– செண்பக ஜெகதீசன்

உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு

(குறள் – 798) (நட்பாராய்தல்)

 

புதுக் கவிதையில்…

 

ஊக்கம் குறையவைக்கும்

செயல் பற்றி

உள்ளுதலே வேண்டாம்..

அதுபோல

துன்பம் வரும்போது

துணை வராமல் கைவிட்டு,

தூர விலகிடுவார்

நட்பையும்

ஏற்றிடவே வேண்டாம்…!

 

குறும்பாவில்…

 

ஊக்கம் குறைக்கும் செயலையென்றும் நினைக்காதே,

உறுதுணையாயின்றி துன்பம் வரும்போது விட்டுச்செல்லும்

நட்பினை ஏற்காமல் தவிர்த்திடுக…!

 

மரபுக் கவிதையில்…

 

ஊக்கம் குறைய வகைசெய்யும்

உதவாச் செயலது வாழ்வினிலே

ஆக்கம் எதையும் தருவதில்லை

அதனால் வேண்டாம் அதன்நினைவே,

தாக்கும் துன்பம் வரும்போது

துணையாய் நின்றே உதவாமல்

போக்குக் காட்டியே ஓடிவிடும்

புல்லர் நட்பினை ஏற்காதே…!

 

லிமரைக்கூ..

 

வேண்டாம் ஊக்கந்தரா செயலின் எண்ணம்,

ஏற்றிடாதே துன்பத்தில்நமைக் கைவிட்டோர் நட்பை,

இனியுமவர் நமைத்தொடரா வண்ணம்…!

 

கிராமிய பாணியில்…

 

நட்புகொள்ளு நட்புகொள்ளு

நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு..

 

நெனைக்கவேண்டாம் நெனைக்கவேண்டாம்

நமக்கு ஊக்கந்தராத செயலெதயும்

நெனைக்கவேண்டாம் நெனைக்கவேவேண்டாம்..

 

அதுபோல

துன்பத்தில தொணநிக்காம

கைவுட்டுப் போறவன் நட்ப

கடுகளவும் ஏத்துக்காத,

கண்டிப்பா ஏத்துக்காத..

 

அதால,

நட்புகொள்ளு நட்புகொள்ளு

நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *