்ற என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குரவைக் கூத்தாடும் மகளிர், ஏறுகளைத் தழுவியடக்கிய ஆயர்குல இளைஞர்கள் அணிந்துள்ள மாலை, அவர்களின் தோளாற்றல், ஏறுகளை அடக்கிய அவர்தம் ஆண்மைச் செயல், அவ்வீரர்களுக்கு மனைவியராகப் போகும் மங்கையரின் புன்முறுவல் தவழும் இன்முகங்கள், அவர்தம் மென்மையான தோள்கள் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுவர். அதனை,
“பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு”9
என்றும்,
“பண்ணமை யின்சீர்க் குரவையுள் தென்கண்ணித்
திண்டோள்திறலொளி மாயப்போர் மாமேனி
அந்துவ ராடைப்பொதுவனோ டாய்ந்த
முறுவலாள் மென்றோன்பா ராட்டிச்சிறுகுடி
மன்றம் பரந்த துரை”10
என்றும் முல்லைக் கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன.
தம்மை விரும்பும் ஆயர்குல இளைஞர் ஏறுதழுவித் தம்மை மணக்க முயலாது காலம் தாழ்த்துவதை அறிந்த ஆயர்குல மங்கையர், அவர்கள் விரைவில் ஏறுதழுவித் தம்மை மணக்க முன்வர வேண்டும் என்னும் கருத்தமைய பாடிக் குரவையாடுவதும் உண்டு.
மேலும் குரவைக் கூத்தாடுங்கால் தம் குலக் கடவுளாகிய திருமாலையும் அவர் உறையும் கானகத்தையும், தாம் வாழும் நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை வாழ்த்திப் பாடுவதையும் ஆய மகளிர் தம் குலமரபாகக் கொண்டிருந்தனர்.
இதனை,
“குரவை தழீஇயாம் மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசில்வான் முந்நீர் பரந்த தொன்னிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே”11
என்ற முல்லைக்கலியடிகள் புலப்படுத்துகின்றன.
சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர் ஆயர்சேரியில் நேர்ந்த தீய நிமித்தங்களால் துன்பம் நேரப் போவதை உணர்ந்து, ஆயர்குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை நீக்குவதற்குத் தம் குலதெய்வமான திருமாலை வேண்டி குரவைக் கூத்தாடினா் என்பதை,
“…….. ….ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல்
நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை ஆடுதும்
யாம்என்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே”12
என்ற பாடலடிகளால் அறிய முடிகின்றது.
ஏறுதழுவி வென்ற இளைஞர்களும், அவரை மணக்கப் போகும் மங்கையரும் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடி மகிழ்வதுமுண்டு.
“பயிலிதழ் மலருண்கண்
மாதர் மகளிரும் மைந்தரு மைந்துற்றுத்
தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ”13
திருமணத்திற்குப் பின் மனைவியர் தம் கணவன்மாரின் கையொடு கைகோர்த்து ஆடி மகிழ்வதும் உண்டு.
“தம்புல ஏறு பரந்தர உய்த்ததம்
அன்புறு காதலர் கைபிணைந் தாய்ச்சியர்
இன்புற் றயர்வர் தழூஉ”14
ஆயமகளிர் ஏறுகளை அடக்கிய தம் கணவன்மாரின் பெருமைகளை ஊரார் புகழ்ந்து பேச, அதைத் தாம் கேட்டு இன்புற வேண்டும் எனவும் பாடிக் குரவைக் கூத்தாடுவர். இதனை,
“கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்றூரார்
சொல்லுஞ்சொற் கேளா அணைமாறியாம் வருஞ்
செல்வமெங் கேள்வன் தருமோவெங் கேளே”15
என்ற அடிகளால் உணரலாம்.
பழந்தமிழர்கள் இறைவனை வழிபடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் கூத்துகளை நிகழ்த்தி வந்தனர். குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, பிணைக் கூத்து போன்ற கூத்துகளை நிகழ்த்தினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குரவைக் கூத்தானது பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டதாக இருப்பினும், அன்றைய இளைஞர்களின் ஆண்மைச் செயலை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அக்கால மங்கையர்கள், தம்மை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக தூது விடுத்துக் குரவைக் கூத்தாடினர். ஏறு தழுவிய வீரம் நிறைந்த ஆண்களை மணப்பதே பெண்களுக்குப் பெருமையாக இருந்தது. ஊரார் தம் கணவரைப் புகழ்ந்து பேசுவதையே விருப்பமாகக் கொண்டு குரவைக் கூத்தாடினர் என்பது அறியலாகிறது.
இன்றைய காலக் கட்டத்தில் கூத்தென்பதை அம்மன் கோவில் விழாக்களில் மட்டுமே காண முடிகின்றது. அக்கூத்திலும் பழைய புராணக் கதைகளைக் கதைக் களமாக்கி கூத்தாடி வருகின்றனர். இன்றைய சூழலுக்கு ஏற்ப இயற்கையைப் பாதுகாத்தல், உலக வெப்பமயமாதலைத் தடுத்தல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், மனித நேயத்தை வளர்த்தல் போன்ற கருதுகோள்களை மையமாக வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் கூத்துக் கலையும் அழியாமல் வளரும். நமது சமுதாயமும் மேன்மை அடையும்.
குறிப்புகள்
- தமிழ்ப் பேகராதி தொகுதி -2 ப. 1012.
- ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சந்தாமணி, ப. 579.
- முல்லைக்கலி 103:03
- ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 65-66.
- பதிற்றுப்பத்து, 52:4-5.
- புறம். 129:2-3.
- மலைபடுகடாம், 320- 323.
- காலந்தோரும் தமிழர் கலைகள், முனைவர் பாக்கியமேரி, ப. 69.
- முல்லைக்கலி, 104:63-64.
- மேலது, 120:35-39.
- மேலது, 103:75-79.
- ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 22-25.
- மேலது, 103:60-61.
- மேலது, 106:32-33.
- மேலது, 106: 43-45.
துணைநூற்பட்டியல்
- ஆலிஸ். அ முனைவர் (உரை), பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை -98, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007.
- கதிர்முருகு டாக்டர், பத்துப்பாட்டு, சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை -14, முதற் பதிப்பு -ஜுன் 2009.
- சிங்காரவேலு முதலியார் ஆ., அபிதான சிந்தாமணி, சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, முதற் பதிப்பு – 2004
4 . நச்சினார்க்கினியர் (உரை), கலித்தொகை, கழக வெளியீடு, மூன்றாம் பதிப்பு–1999
- பாக்கியமேரி, எஃப். முனைவர்., காலந்தோறும் தமிழர் கலைகள், வேந்தன் பதிப்பகம், சென்னை, முதற் பதிப்பு – 2005.
- ஸ்ரீசந்திரன் .ஜெ, சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம், 141, உஸ்மான் சாலை, தி.நகர், ஒன்பதாம் பதிப்பு- ஆகஸ்டு 2001.
———————————————————————————————————-
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஆயர் குடியில் குரவைக்கூத்து ஆடும் முறை மற்றும் தேவைகள் குறித்துக் கட்டுரையாளர், சங்க இலக்கியப் பாடல்கள் வழி விளக்க முயன்றுள்ளார். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான இலக்கியங்களில் குரவைக் கூத்திற்கான பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டில் குரவைக் கூத்தின் முக்கியத்துவம் பற்றி ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளுடன் குரவைக் கூத்து எங்ஙனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை ஆய்வாளர் நல்ல முறையில் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் குரவைக் கூத்தை விழிப்புணர்வு சார்ந்து பயன்படுத்தினால் கலையும் வாழும் மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற ஆய்வு முடிவு நன்று. மேலும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது, கலைக்கும் சமூகத்திற்குமான தொடர்புகள் குறித்து விவாதிப்பது தேவையான ஒன்று. இதையும் ஆய்வாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டும்.
———————————————————————————————————-