Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 6

-மேகலா இராமமூர்த்தி

பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பெண் படைப்பாளர்களில் தமிழக எல்லையைக் கடந்த பெண்ணொருவரையும் நாம் அடையாளம் காணமுடிகின்றது. அவர்தாம் வடகன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கு அருகிலுள்ள ‘உடுதாடி’ என்ற கிராமத்தில், வீரசைவ மரபில் தோன்றிய அக்கமாதேவி எனும் பெண் கவிஞர். தம்முடைய கிராமத்தில் சென்னமல்லிகார்ச்சுனர் என்ற பெயரில் கோயில் கொண்டிருந்த சிவனிடத்தில் குழந்தைப் பருவம் முதலே மனத்தைச் செலுத்தியிருந்த அவர், உலகியல் பற்றற்றவராய்த் திகழ்ந்தார்.

மணப்பருவத்தில் பேரழகுப் பெண்ணாய்த் திகழ்ந்த அவரைக் கண்ட  அப்பகுதியை ஆண்ட சமண சமயத்தைச் சேர்ந்த கௌசிகன் என்ற மன்னன் அவரை மணக்கவிரும்பி அவர் பெற்றோரிடம் காவலரை அனுப்ப, தம் மகளின் பற்றற்ற மனத்தை அறிந்திருந்த அக்கமாதேவியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். ஆனால் அக்கமாதேவி திகைக்கவோ கலங்கவோ இல்லை. மணம்பேசவந்த காவலரிடம், “நான் என்னைச் சென்னமல்லிகார்ச்சுனருக்கே அர்ப்பணித்துவிட்டேன்; அரசமாளிகையின்மீது எனக்கு எவ்விதப் பிடிப்பும் பற்றும் கிடையாது” என்று மறுக்கின்றார். காவலர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே, சற்றுசிந்தித்த அக்கமாதேவி. “சிவபூசை, சிவனடியார் உபசாரம், சிவத்தொண்டு போன்றவற்றில் நான் ஈடுபடுவதற்கு எத்தகைய தடையையும் உங்கள் மன்னன் விதிக்கக்கூடாது; அப்படியாயின் அவனை நான் மணப்பேன்!” என்று நிபந்தனை விதித்தார்.

அவற்றை அறிந்த மன்னன் அக்கமாதேவியின் நிபந்தனைகளுக்கு உடன்படவே, அவனை மணந்தார். எனினும் சிறிது காலத்துக்குள்ளாகவே இகவாழ்வில் துளியும் நாட்டமில்லாத மாதேவிக்கும் மன்னனுக்கும் மனவேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

“இகத்துக்கொரு கணவன் பரத்துக்கொரு நாயகனோ?
உலகியலுக்கொப்ப ஒரு கணவன், ஆன்மிக நாயகன் வேறொருவனோ?
என்கணவன் சென்னமல்லிகார்ச்சுன தேவனே!”
என்று தீர்மானித்து தம்முடைய ஆடை அணிமணிகளைத் துறந்து அரண்மனையைவிட்டு வெளியேறுகின்றார் அக்கமாதேவி. திகம்பர (ஆண்) சந்நியாசிகளைப் போல் ஒரு பெண் ஆடைகளைத் துறப்பது என்பது அன்றைய சமூகத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. (ஏன் இன்றும்கூட அஃது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதானே?) எனினும் அதையெல்லாம் அந்தப் பெண்துறவி பொருட்படுத்தவில்லை. தம்முடைய நீண்ட கூந்தலால் உடலை மறைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் பயணித்தார்.

அக்காலத்தில் கன்னட நாட்டில் சிறந்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளராகவும், வீரசைவ சமய ஞானியாகவும் விளங்கிய பசவண்ணர் என்பவர் வாழ்ந்த கல்யாண் நகர் என்ற பகுதியைச் சென்றடைந்த அக்கமாதேவியார், அங்கே வீரசைவ அடியார்கள் சிலரோடு உரையாடி மகிழ்ந்தார்.

”அழகு என்பது…
கண்ணுக்கழகு குருவையும் பெரியோரையும் காணுதல்
காதுக்கழகு பெரியோரின் புகழ்ப்பாடல்களைக் கேட்டல்
சொல்லுக்கழகு உண்மை பேசுதல்
உரையாடலுக்கழகு நல்ல பக்தர்களின் சொற்களைக் கூறல்
வாழும் வாழ்க்கைக்கு அழகு நல்லோர் தொடர்பு
இவையற்ற வாழ்க்கை வாழ்தல்
எதற்குப் பயனய்யா, சென்னமல்லிகார்ச்சுனா?”
என்பது அக்கமாதேவியாரின் கவிகளில் ஒன்று.

இவருடைய கவிதைகள் வசன கவிதை (free verse) என்னும் வகையைச் சேர்ந்தவை. இதுவரை நமக்கு இவருடைய கவிவசனங்களாக முந்நூற்று நாற்பத்து இரண்டு (342) கிடைத்துள்ளன. இவையனைத்தும் பக்தி இலக்கியம், பற்றற்ற ஞானமார்க்கம் எனும் இரண்டு துறைகளிலும் ஒருசேரப் பயணித்த சிறந்த ஆளுமைகளில் ஒருவராக அக்கமாதேவியை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

இவரையடுத்து, வட நாட்டைச் சேர்ந்தவரும் இறைநேயச் செல்வியுமான மற்றொரு பெண் படைப்பாளரையும் 16ஆம் நூற்றாண்டில் நாம் இனங்காணமுடிகின்றது. வெறும் இறைநேயர் என்று அவரை நாம் சுருக்கிவிடமுடியாது. அதற்கும் மேலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கின்ற அவர் வேறுயாருமில்லை… இராஜஸ்தான் மன்னனான ராணா ரத்தன்சிங்கின் மகளாகப் பிறந்து கிருஷ்ணபக்தையாகக் கொண்டாடப்படும் மீராபாய் என்ற பக்தமீராவே அவர்.

மீரா சிறுகுழந்தையாக இருந்தபோது ஓர் இரவலர் அவரிடம் கிருஷ்ணனின் சிறிய சிலை ஒன்றைத் தந்தாராம்; அதுமுதலே அச் சிறுசிலைமீது பேரன்புகொண்டவரானார் மீரா என்று சொல்லப்படுகின்றது. ஒருநாள் வீதி வழியே திருமண ஊர்வலம் ஒன்று செல்வதைக்கண்ட சிறுமி மீரா, தம்மருகில் நின்று கொண்டிருந்த அன்னையிடம் வருங்காலத்தில் தம்முடைய மணவாளன் யார் என்று கேட்க, அன்னையோ மகளின் கையிலிருந்த கண்ணன் சிலையை விளையாட்டாய்ச் சுட்டிக்காட்ட, அதுமுதல் அச்சிலையையே தம் மணவாளனாக வரித்துவிட்டார் அவர் என்கிறது மீராவின் வரலாறு.

ஆனாலும் பருவம் வந்தபின் குடும்பத்தாரின் வற்புறுத்தலின்பேரில் ராணா கும்பா அல்லது போஜராஜன் என்றழைக்கப்பட்ட மேவாரின் மன்னனை மீரா மணந்தார். சிறிதுகாலத்திற்குப் பின் போஜராஜன் ஒரு போரில் இறந்துவிட, கணவனை இழந்த இராஜபுத்திரப் பெண்கள் பின்பற்றிய ’சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மீரா பின்பற்ற மறுத்திருக்கின்றார். அக்காலத்தில் இச்செயலை பெரிய புரட்சி என்றே சொல்லவேண்டும்.  

தொடர்ந்து கண்ணனின் திருக்கோயில்களுக்குச் சென்றுவந்துகொண்டிருந்த மீரா, தம் உள்ளத்திலிருந்து பொங்கிப் பிரவகித்த இசைவெள்ளத்துக்கு ஏற்பக் கால்களில் சலங்கை கட்டி, பொதுமக்கள் முன்பு ஆடவும் செய்திருக்கின்றார்.

பொதுமக்களோடு இரண்டறக் கலந்து பழகும், அரச குடும்பத்துப் பெண்களுக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத, புதுவழக்கத்தை மீரா ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போஜராஜனின் தம்பியும் மேவாரின் மன்னனுமான விக்ரமாதித்யா மீராவைக் கொல்லக்கருதி பிரசாதத்தில் விடத்தைக் கலந்துகொடுக்க, அதனை இறைப்பிரசாதமாகவே மீரா உண்டிருக்கின்றார்; ஆனால் அவ் விடம் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. அந்நிகழ்வை விளக்கும்வகையில் மீரா பாடியதே “Vish Kaa Pyaalaa Raanaajee Bhejyaa; Peevat Meeraa Haansee Re” (The king sent a goblet of poison as a gift. Mira drank it all in one gulp, and laughed) என்ற பாடல் என்று அவர் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

எனினும், மன்னனின் தொல்லைகளும் கொலைமுயற்சிகளும் தொடரவே, மீரா மேவாரிலிருந்து புறப்பட்டு பிருந்தாவனத்தையும் பிறகு துவாரகையையும் அடைந்திருக்கின்றார்; துவாரகையில் அவர் கண்ணனோடு இரண்டறக் கலந்தார் என்று நம்பப்படுகின்றது. மானிடப்பெண்ணான மீரா, தாம் விரும்பியபடியே கண்ணபெருமானோடு இப்புவியிலேயே இரண்டறக் கலந்தார் என்பது உண்மையானால் அஃது சாமானியர்கள் செய்யமுடியாத மகத்தான சாதனையே!

இதுமட்டுமல்லாது பல புதிய சாதனைகளையும் தம் வாழ்வில் புரிந்தவராகவே மீராவை நாம் கருதவேண்டும். முதலாவது, இராஜபுத்திர அரச வழக்கப்படி கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்ற எழுதாத சட்டத்தை (Unwritten Law) அவர் தவிடுபொடியாக்கியது; இரண்டாவது, அரச குடும்பத்துப் பெண்கள் என்றால் பொதுமக்களிடமிருந்து விலகியே இருந்து தம் மேட்டிமைத்தனத்தைப் பறைசாற்ற வேண்டும் என்ற வழக்கத்தை அவர் தகர்த்தெறிந்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான அவரின் சாதனை, அரச குடும்பத்துப் பெண்ணான அவர், தாழ்த்தப்பட்ட (தலித்) வகுப்பைச் சேர்ந்த ஒருவரை (Guru Miliyaa Raidasjee) தம் குருவாக ஏற்றுக்கொண்டது.

அத்தோடு, தம் இறைப் பாடல்களையும் (பஜன்கள்) மக்கள் மொழியான விரஜமொழியிலேயே (Vrajbhasha) அவர் எழுதியிருக்கின்றார் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் செய்த சீர்திருத்தங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டுப் பாராட்டும் மாந்த சமூகம், அவற்றையே ஒரு பெண் செய்தால் அவற்றை அங்கீகரிப்பதுமில்லை; அவளைப் பாராட்டுவதுமில்லை என்ற புரிதலையே இத்துணைச் சீர்திருத்தங்கள் செய்த ’புரட்சி மீரா’வை வெறும் ’பக்த மீரா’வாகவே கொண்டாடும் சமூக மனநிலை நமக்குப் புலப்படுத்துகின்றது.

[தொடரும்]

*****

துணைநின்றவை:

https://en.wikipedia.org/wiki/Akka_Mahadevi
https://www.thehindu.com/books/books-authors/meera-bai-the-queen-who-danced-on-the-streets/article5699143.ece
https://en.wikipedia.org/wiki/Meera       

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க