– மீனாட்சி பாலகணேஷ்  

குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

                                   (7. அம்புலிப் பருவம்)

இத்துணை கூறியும் எதற்கும் அசைந்து கொடாத சந்திரனிடம் சலிப்போடு,”பார் அம்புலியே! இவன், என் குழந்தையாகிய இச்சிறுவன், கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக் கூறுகிறாள் தாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், வில் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த அழகனை வந்து தரிசித்து வணங்கிப் போ! இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகாதே!’ எனச் சந்திரனை மறைமுகமாக எச்சரிக்கிறாளாம் தாய்!

இதனை பேத உபாயம் என எண்ண இடமுள்ளது. மனத்தில் வேறுபாட்டை (பேதத்தை, கலக்கத்தை) உண்டுபண்ணி, பணியச் செய்தல்.

            தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்

          கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

          உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்

          விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.

                                                            (பெரியாழ்வார் திருமொழி – 5)

இளவரசி மீனாட்சியின் தாயும் சேடியரும் அவளுடன் விளையாட வராத நிலவினை, “நீ என்ன இழிசெயல்களையெல்லாம் செய்துள்ளாய், பாண்டியர் குலக் கொழுந்தாகிய மீனாட்சி இவளைக் கண்டு, மகிழ்ந்து வாழாமல், உணவையும் உடையையும் இழந்து, சிறுமிகள், எளிய மண்பாத்திரத்தில் சமைக்கும் கூழாகிய புதுமையான உணவினை இரந்து உண்டு களங்கம் உண்டாக்கினாய். இதுவும் போதாமல், உன்னுடன் ஒளி நிறைந்த வான்வெளியில் திகழும் உனக்கு ஒப்பானவனான சூரியன் எனும் ஒருவன் தன் கைகளால் வாரியுண்ட மிச்சிலை, மிச்சத்தை, யாரும் காணாமல் நள்ளிரவில் வாரியுண்டு அவன்பின் ஓடுகிறாய், என்ன இழிவு இது!” எனக் கூறிப் பழிக்கின்றனர். தங்கள் செல்வியுடன் வந்து விளையாடாமல் இவ்வாறெல்லாம் இழிசெயல்கள் செய்யும் சந்திரனிடம் அவர்களுக்குச் சினம் ஏற்படுகின்றது.

            ………………………………. வாழாமல் உண்ணமுது

                             கலையொடும் இழந்து வெறுமட்

          கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவுபூண்டொரு

                             களங்கம்வைத் தாயி துவலால்

          ஒளி தூங்கு தெளிவிசும்பினினின்னொ டொத்தவன்

                             ஒருத்தன் கரத்தின் வாரி

          உண்டொதுக் கியமிச்சில்நள்ளிருளில் அள்ளியுண்

                             டோடுகின் றாயென் செய்தாய்….

தாயின் அன்பு மற்ற எந்த சமாதானத்தையும் ஏற்பதில்லை;  தன் குழந்தையே முதன்மை. அனைவரும் அவளுக்குப் பணிசெய்தல் வேண்டும் எனும் எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தற்காலத்தும் சில தாய்மார்கள், “வந்து என் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடினால் நீ குறைந்தா போய்விடுவாய்?” என மற்ற சிறுவர்களைக் கேட்பதனைக் கண்டுள்ளோம் அல்லவா? அதுபோன்றதே இதுவுமாகும்.

பேரூர் பச்சைநாயகியம்மையின் தோழியரும் செவிலித் தாயரும் அம்புலியிடம், “நீ இவளுக்கு சமமானவள் எனக் கருதி இவள் உன்னை விளையாட அழைக்கிறாள்; ஆயினும் உங்கள் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு: நீ மாதம் ஒருநாள் மட்டுமே முழுமையான உருவை உடையவன்; இவளோ பரிபூரணனான சிவபிரான் தனது நெஞ்சில் இடையறாது எண்ணிக்கொண்டிருக்கும் நிறைந்த பெருமை பொருந்தியவள்.”

            மாதம் ஒருநாள் புரணம் ஆதல் உற, மிக்க பிர

                   மாதம் உளை நீ; இவள் அருள்

                   மன்னு பரிபூரணன் உள் உன்னும் விரிகாரண மெய்

                   மாட்சி நிறை காட்சி உடையாள்;

குற்றம் பொருந்திய உனது அமுத கிரணங்களை, காம மிகுதியால் பெண்களின் குற்றேவல் புரியும் மாந்தர்களே விரும்புவார்கள். ஆனால் இவளுடைய கண்களின் அருட்கிரணங்களான நோக்கம் பட்டவர்கள் (அடியார்கள்) மிகுந்த உயர்வான வீடாகிய வீடுபேற்றினை அடையவல்லோராவர்.

                    கோதமையும் உனது சுதை கொண்டவர்கள் ஒண்தொடியர்

                   குற்றேவலாளர்; இவள்கண்

                   கொண்டபேர் தம்கண் எதிர்கண்ட பேர்க்கு உயர்வீடு

                   கொள்ளைகொள நல்கவல்லோர்;

குளிர்ச்சி பொருந்திய உடற்பகுதிகளை ஆதவனிடமிருந்து மாதத்தில் அமாவாசை எனப்படும் ஒரு நாளில் ஏற்கமுடியாத சிறுமை படைத்தவன் நீ; இவளோ தனது பெருமை வாய்ந்த காதணியால் ஒரே நாளில் கோடி நிலவுகளை உண்டு பண்ணிவிடும் திறன் வாய்ந்தவள்: (ஈண்டு அபிராமி பட்டருக்கு அன்னை தன் காதணியை வானிலெறிந்து அமாவாசையன்று முழுநிலவைக் காட்டிய கதை கூறப்பட்டுள்ளது).

                    சீதள இயல்கலைகள் ஆதவனிடத்து ஒரு

                   தினத்து அதிகம் ஏற்கமுடியாச்

                   சிறியை நீ; தாயிவள் தன் நறிய காதணிகோடி

                   திங்கள் ஓர்தினத்து ஆக்குமால்..

“ஆயினும் இவள் தன்னுடைய கருணையால் உன்னைத் தனக்குச் சமமானவனாகப் பாவித்து விளையாட அழைக்கிறாள்: வந்துவிடுவாய்,” எனக் கூவி அழைக்கின்றனராம்.

இவ்வாறு உங்கள் இருவருக்குள்ளும் பேதங்கள், வேற்றுமைகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது குழந்தை விளையாட அழைக்கிறாள் எனும் நயம் மிகவும் இரசிக்கத்தக்கதாம். இதனைப் பேத உபாயம் என்பர்.

                                                            *********

சேடியரும் செவிலியரும் இவ்வாறெல்லாம் வேண்டியும் வராத சந்திரனைக் கடைசியாகப் பயமுறுத்தியாவது வரவழைக்க முயல்கின்றனர்.

“சிங்கக்குட்டியான எனது இந்தக் குழந்தையை இவன் சிறுவன், என எண்ணி விடாதே அப்பா! சிறுவன் என்பதற்குப் பொருள் மகாபலியிடம் (மாவலி) சென்று கேட்டுணர்ந்து கொள்வாயாக! சிறு வாமனனாக, மாணிக்குறளனாக வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்டான் தெரியுமா? நிறைமதியே! இவன் உன்னை விரைவாக வருமாறு அழைக்கிறான். உன் பிழையை- இவன் சிறியவன் என நீ எண்ணுவதை- உணர்ந்தால் நீ வந்து இவனுக்குத் தொண்டு செய்யும் உரிமையைப் பெறலாம் அல்லவோ?” என அறிவுரை கூறுகிறாளாம் தாய். இதனையும் பேதம் அல்லது தண்ட உபாயம் எனக் கருதலாம்.

           சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்

          சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்

          சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்

          நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

                                                                        (பெரியாழ்வர் திருமொழி-5)

சந்திரன் எதற்குமே மசியவில்லை! தாய்க்குச் சினம் கட்டுமீறுகின்றது! கூறுவாள்: “தனது பெரிய கைகளால் வெண்ணெய்த் தாழியிலிருந்து வாரி வாரி அமுது செய்ததனால் பெருவயிறு உடைய எங்கள் கண்ணன் உன்னை அழைக்கிறான் பார்! நீ வரவில்லையானால் உன்கதி அதோகதி தான்! சக்கராயுதத்தினால் உன் தலையைச் சீவி விடுவான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. உயிர் மீது உனக்கு ஆசையுண்டானால், மகிழ்ந்தோடி எம் ஐயனோடு விளையாட வா,” என அச்சம் காட்டி அழைக்கிறாள். இது தண்ட உபாயம்!

            தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கி

          பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்

          ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்

          வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

                                                            (பெரியாழ்வர் திருமொழி – 5)

அம்புலிமாமா அசைந்து கொடுத்ததோ இல்லையோ அருமையான இலக்கிய நயம் பொங்கும் ஆழ்வார் பாசுரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளுணர்ந்து படித்து மகிழலாமே!

தண்டனை கொடுப்போம் என்றுகூறி அம்புலியை மிரட்டுகிறார்கள் பெண்கள்!

ஒருத்தி சொல்கிறாள்: “ஏ அம்புலியே! தான் கூப்பிட்ட உடனே நீ ஏன் வரவில்லை என்று மீனாட்சி அம்மை எங்களைக் கேட்டாள். அவள் உன் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். நாங்கள் என்ன சொன்னோம் தெரியுமா? ‘அம்மா, உன் ஒளி பொருந்திய முக அழகின் முன் தோற்று ஒதுங்கியதால் அவன்  உன் எதிரில் வர நாணம் கொண்டான் போலுள்ளது; அல்லது சிவபிரானின் முடியிலுள்ள பாம்புகள் அவன் பின் வந்து துன்பம் விளைவிக்கும் என அஞ்சியே வராமல் காலம் தாழ்த்துகிறான் போலும்,’ எனவெல்லாம் ஒருவாறாகச் சொன்னோம். நாங்கள் தான் உன்னை அவளுடைய சினத்துக்கு ஆளாகாமல் இவ்வாறு காத்தோம். அவள் சினம் கொண்டால் நீ பிழைக்க இனி ஒருவழியும் இல்லை! செல்ல வேறு இடமும் இல்லை என்று தெரிந்து கொள்!

                   ‘மழைக் கொந்தளக்கோதை வம்மினென்றளவில் நீ

                             வந்திலை எனக் கடுகலும்…………

                   …………………………..யாம்

                   இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில்

                             இனியொரு பிழைப்பில்லை காண்…’ என்று சொல்லி, “எங்கள் அம்மையைக் காண இது நல்ல சமயம்,” என இந்த நகரின் பெருமதில்களே உன்னை உரக்கக் கூவி அழைக்கின்றன பார்! மரியாதையாக எங்கள் மதுரைக்கரசியுடன் விளையாட வந்து விடு; உன் நன்மைக்காகத் தான் இதைச் சொன்னேன்!” என்று எச்சரிக்கிறாள்.

“ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து நடனமாடும் சிவபிரானால் தெய்வ நதியாகிய கங்கையுடன் அவர் முடியில் வைத்துக்கொள்ளப்பட்டாய். எதனால் தெரியுமா? வேதத்தின் முடியில் அரசு செலுத்தும் இவளுடைய சிறந்த அடிகள் உன் இதய பீடத்திலும் பொலிந்து திகழ வேண்டும் என்று அவர் பெரிய மனது பண்ணி இவ்வாறு செய்திருக்கிறார். உனக்கு இதை விடப் பெரிய பேறு எக்காலத்திலும் கிடைக்கப் போவதில்லை,” என்கிறாள் செவிலித்தாய் வாருணி.

            ‘ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர

                   சிருக்குமிவள் சீறடிகள்நின்

              இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்து

                   எண்ணியன்றே கபடமா

          நாடகத் தைந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ

                   நதியொடு முடித்தல் பெற்றாய்;

              நங்கையிவள் திருவுள மகிழ்ச்சி பெறில் இது போலொர்

                             நற்றவப் பேறில்லை காண்’

“இவள் அரசாளும் மதுரையின் பெருமைகளை, அம்புலியே நீ அறிவாயோ? அங்கே நிலாமுற்றத்தில் பார்! அழகிய பெண்கள் மகரயாழில் இசையை எழுப்புகின்றனர். இந்த இன்னிசையின் நயத்திற்குப் பரிசு அளித்துப் பொன்னாடை போர்த்துவது போலக் குங்கும மரங்கள் மலர்களை அளித்து உதிர்க்கின்றன. செழித்த கோங்கமரங்கள் அசைகின்ற ஆடகப் பொற்கிழி போன்ற மலர்களை வழங்கி இசையைச் சிறப்பிக்கின்றன. இத்தகைய இசைவளம் பொருந்திய மதுரையின் அரசியாகிய இத்திருமகளுடன் விளையாட அம்புலியே, நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி உனக்கு என்னதான் சொல்ல முடியும்? எங்கள் மதுரைத் திருமகளுடன் விளையாட விரைந்து வா,” என்கிறாள் செவிலித்தாய்.

முத்தமிழ் வளர்த்த மதுரையில் இசைக்கு வழங்கப்படும் சிறப்பைப் பாடலின் இப்பகுதியில் அருமையாக விளக்கியுள்ளார் குமரகுருபர அடிகளார்.

                ‘மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில்

                   வழங்கக் கொழும் கோங்குதூங்கு

          ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் மதுரைத்திருவொடு

                   அம்புலீ ஆடவாவே’

இவ்வாறெல்லாம் கூப்பிட்ட பின்னும் அம்புலி வாராதிருந்தால் இழப்பு அம்புலிக்குத் தான்- குழந்தை மீனாட்சியோடு களித்தாடும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் அமைந்து விடுமா? முன்னைத் தவப்பயனல்லவா அது? நமக்குப் புரிகிறது; அம்புலிக்கும் புரிந்தால் சரி!!

மதிக்கு மதி (புத்தி) கெட்டு விட்டதோ என வினவி, மதி எனும் சொல்லைப் பன்முறை கையாண்டு சொல்பின்வருநிலையணியாக அமைத்துப் புலவனார் நடேச கவுண்டர் இயற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று. சந்த நயமும் அணிநயமும் பொருள் நயமும் பொங்கி வழியும் இனிய தமிழின் இணையற்ற ஒரு செய்யுள். வாய்விட்டுப் படித்தால் தமிழின் இனிமையில் நாவெல்லாம் தித்திக்கின்றது!

‘யாரையும் நான் மதியேன்’ எனச் செருக்குடையவனாக நீ எண்ணிக் கொண்டிருந்தால் உன்னுடைய அந்தச் சிறுமை வாய்ந்த மதியினை நாங்கள் என்னவென்று கூறுவது? நிலை பெற்ற பெரியாரை (முருகனை) மதிக்காதவனை உலகில் எவரும் மதிக்க மாட்டார்கள்.

‘மதியும் (சந்திரனாகிய நீயும்), ஆதவனும் (சூரியனும்), சிவனைத் தன் தீமதியால் மதிக்காது அவமதித்த தக்கனுடைய வேள்வியில் தமது அறிவு பிறழுமாறு உடல் தேய்வுற்றனர். சந்திரன் வீரபத்திரரது திருவடியால் தேய்க்கப்பட்டான்; சூரியன் கண்ணும் பல்லும் (அலர்விழி, வாள் நகை) இழந்தான்.

‘கடலைக் கடைந்தெடுத்த கொடிய விடத்தினை அருந்தியவனும் பிறையணிந்த சடையினை உடையவனுமாகிய இறைவன் பெரிதும் மதிக்கும்  அறிவாளி இம்முருகனாவான் (தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் இவன்). இவனை நீ மதிக்கவில்லையெனில், அதன் காரணமாக இவன் சினமுற்றால் உனது பெருவாழ்வு குலைந்து நாசமாகி விடும்.

‘நீ நன்மதி / நல்ல அறிவு உடையவன் எனில் இந்த முருகையனோடு ஆடுவதற்கு வா வா அம்புலியே! வளரும் எட்டிக்குடி முருகனோடு விளையாடிட வா வா அம்புலியே!’ என அச்சுறுத்தி அழைக்கின்றனராம்!

            மதியே மென்று நினைத்தனை யேலுன் மதியினை என்சொல்கேம்

                   மன்னும் பெரியரை மதியா தவனை மதிப்பவ ராருலகில்

          மதியா தவர்மதி யாதவன் வேள்வி மதித்துறு தீமதியால்

                   மதிமாழ் குறவுடல் தேய்வுற் றலர்விழி வாணகை போயினராலி

          மதிதீ விடநுகர் மதிசேர் சடையிறை வன்மதி மதியனிவன்

                   மதியில் சினமுறின் மதியே உன்பெரு வாழ்வு குலைந்திடுமே

          மதியா யெனின்முரு கையனோ டாடிட வாவா அம்புலியே

                   வளரெட் டிக்குடிமுருக னொடாடிட வாவா அம்புலியே.

வான்மதியின் பதினாறு கலைகளையும் அறிவிப்பதே போன்று மதி எனும் சொல் இப்பாடலில் பதினாறு முறை வருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இத்தகைய நயங்கள் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிக்கப் படிக்க, அவை தெவிட்டாத தமிழின்பம் தருவன என உணரலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *