படக்கவிதைப் போட்டி – 204
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிரேம் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
பெண் சுதந்திரம்
பெண் என்று அறிந்து
கலைக்க படும் கருவில் தப்பி
இனிதாய் துவங்கியது உனது வெற்றி பயணம்
கள்ளிப்பால் கொலையில் தப்பி
வெற்றி பாதையின் முதல் படியில்
பள்ளி சென்று பட்டம் படித்து
வெளிச்சத்திற்கு வந்த வாழ்க்கை படிகள்
வாசல் வரை வந்து வழியனுப்பி
காத்திருந்த காலம் போய்
காற்றை கிழித்து செல்லும்
விமான ஓட்டியாய் வளர்ந்து நின்றாய்
மூலையில் முடங்கி கிடந்த காலம் போய்
முன்னேற்ற பாதையில் முந்தி சென்றாய்
பின் தொடர்ந்து சென்றதெல்லாம் போதும் என்று
உன் நிழல் கூட முன்னேற்ற பாதையில்
முன்னே விழுந்ததோ
காந்தி கண்ட கனவு சுதந்திரம்
வந்ததோ என்று வியந்தது
பல விழிகள் உன்னை கண்டு
வரைபடம் கூட உயிர்தெழுந்ததே
தேவதை உன்னை கண்டு
சொர்கம் என்று எண்ணி
சுதந்திரம் என்பது பார்க்கும் விழிகளில் இல்லை
உரிமைக்காக போராடும் பாவை உன் மனதில் இருக்கும்
முடிந்தவரை போராடி முன்னேறு
வெற்றி உன்னை தொடர்ந்து வரும் பின்னோடு
பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள்
*—————————–*
மானுடம் உயிர்த்திட மண்ணுலகம் நிலைத்திட மடி தந்த
மாதவ மங்கையர்க்கு மனம் நிறை மகிழ்வான தலைவணக்கம்
மாசில்லா பெண்மையின் மாண்புகள் காப்போம்
மாதியுடை மதர்கள் மானம் காப்போம்
அன்பு காட்டும் தாயாய்
அறிவுரை சொல்லும் அமைச்சராய் தாரம்
அள்ளிக்கொஞ்சும் மழலையாய் மகள்கள்
ஆறுதல் தரும் ஆதரவாய் அக்கா தங்கைகள்
இயன்றவரை எல்லார்க்கும் எல்லாம் தரும்
இறையாய் மங்கையர் இருந்தும்
இன்னல்கள் எல்லாம் வெந்தனழாய் வருவது
இந்த தேவதைகளுக்குத்தான்
மேலை நாட்டின் பண்பாடு
ஏழை நாட்டுக்கு ஏன் வேண்டும்?
வாழும் முறையில் மாற்றம் வேண்டும்தான்
வழுக்கி விழுவது சேறாக இருத்தல் தான் வேண்டுமா?
வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்
வலைகள் விரிக்கப்படும் திறன்பேசிகளில் வசீகரமாய்
பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள் புத்தி புகட்டுமா நமக்கு ?
வழக்குகள் வழுவிழக்கபடும் வாதாட நேரமின்றியே
துள்ளல் நடைக்கும் உடலொட்டி உடைகளுக்கும் விடையளிப்போம்
நிலை தடுமாறாமல் இருக்க மீசை பாரதியின் நிமிர் நேர் பார்வை பெறுவோம்
பொல்லா சுவர்ணத்தின் தேவதைகளாக வேண்டாம்
பொல்லாங்கில்லா நல்லாட்சி புவியின் பூ மகள்களாவோம்
யாழ். நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in
ஆட்டம்…
எல்லை தாண்டிடும் ஆட்டங்கள்
வாழ்வில்
எடுத்துத் தருவது வாட்டம்தான்..
ஆணோ பெண்ணோ
ஆட்டம் அதிகமானால்
ஆபத்து அருகினில்தான்,
ஆனாலும்
பாதிப்பு அதிகம்
பெண்ணுக்குத்தானே..
காலம் காலமாய்க்
காண்பதும் இதுதானே..
தன்னைக் கட்டுப்படுத்தித்
தற்காத்துக்கொள்ளாத
பெண்மையும்,
பெண்ணின் பெருமைக்குத்
துணை நில்லா
ஆண்மையும்,
அகில வாழ்வில்
அர்த்தமற்றவைதான்…!
செண்பக ஜெகதீசன்…
அச்சுவரொட்டி கிழித்து
எம் கிராமத்து சுவரொன்றில் ஒட்டுங்கள்.
கால்நடை காதல்
தெருமுனை தேநீர் கடை
முதியவர்கள் சபை
விவசாய வாசம் என
உண்மை சொர்க்கத்தை
ஓவியக் கண்கள் காணட்டும்.
நிலம் கொஞ்சும் கொலுசொலி
நிமிர்நோக்கா கண்கள்
சிக்கனச் சிரிப்பு
சீதண அழகு என
நிஜதேவதை கண்டு
உயிர் வரம் பெறட்டும்.
-காந்திமதி கண்ணன்