கரிசல் காட்டு ராஜா கி.ரா.89(பகுதி-2)
தி.சுபாஷிணி
கி.ரா. அவர்களின் பிறந்தநாள் விழாவில் வெளிப்பட்ட ‘அன்புள்ள கி.ரா.விற்கு’ என்னும் நூலை சென்னை வந்ததும் படித்தேன். கடிதம் எழுதும் கி.ராவின் படத்துடன் அட்டைப்படம் அழகாய் இருக்கிறது. 263 பக்கங்கள் கொண்டது. இருபது பேர்கள் கி.ரா.விற்கு எழுதிய கடிதங்களை கழனியூரான் தொகுத்து இருக்கிறார். அவற்றை உயிர்மைப் பதிப்பகம் வெளியீட்டு இருக்கின்றது. விலை ரூ. 190.
“தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எழுதுவார்களா? கேள்விப் பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபம் கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது. குழி தோண்டுகிறது! இப்படித்தானே கேள்விப் பட்டிருக்கின்றோம். இது என்னடா அதிசயமா இருக்கு!” என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்து விட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு.
“எல்லாமே நான் வாசித்த கடிதங்கள்தாம்: இப்போது வாசிக்கும் போதும் புதுசாகவே தெரிகின்றன.”
“தபாலில் கடிதங்கள் வந்து சேர்ந்ததும் பிரித்து வாசிக்கும் முதல் படிப்பாளி அனேகமாய் எனது ………. இருக்கட்டுமே என்று நானும் அனுமதித்து விடுகிறேன்.
“கடைகளில் பட்சணங்கள், பொம்மைகள் வாங்கித் தரச் சொல்லி நம்மை நச்சரிக்கும் குழந்தைகளைப் போல அருமை நண்பர்கள் என்னை எப்படி நச்சரிக்கிறார்கள் பதில் கடிதம் கேட்டு” என்று கி.ரா. தன் முன்னுரையில் கூறுகிறார். வாசிக்கும் போது சிரிப்பு வந்து விடுகிறது நமக்கு, அப்படி ஒரு பிரியம். பின் கு. அழகிரிசாமி எழுதிய கடிதத்தையே தன் நூலுக்கு முன்னுரையாக அமைத்திருப்பது சாலச்சிறந்தது ஆகும்.
ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேரனும் கி.ரா.வின் ஆத்ம நண்பருமான திரு. தீப. நடராஜன் அவர்கள் “கடிதம் எழுதலாமே!” என்பதை அணிந்துரையாக அளித்திருக்கிறார்கள். அதில், கடித இலக்கியத்தின் வரலாற்றையே அளித்திருக்கிறார்கள்.
“பெற்றோர் ஒரு ஊரிலும் பிள்ளைகள் நெடுந் தொலைவிலும், ஏன் அயல் நாட்டிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்பவாவது ஒருமுறை தொலைபேசியில் அப்பா, அம்மாவிடம் நலம் விசாரிப்பார்கள். காரியம் முடிந்து விடுகிறது. கடிதம் எழுதுவதைப் பெரிய வேலை என்றே இப்போது பலரும் கருதுகிறார்கள். நேரம் இல்லை. என்று கூறி விடுகிறார்கள். மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு. என்பதுதான் உண்மை. பாசத்தைத் தந்தவர்கள் பாசத்தை எதிர்பார்ப்போம்.
பார்த்த, கேட்ட, அனுபவித்த, சிந்தித்த விஷயங்களை எல்லாம் பெற்றவர்களுக்கும், உற்றவர்களுக்கும், சினேகிதர்களுக்கும் எழுதினால் எழுதுபவர் மனசுக்கு உற்சாகம் ஏற்படும். கடிதம் பெறுபவர்களுக்கும் தூரதொலைவில் உள்ள பாசத்துக்குரியவரது அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்து ஆனந்தப் படுவார்கள். தொலைபேசியில் பேசினால் எல்லாம் காற்றோடு காற்றாய்க் கலந்து போய்விடும்.
கடிதம் எழுதும் போது, எழுவதற்க்குரிய சொற்களும், கருத்துக்களும் தானாக வந்து சேரும்போது ஏற்படும் நிறைவை அனுபவத்தில்தான் உணர முடியும். கடிதம் எழுதினால்தான் எழுதுவதினால் உண்டாகும் சுகம் தெரியும். கடிதத்தில் சொல் பேசுவதில்லை. இதயத்தோடு இதயம் பேசும் அற்புதம் நிகழ்கின்றது.”
திரு. கழனியூரான், கடித மூட்டையிலிருந்து பிரபலமான மூத்த எழுத்தாளர்களில் சுவையான, இலக்கியத்தரமான கடிதங்களைப் பிரித்தெடுத்து, சில பகுதிகளை ‘எடிட்’செய்து பிரசுரிப்பதற்கு அளித்திருப்பதாகவும், இன்னும் ஏராளமான கடிதங்கள் பிரசுரிப்பதற்கு இருக்கின்றன என்றும் தன் கட்டுரையில் கூறியிருக்கின்றார். மேலும், ‘குடும்ப உறவு குறித்த எந்தக் கடிதமும் இத்தொகுப்பில் இல்லை. எல்லாக் கடிதங்களும், எழுத்தாளுமை பற்றியதாகவோ, இலக்கியச் செய்திகளைச் சொல்வதற்காகவோ, இலக்கியச் சர்ச்சைகள் பற்றியதாகவோ உள்ளன” என்று கூறியிருக்கின்றனர்.
‘சுரா’என்னும் சுந்தர ராமசாமி, அம்பை, தீபம் பார்த்தசாரதி, நீல பத்மநாபன், வல்லிக் கண்ணன், தீப. நடராஜன், ஜெயகாந்தன், தி.க. சிவங்கரன், ரகுநாதன், நகுல (டி.கே. துரைசாமி), கிருஷ்ணன் நம்பி (விக்ரமாதித்தியன்) ஆ. மாதவன், கு. அழகிரிசாமி, வீர. வேலுச்சாமி, வித்.ல. சண்முகசுந்தரம், தஞ்சை பிரகாஷ், வண்ணநிலவன், சிட்டி, இளையராஜா, சிவகுமார் (நடிகர்) மு. சுயம்புலிங்கம் ஆகியோரின் கடிதங்களின் தொகுப்பாய் இப்புத்தகம் மிளிர்கிறது.
கால வரிசைப்படிக் கடிதங்களைப் படித்தேன். அதே வரிசையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். அப்படிப் பார்க்கையில் வித்.ல. சண்முகசுந்தரம் அவர்கள் முதலில் வருகிறார். 26.11.1945ஆம் ஆண்டு எழுதியது.
“அன்பும் அறனும் உடனிருந்த நண்பரீர், வணக்கம்“ எனத் தடபுடலாகத்தான் கடிதம் தொடங்குகிறது.
“மனிதன் ஒரு புதுமையில் நிற்கும் பொழுது அவன் தன் பழமையைப் பற்றித் தெரிவதே இல்லை. அவனைச் சுற்றிய சூழ்நிலைகள் கட்டிய பந்தங்கள் அவன் கண்ணுக்கும் புலப்படுவதே இல்லை. அவன் மனதுக்குங்கூட”எனத் தத்துவார்த்தமாகத் தொடங்கி சங்கீதப் படிப்பை இடையீடும், தடையுமின்றிப் படிக்கின்றீர்களா? அதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கவும். (இடையீடு’ என்ன அழகானத் தமிழ்ச்சொல்) என்ற ஆலோசனையும் கூறுகிறது.
நாம் இலக்கியச் சர்ச்சையை ஒரு கடிதத்திலேனும் ஆரம்பிக்கவில்லையே, கடிதம் என்பது நண்பர்களின் பிரிவுவழித் தூரத்தை இல்லாமற் செய்து, அவர்கள் இருவரையும் மனமாரச் சம்பாஷிக்கச் செய்ய வேண்டுமல்லவா! சரி ஒரு காதல் தலைவியின் வேதனை உரையைப் பார்ப்போம். ரொம்ப ருசிகரமாயிருக்கும். என்றும் பரிவும், துன்பமுமே ஒன்ற வைத்து இன்பத்தை மலர்விக்கும். இல்லை? என்று தன் தனித்துவமான ஆலாபானையை ஆரம்பிக்கிறாள்.
அது வஞ்சி மாநகரம். அகன்ற ராஜவீதியின் பட்டத்து யானை மீது ஒய்யாரமாக சேர மன்னன் அமர்ந்து வருகின்றான். வீதியின் இருமருங்கிலும் மக்கள் கூடி விட்டனர். ஒவ்வொரு முன்வாசலிலும் இளம் பெண்கள் கூடி விட்டனர். கூடினவர்கள் சும்மா இருப்பார்களா? எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெண்களின் உள்ளத்தின் குரல் “இதோ மன்மதன் வருகின்றான்” என்றுதான் சொல்கிறார்கள்.
இந்தப் பக்கத்து வீட்டு வாசலில் ஒரு இளம்பெண் இருக்கிறாள். அவள் முகம் புதுமையால் பளிச்சிடுகிறது. அந்தப் பக்கமாய் வந்த சேரனைப் பார்த்தும் உதடு அசையாது. பேச பறந்து அசைவற்ற பாவையாய், தன் இரண்டு உள்ளங்கைகளையும் இணைத்து, வணங்குகிறாள். யானை நிற்குமா என்ன? அது வந்த வண்ணம் போய்க் கொண்டு இருக்கின்றது. இவளது கண்கள் இரண்டும் இடையீடு இல்லாது கண்ணீரைப் பொழிவது போல் இரண்டு தண்ணீர்க் குடங்கள் போலவேத் தோன்றுகின்றன. பாருங்கள் பாட்டை.
“காண் காண் என்று கருவூரான் பாராட்டத்
தரமந்தாழ் கோதை வடுவானை யாழும்
இரு குடங்கை யானெதிர கூப்பித் தொழக்கண்டு
ஒரு குடங்கை ஆயின கண்”
“பார்த்தீர்களா பாட்டின் விறுவிறுப்பை. நான் இரண்டு கைகளாலும் வணங்கினேன் என்று அவள் செய்ததைச் சொல்லி முடிப்பதற்குள் அதன் பயனை (கண்ணீருங் கம்பலையுமான தோற்றத்தை) எவ்வளவு வேகமாக ஒரு குடங்கையாயின கண் என்ற வரி வருகின்றது? ‘இன்னும் வணங்கினேன்’ என்ற சொல்லானது முன்னும் பின்னும் ஜீவ ரசம் பாயும் வார்த்தைகளை எவ்வளவு லாவகமாகப் பெற்று வருகின்றது? இரண்டு உள்ளங்கைகளும் ஒன்று சேர வணங்கினாளாம். ஐயோ பாவம்!
இவ்வளவு அழகிய உணரச்சிப் பாட்டும் இனி வருகின்ற மாசு மருவற்ற வீரப்பாட்டும் தொல்காப்பியமென்னும் இலக்கணச் சிறைக்கூடத்தில் கைதியைப் போல உதாரணமாக அடைக்கப் பட்டுள்ளது!. இப்பேர்பட்ட ஆத்மீகப் பாடல்கள் எல்லாம் என்று விடுதலை பெற்று ரசிகர் உள்ளங்களில் சுதந்திரமாக உலாவி வருமோ?
வருகின்ற பாட்டு ஒரு வீரனுடைய உள்ளக்கிடக்கையாலாக்கப்பட்டது. அவன் தன்னுடைய மாபெரும் வீரத்தையும், வலிமையையும் எந்தெந்த வகையில், எவ்வளவு சாதுர்யமாகவும் நயம் (நைஸ்) ஆகவும் கூறுகின்றான் என்பதை உணர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக உணர வேண்டும்.
பாண்டிய மன்னனுடைய சேனைகளும், சோழ மன்னனுடைய சேனைகளும் ஒருசேர எதிர்நின்று போரிடுகின்றன. பாண்டி மன்னனுடைய யானைகளோ வீரத்தோடு கூடிய பலம் நிறைந்தது! அப்பேர்பட்ட ஒரு யானை வெறிபிடித்து கையைச் சுழற்றி கோர உருவத்தோடு ஒரு சோழ வீரனைக் கொல்ல வருகின்றது. அவன் அப்பொழுது தன் வீரப் புன்னகையை தன்னையறியாமல் பெய்து கொண்டு சொல்லுகின்ற வார்த்தையைக் கேளுங்கள்!
நான் இந்த யானையைக் கொல்லவே மாட்டேன். கொன்றால் எனக்கொரு பெரிய மானக்கேடு சம்பவிக்கும். எப்படி தெரியுமா? வருகின்ற யானையோ தனித்து வருகின்றது. அதாவது ஒத்தை, மேற்கொண்டு அது ஒரு மிருகம். மேலும் இன்னது செய்யின் இது வருமென்றுணரும் பகுத்தறிவு இல்லாதது, இன்னொருவனுக்கு அடிமையாக வாழ்ந்து வருகின்றது. (கோபமாக) இதோடவா போய்விட்டது. அது ஒரே ஒரு கையினையுடையது. நானோ இரண்டு கைகளையும் வெட்கமில்லாமல் பெரும் பாரமாக சுமந்து வாழ்கின்றேன். அப்பேற்பட்ட நானோ, இந்த யானையைக் கொல்வது. சீ வெட்கமில்லை எனக்கு! பாருங்கள் பாட்டை….
“தானால் விலங்கால் தனித்தால் பிறன் வரைத்தால்
யானை எறிதல் இளிவரலால் யானை
ஒருகை யுடையது எறிவலோ யானும்
இருகை சுமந்து வாழ்வேன்.”
இந்த பாட்டில் யானையைக் கொல்ல மாட்டேன் என்பதற்கு ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த ஐந்து காரணங்களையும் ஒருங்க சேரக்கூறாமல், முதல் நான்கையும் ஒரு வரிசையாகவும், பின்னொன்று பின்னோர் வரிசையாகவும் கூறப்பட்டுள்ள நயம் அபரிதமானது. அவற்றின் முதனான்கு காரணங்களும் எவ்வளவு வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன? பின்னொரு காரணம் எவ்வளவு சாந்தமாகவும், திருஷ்டாந்தமாகவும் கூறப்படுகின்றன?
அந்த ஒரு காரணத்திற்கு மாத்திரம் விளக்கமாக தன்னுடைய பெருமையைச் சொல்லுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது. யானை ஒரு கையுடையது என்று சட்டென்று முடிப்பதில் அதைப் பற்றி இவனுக்குள்ள வெறுப்புத் தொனி எவ்வளவு ஷ்பட்சமாக வருகின்றது. யானோ இருகை சுமந்து வாழ்வேன் என்ற சாந்தமுறை வைப்பில் தன் பலத்தை எவ்வளவு அந்தரங்கமாக மெச்சுகின்றான் என்பதும் இவ்வளவு பெரிய பலத்தை கேவலம் ஒரு யானை மீது செலுத்தி வெற்றி பெறுவோமானால் அது நமக்கு ஒரு களங்கமென்பதுமாய் அவன் எண்ணம் நமக்குப் புலப்படவில்லையா? வணக்கம்.
இங்ஙனம்
அன்பன் ல.சண்முகசுந்தரம்
கு. அழகிரிசாமி அவர்கள், கி. ராவினுடைய சக ஹிருதயர்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இக்கடிதத்தைப் படித்தாலே உங்களுக்கும் புரிந்து விடும்.
“அன்பனே. இந்த வருஷத்தில் நீ சங்கீதத்தை நன்றாக போதுமான அளவுக்குப் படித்துவிட வேண்டும். விரைவாகப் படி. அடுத்த வருஷம் கச்சேரி செய்ய ஆரம்பித்து விட வேண்டும். ஸ்ரீசீனி நாயக்கரையும் உற்சாமூட்டிக் கூடவே கொண்ட செல். உங்கள் இருவருக்கும் அபரிதமான சங்கீத வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டில் என் மனம் உவக்கும் செய்தி என்னவென்றால், உனக்குக் கவி எழுதத் தெரிந்ததும் இசையில் நல்ல ஞானம் வாய்த்ததும்தான். நண்பா, இவ்வளவு சீக்கிரம் முன்னேறிய உன்னை எண்ணும்போதெல்லாம் என் மனம் கொள்ளும் இன்பத்துக்கு எல்லை இல்லை. முற்றுப்பெற்ற ஒரு மாணவனிடம் இருக்க வேண்டிய முறைகளின் அடிப்படைகள் இப்போதே உன்னிடத்தில் போட்டாய் விட்டது. மாணிக்க வாசகர் தன் பேரன்புக்கும், பக்திக்கும் பாத்திரமான சிவனை ஒரு இடத்தில் வர்ணிக்கிறார்!
பொருள் நிறைந்த என் கலையே! புகழ்ந்து பாராட்டுதற்கு முடியாத பேரின்பமே! (இந்த இரண்டு தன்மைகளோடு) எதிலம் ஆசையும் பரபரப்பும் இன்றி அடங்கி நிற்கும் தவக்கோலமே!
“பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!”
இதுவல்லவா ஒரு அன்பனுக்கு வேண்டிய தன்மைகள்! இப்படிக் கிடைத்த தன் அன்பனை “தான் இனி விடப் போவதில்லை” என்று பாடுகிறார் அவர். விடுவதற்கு யாருக்குத்தான் மனசு வரும்?
மேற்சொன்னவற்றில் எல்லா அம்சங்களும் உன்னிடத்தில் பொருந்தியிருக்கக் காண்கிறேன். எனக்கு அடங்காத மகிழ்ச்சியளிக்கின்றன அவைகள்,
இப்படியெல்லாம் நான் எழுதுவது உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால், உனக்கு இப்படி எழுதாமல் நான் இந்தக் கருத்தை வைத்து ஒரு பாட்டோ, கதையோ எழுதிவிடப் போகிறேன். அப்போதும் நேரிடையாக இல்லையென்றாலும் வலைவீச்சில் நீ விழாமல் போகப் போவதில்லையே!
இருவர் சகல அம்சங்களிலும் ஒன்றுபட்டு நிற்பது என்று ஆகி விட்ட பிறகு ஒவ்வொருவர் சொல்லும் செயலும், சாதனைகளும் மற்றொருவரைப் பற்றிய செய்திகளையும், எண்ணங்களையும் பற்றியதாகவே இருக்கும். அவற்றைக் கூட்டிக் குறைத்துச் சொன்னால் அது ஒரு கலையாக மாறி விடுகிறது. அப்படிப்பட்ட கலைகளை நான் உண்டாக்கும் போது அவற்றில் உள்ள இதயத் துடிப்புகளையும், மூர்ச்சனைகளையும், தாத்ப்ரயங்களையும் உன்னையறியாமலே உன்னில் உள்ள ஒன்று அறிந்து கொண்டு விடும்.
என் கலைச் சிருஷ்டிகளுக்கு ஒரு ‘ராஜ நாராயணன்’ இல்லாமல் முடியவே முடியாது. சுவரில்லாமல் சித்திரம் எழுதுவதா? ராஜநாராயணன் என்றால் ஒரு குறிப்பிட்ட அடையாளங்களும், குணாதிசயங்களும் உள்ள உன்னோடு அடங்கி விடவில்லை. நான் நினைக்கும் அந்த ராஜநாராயணனில் அவன் ஒரு பாகமேயாகும். இந்த ராஜநாராயணனுடைய கூட்டுறவில், இவனைச் சுற்றிச் சுற்றி இரவு பகலாகப் படர்ந்த சிந்தனைகள், கனவுகள் ஆகிய பொருள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எங்கும் கேட்கவும், எங்கும் பார்க்கவும், எங்கும் தீண்டவும் முடியும் ஒருவனையே நான் குறிப்பிடுகிறேன். அவனை உனக்கு அடையாளம் காட்டத் தெரியாது. ஆனால் என்னோடு அவன் அந்த பிரம்மாண்டமான ரூபத்திலேயே பழகுகிறான், நேசிக்கிறான், ஆடிப்பாடிக் களிப்பிக்கிறான்.!
மனித ஜீவன்களின் நெருங்கிய கூட்டுறவில் அந்த அதீதத் தன்மை இயற்கையாகி விடுகிறது. இல்லையா? உண்மை உயர்வு இல்லையென்றால், இன்றுவரை உலகத்தில் ஒரு காவியமோ, கலையோ பிறந்திருக்குமா?
என் ராஜ நாராயணனுக்கு நீ ஒரு அடையாளம். இந்தச் சிறு அடையாளப் பொருளை வைத்துக் கொண்டு நான் காலம் கழிக்கிறேன். இந்த அடையாளப் பொருள் கொடுக்கும் சங்கடங்கள், ஐயோ எத்தனை! இதன் மேல், இந்த சங்கடங்களைக் கொடுக்கும் வஸ்துவை உண்மையென்றே கொண்டு, எனக்-குத்தான் சில சமயங்களில் என்ன கோபங்கள், வருத்தங்கள்! இந்த குழந்தை விளையாட்டைத் திரை மறைவில் பார்த்துச் சிரிக்கிறான். என்னுள்ளே கரைந்து ஒன்றுபட்டுள்ள ‘பிரபஞ்சம் முழுதும் நிரம்பிய’ அந்தப் பேரன்பன்.
நான் சொல்லுவதெல்லாம் கற்பனையாக உனக்குப் படக்கூடாது. மனிதனுக்குச் சிந்திக்க, உண்மையை ஆராய்ந்து பார்க்கத் திறமை போதாமல் அறியாமை நிரம்பியிருக்கும் போது, சத்தியத்தை, ஆராய்ச்சி செய்பவனைப் பார்த்து முட்டாள்தனமாகக் கற்பனை செய்பவன், கனவு காண்பவன் என்று உலகம் பழி தூற்றுவது ஒரு வழக்கம். அதனால்தான் உன்னை எச்சரிக்கிறேன்.
உண்மையாகவே மனித வாழ்க்கை அவன் கண்ட கனவுகளிலும், செய்த சிந்தனைகளிலும்தான் இருக்கிறது. செயல்களில் அவனுடைய தன்மை ஏக தேசமாகவே வெளிப்படுகிறது. செயல்களில் மனிதனுடைய உண்மைச் சரித்திரத்தைக் காணமுடியுமா? மனிதன் தன் மனப்பூர்வமாக ஒன்றைச் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனை அவனது உண்மைச் சரித்திரத்தில் ஒரு பக்கம்.
ஆனால், அவன்தான் சிந்தித்ததைச் செய்ய முடியாதவாறு வாழ்க்கையில் உள்ள அசௌகரியங்களால் வேறு ஒன்றைச் செய்கிறான். அல்லது செய்யாமலே சும்மா இருக்கிறான், இல்லையென்றால் தன் சிந்தனையை அரைகுறையாகச் செயலுக்குக் கொண்டு வருகிறான். ஆகவே அவனுடைய செயல்களில் பெரும் பாகம் பொய்க் காரியங்களாகவே இருக்கின்றன அல்லவா? இந்த பொய்யை வைத்து ஒருவன் வாழ்க்கையை எழுதுகிறது இந்த உலகம்!
ஆனால் புது யுகத்தில் பிறந்த நாம், ஏன் ஒருவேளை புது யுகத்தையே சிருஷ்டிக்கும் நாம், உண்மையில் நிற்க வேண்டும்.
நீ இந்த வருஷம் டைரி எழுது. தினந்தோறும் உன் சிந்தனைகளை ஒளிவு, மறைவின்றி எழுதி வை. ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஒன்றிரண்டு குறிப்புகளையும் எழுதிக் கொள். அதனால், வருஷக் கடைசியில் நம் ஒரு வருஷ சரித்திரத்தையும், வாழ்க்கையின் ‘வரவு செலவு’களையும் பார்த்து, வரக்கூடிய வருஷத்தில் வாழ்க்கை வியாபாரத்தை லாபகரமாக நடத்தலாம் அல்லவா? தவிரவும் தம் சொந்த இன்ப துன்பங்களை உண்மையோடு சொல்லிக் கொள்ள டைரி நண்பனாக உதவுகிறது அல்லவா?
1946-ல் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அறிய வேண்டும் நம் பணியை.” என்று கடிதம் நீள்கிறது.
1960ஆம் ஆண்டிலிருந்து 1963ஆம் ஆண்டுவரை எழுதிய கடிதங்களிலிருந்து பத்து கடிதங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
“’மனிதம்’ படித்தேன். சுருக்கமாக இருந்தாலும், இது ஒரு நல்ல நடைச் சித்திரம்
இதைச் சிறுகதை என்று கூற முடியுமா என்பது சந்தேகம். ஆனால், செஹாவின் அநேகம் கதைகள், சிறுகதை இலக்கணத்தை மீறியவைதாம். இலக்கணத்தை மீற, மீறத்தான் இலக்கியமும் வளர்கிறது! நீங்கள் ‘மனிதத்தை’ இப்படித் துவங்க வேண்டும். இப்படி வளர்க்க வேண்டும், இப்படி முடிக்க வேண்டும்’ என்று திட்டமிட்டுத்தான் எழுதியிருப்பீர்கள். எனவே, வேண்டுமென்றேதான் இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று நான் சொல்லுகிறேன். சரிதானே?
‘சிறுகதையின் வடிவத்தில் புதுப்புதுச் சோதனைகள் செய்ய வேண்டும்.’ என்ற கருத்தின் விளைவு இது. அப்படித்தானே?
‘எங்கே பார்த்தாலும் ஒரே கரிசல் மண். வெந்து போன ஈரலைப் போல் ஒரே கருப்பு.’ இந்த உவமானம் மிக அழகாக இருக்கிறது. குரல் இனிமையால், முதலில் என்ன சொன்னார் என்று விளங்கவில்லை…யார் இந்த ஆள்? கடவுளா, திருடனா? இந்த வரிகள் கற்பனை நயத்துடன் ஒளி விடுகின்றன. இப்படி அழகான, மனோதர்மம் மிகுந்த சிறுசிறு வாக்கியங்கள் பல உங்கள் கதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. பாராட்டுகிறேன்.
அத்துடன் ‘சாவு’ என்னும் புதுமைக் கதையைப் படிக்கும் ஆனந்தமும் கிடைத்தது. காதல் கடிதத்தைப் படிக்கும் கன்னி போல, எங்கள் ஆபீசருக்குத் தெரியாமல், இரண்டு முறை ஆபீசிலேயே கதையைப் படித்து விட்டேன்! வீட்டில் ஈஸி சேரில் காலை நீட்டி இப்பொழுது ஒருமுறை படித்தேன். வயிற்றில் ‘வாகையடி முக்கு காபி’ வேறு போயிருக்கிறது. என்ன சுகம்!
‘சாவு’ மிகச்சிறிய கதை. ஆனால் அதை நாடகச்சுவை மிளிர எழுதி இருக்கிறீர்கள்.
1) தட்….தட்….தட்….
2) ஆ….யப்பா…
3) இது என்னம்மா அநியாயமா இருக்கு!
4) ராமானுஜ நாயக்கரின் மூன்று வயது மகனின் விளையாட்டுத்தனம் (பேதைமை)
5) பதினாறாவது நாள்.
6) தலைக்கோழி கூப்பிடுகிறது.
7) அப்பொழுதுதான் மழை பெய்து வெறித்திருக்கிறது.
இவ்விதமாக காட்சிகளை வகுத்துக் கொண்டு, உள்ளத்தைத் தொடும் முறையில் ரத்தினச் சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.
தலைக்கோழி கூப்பிடும் பொழுது கைம்பெண் ஜக்கூ வைக்கும் ஒப்பாரி, கதைக்கே முத்தாய்ப்பாக விளங்கி, உள்ளத்தில் குபீரென்று, சோக வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது. இவ்வளவு கலையம்சம் நிறைந்த கதையை எழுதிய உங்களுக்கு என்ன கொடுக்கலாம்? நேரில் வந்தால்,
“அடப்பாவி மனுஷா! நிறைய இதுபோல எழுதுமய்யா!” என்று முதுகில் இரண்டு ஷொட்டுக் கொடுக்கலாம்!
மிக்க அன்புடன்
தி.க.சி.”
“நேற்று ‘விகடன்’, ‘கல்கி’ சித்திரை இதழ்கள் பார்த்தேன். 30 நயாபைசாவுக்கு ‘கல்கி’யில் நிரம்ப விஷயம் நல்ல விஷயம் இருக்கிறது. சுந்தர ராமசாமி ‘மெய்க்காதல்’ என்று ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். நைந்து போன விஷயம்தான். ஆனால் அவரது பாஷையும், கதை சொல்லும் முறையும் அருமையாக இருக்கின்றன. கு.அ. சுந்தர ராமசாமி கதைகள் பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் பேனாவை மூடி வைத்து விட்டுச் சதா வெற்றிலை புகையிலை மென்று சுகம் கண்டு கொண்டிருப்பது சரிதானா? உங்கள் அருமை நண்பர்களைப் போல, மூன்று மாதத்துக்கு ஒரு அருமையான கதையாவது எழுதக் கூடாதோ? உங்களுக்குச் சுறுசுறுப்பு என்னும் டானிக் மிகமிகத் தேவை. உற்சாகத்தை நாங்கள் தருகிறோம். உடனே எழுதுங்கள்.
கையெழுத்துக் கடிதப் பத்திரிகையைப் பேஷாக ஆரம்பியுங்கள். தமிழில் எத்தனையோ பரிசோதனைகள் நடந்து விட்டன. தமிழும் பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறகு நாம் ஏன் கவலைப்பட வேணும்-?
