புன்சிரிப்பு மோகன் புறப்பட்டுப்  போய்விட்டார்!

0
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா
  தமிழறிஞர், பேராசிரியர் இரா.மோகனுக்குக் கண்ணீர் அஞ்சலி 
                                   

தமிழ்த்தேனீ  பறந்தது  தமிழறிஞர்  கலங்குகிறார்
அறிவுநிறை  தமிழறிஞர்  அழவிட்டே  அகன்றுவிட்டார்
அறிஞராம் மு.வ.வின் அருமைமிகு செல்லப்பிள்ளை
அனைவரையும் அழவிட்டே அவ்வுலகு போனதேனோ !

மோகனென்று நினைத்தவுடன் புன்னகைதான் வந்துநிற்கும்
காதலுடன் தமிழ்படித்துக் காத்திரமாய் எழுதிநின்றார்
நோதலுடன் பேசாத  நுண்ணறிவும் பெட்டகமாய்
பூதலத்தில் இருந்தமோகன் புறப்பட்டுப் போனதேனோ!

பட்டம்பல பெற்றாலும்  பதவிபல  வகித்தாலும்
மற்றவரை நோகடிக்கும் வகையிலவர் இருந்ததில்லை
கற்றபடி ஒழுகிநின்றார் கண்ணியத்தைக் காத்துநின்றார்
கண்ணீரில் மிதக்கவிட்டு காணாமல் போய்விட்டார்!

அவர்படைத்த  நூலடுக்கோ அழுதபடி இருக்கிறது
அவர்பெற்ற விருதடுக்கோ அலமந்தே நிற்கிறது
பட்டிமன்றம் கவியரங்கம் பரிதவித்தே நிற்கிறதே
கட்டழகுச் சிரிப்பழகர் கலங்கவிட்டுப் போனதேனோ!

இலக்கியத்தில் இரட்டையராய் இருந்தார்கள் இணைபிரியா
இப்போது இரா.மோகன் இணையைவிட்டு ஏகிவிட்டார்
பிரிந்தஇணை நிர்மலாவோ  புரண்டேங்கி அழுகின்றார்
சிரித்தமுகம் காணாமல்  சென்றவிடம்  தேடுகிறார்!

புன்சிரிப்பு  மோகன்  புறப்பட்டுப்  போய்விட்டார்
என்கின்ற செய்தி இடியெனவே இருந்ததுவே
அவர்நட்பை எண்ணியெண்ணி அழுதபடி நிற்கின்றேன்
அறிவுநிறை இரா.மோகன் அழவிட்டுப் போனதேனோ!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *