அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

குருசன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி – 212

 1. பிளமிங்கோ (செங்கால் நாரை) பறவைகள்..
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  கால்கள் நீண்டிருக்கும்.. கனத்ததொரு அலகிருக்கும்.. எமக்கு
  நெடுந்தூரம் பறப்பதற்கு.. நெஞ்சுரமும் மிகுந்திருக்கும்..!!
  சிறகுகள் விரித்திடுவோம்.. சீராகப் பறந்திடுவோம்.. நாங்கள்
  சீரான தட்பவெப்பப் பகுதிக்கு விரைந்திடுவோம்..!!

  அணிவகுத்து ஆர்ப்பரித்து.. ஆயிரம் மைல் கடந்து.. நாங்கள்
  துணிவுடனே சென்றிடுவோம்.. தூரதேசம் அடைந்திடுவோம்..!!
  கடவுச் சீட்டின்றி.. இடப்பெயர்ச்சி செய்திடுவோம்.. நாங்கள்
  நுழைவாணை ஏதுமின்றி.. கடல் தாண்டிப் பறந்திடுவோம்..!!

  அழகாய் கூடமைத்து.. சிலகாலம் தங்கிடுவோம்.. உகந்த
  சூழல் வந்ததுமே.. சொந்த ஊர் திரும்பிடுவோம்..!!
  விடுமுறை எமக்கில்லை.. விருப்ப ஓய்வு ஏதுமில்லை.. நாங்கள்
  இருக்கின்ற காலம்வரை.. இரை தேடி அலைந்திடுவோம்..!!

  நீர்நிலைகள் நிலவளங்கள்.. நல்லபடி போற்றிடுவீர்.. நாங்கள்
  வலசை போவதற்கு.. வாழ்வாங்கு வாழ்வதற்கு..!!
  கடல்வளங்கள் காத்திடுவீர்.. புவிவெப்பம் குறைத்திடுவீர்.. எம்
  இனமும் தழைத்திடணும்.. பூமியெங்கும் நிலைத்திடணும்..!!

Leave a Reply

Your email address will not be published.