என்ன பெயர் வைக்கிறது? ‘இடைச்செவல்’ என்றோ, ‘கரிசல்’ என்றோ பெயர் வையுங்களேன்!. ‘முகஸ்துதி’என்ற பெயர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதுதான் என் கருத்து! அது பிடிக்காவிட்டால், ‘ஊசல்’ (ஊசிப் போகும் எழுத்துக்களையோ, பதார்த்த வகைகளையோ இது குறிப்பிடவில்லை. ‘ஊஞ்சல்’ என்பதையே குறிக்கிறது!) என்று நாமகரணம் சூட்டுங்கள்! நமது உள்ளத்தில் கிடந்து, அப்படியும் இப்படியும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் இலக்கிய ஊஞ்சலாகி, எல்லோரும் தின்னும் ரஸ வடைகளாக மாறலாம்தானே? என்ன சிரிக்கிறீர்கள், அண்ணாச்சி?
மிக மகிழ்ச்சியான சேதி.
உங்கள் கதை (பலாப்பழம்) இம்மாதத் ‘தாமரை’யில் வந்து விட்டது! இன்று காலையில் என் அறைக்குச் சமீபம் உள்ள, அரசாங்க நூலகத்தில் உங்கள் கதையை உடனே படித்தேன்!
நயமான பாஷையில், சுருக்கமாக ஆனால், ஒருமைப்பாடு குலையாமல் அழகாக எழுதியிருக்கிறீர்கள். முடிவு வழக்கம்போல், வெகு அருமையாக, நெடுநாள் மனதில் நிற்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. தங்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.
எடின்பரோ கலைவிழாவிலே எம்.எஸ்.ஸும், பால சரஸ்வதியும் ஜமாய்த்து விட்டார்களாம். ஆங்கிலப் பத்திரிகைகளும், இசை நாட்டிய ‘கிரிட்டிக்கு’களும், இந்த இரு கலாதேவிகளின் மேதைமையைத் துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்! (இதையெல்லாம் ‘இந்து’வில் படிக்க, மனசுக்கு இதமாக இருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியம், தமிழ் எழுத்தாளர்கள், இங்ஙனம் உலகு புகழும் நிலை என்று ஏற்படும்? ஏற்படவே ஏற்படாது என்றுதான் தோன்றுகிறது!” இவை யாவும் தி.க.சி. கி.ராவிற்கு எழுதிய கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவருடைய புத்தகங்களின் விமர்சனமாகவே அமைந்து விட்டன.
கிருஷ்ணன் நம்பியின் கடிதங்கள் அவருடைய மனநிலையை நன்கு பிரதிபலிப்பவையாக இருக்கின்றது. மௌனியைச் சந்தித்தது பற்றியும் கி.ராவின் கடிதத்தைப் பற்றியும் கூறுகின்றன.
“மௌனியைச் சந்தித்தது பற்றி ஒரு கார்டில் என்னத்தை எழுதுவது என்று நினைத்தேன். மேலும், எதற்கு எழுத வேண்டும் என்று தோன்றிற்று. மௌனியிடம் உங்களுக்கு ரொம்பவும் இன்ட்ரஸ்ட் இருப்பதாகத் தெரிவதால் அவரைப் பற்றிக் கொஞ்சம் மூட்டையை அவிழ்க்கிறேன். மௌனி ஒருவிதத்தில் அந்தப் பேருக்கு ஏற்றவர்தான். வாய் பேசா மௌனி அல்ல அவர். ஒருவகை ஆத்மீக மௌனி. எங்கெங்குத் தன்னை அடக்கி மௌனத்தில் சமாதி அடைய முடியுமோ அங்கங்கு அப்படியாகி விடுகிறவர். அடக்கத்தில் பிறக்கும் மௌனம் மௌனியின் பூஷணம்.
மௌனி கதைகள் எழுதுவார் என்கிற சங்கதி மௌனியின் மனைவிக்குக் கூட இரண்டு வருஷங்களுக்கு முன்பு வரை தெரியாது. அவருடைய குமாரர்களுக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது தெரியும். “ஏதோ நம்முடைய அப்பாவும் கதை எழுதுகிறார்” என்கிற அளவில்தான் தெரியும். மிகவும் தங்கமான மனிதர். தலை சடம்புக் கற்றையாய் நரைத்து விட்டது. சற்று வளைந்த நீண்ட நாசியும், பெரிய கண்களும் அவர் முகத்தின் பொருளைப் போன்று பொருந்தியிருக்கிறது. ஓயாமல் புகையிலையும் வெற்றிலையும், குறுகிய உருவம், பொடு பொடுவென்று ஒரு நடை, இப்படியெல்லாம் எழுதி, ஒரு மனிதரைக் காட்ட முற்படுவது மடத்தனம். ரொம்பவும் வசதியாக இருக்கிறார். தன் இலக்கிய சிருஷ்டிகள் மூலம் அவருக்கு மொத்தம் நாற்பது ரூபாய் இதுவரை கிடைத்திருக்கறதாம்.
ரொம்பவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். பிச்சமூர்த்தியின் கதைகள் பற்றி அவருக்கு அபிப்ராயமில்லை. நன்றாக மட்டம் தட்டிப் பேசினார். நிறையப் புத்தகங்கள் படிக்கிறார். தத்துவம், மனத்தத்துவம் இப்படிப் பலவகைப்பட்ட விஷயங்கள் அவருக்குப் பிடிக்கிறது. சிதம்பரத்தில் ஒரு ரைஸ்மில் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். வயசு ஐம்பத்தைந்துக்கு மேலிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறார். அவரிடமிருந்து முக்கியமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவருடைய அடக்கம். எங்கே கற்றுக் கொள்ளப் போகிறோம்.
நமஸ்காரம். பல தேதிகளிட்ட தங்கள் கடிதங்கள். தங்கள் அருமைக்குமாரன் சிரஞ்சீவி திவாகரனின் ஓவியங்கள், ஆகியவை அடங்கிய பொத்தைத் தபால் இன்று கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சி. தங்களைப் போல அற்புதமான கடிதங்கள் எழுதவல்ல ஆசாமி இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் கிடையாது. கிடையவே கிடையாது. ரஸ களஞ்சியம் நீங்கள். விகடனையோ, கல்கியையோ புரட்டி, ஒரு கதையைப் படிப்பதை விட உங்கள் கடிதத்தைப் படிப்பது 2000 மடங்கு மேலான இலக்கிய அனுபவம். சொல்லப்போனால் முந்தியது எவ்வகையிலும், எவ்வளவிலும் இலக்கியம் சம்பந்தப்பட்டதாகவே இருப்பதில்லை, முக்காலே முண்டாணி வீசமும் அப்படித்தான்.
அழகிரிசாமி பாலிய லீலைகளைப் பற்றி ரொம்ப ஜோராக எழுதியிருக்கிறீர்கள். ‘அவனுடைய கண்களைப் போலவே அவனுடைய இதயம், ஈட்டியை விடக் கூர்மையானது, அதில் முன்பாதி அந்த ஈட்டி உருக்கை விடத் தின்மை வாய்ந்தது; பின் பாதியோ தாமரைத் தண்டைவிட மென்மையானது’ என்று நீங்கள் எழுதியிருப்பது வெகு அருமை. இப்படி எத்தனையோ விஷயங்களை நீங்கள் அருமையாகச் சொல்லி விடுகிறீர்கள். உங்களிடம் எனக்குப் பொறாமையாகவே இருக்கிறது.”
சிட்டியின் கடிதங்கள் “கோபல்ல கிராமம்“ நாவல் வெளியாகி வரும் வரலாற்றைக் கூறுகின்றது.
தீப. நடராஜன் அவர்கள், கி.ராவின் உறவால் இலக்கிய வளமை பெற்றவர். அவருக்கு ஆதாரம் ரசிகமணி தாத்தாதான். ஆயினும் அவர் காலத்திற்குப் பின், இவருக்கு படிக்கும் நூல்களைத் தெரிவு செய்து கொடுத்து, தொடர்ந்து உறவில், அன்பாய், நட்பாய், கண்ணன் பாட்டில் வரும் இடைச்சாதி நாதன் போல் இடைச்செவல் நண்பனாய் கலந்து வருகிறார்.
31.12.76ல் ஒரு கடிதம் தீப. நடராஜன், கி.ராவிற்கு எழுதுகிறார் பாருங்கள், ஒரு முரசுக் கொட்டுவதுபோல் இருக்கின்றது.
“புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
புத்தாண்டு தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியும், செழிப்பும், மனநிறைவும் கொண்டு வரட்டும். கரிசல் பூமியெல்லாம் பூத்துக் குலுங்கட்டும். தங்கள் பேனா நவ நவமான எழுத்துக்களை எழுதிக் குவிக்கட்டும். கரிசல் மண்ணின் மணம் எங்கும், என்றும் பரவட்டும்.
இளைஞர் பலர் தீவிரமான இலக்கிய உணர்வுடன் வளர்ந்து வருகிறார்கள். நாளைய உலகம் அவர்களது, ஆகையால் நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ளலாம்.
உங்கள் ‘கோபல்ல கிராமம்‘ இந்த நிலைமையில் ஒரு சிறந்த முயற்சி. சிறுகதைகளிலேயே திறமையினைப் பிறர் காட்டி வரும் வேளையில் வந்திருக்கும் ஒரு நாவல்.
கிராமத்தின் தனித்த தன்மைகளை, அழகுகளை, ஜீவனைத் தொட்டுக் காட்டுகிறது தங்கள் எழுத்து. தங்கள் தீக்ஷண்யமான பார்வையில் அடிபடாத விஷயம் கிடையாது. பாத்திரங்கள் உயிரோடு வந்து ஸ்தூலமாய் நிற்கிறார்கள். படிப்பவன் அந்தக் கிராமத்தாரோடு உணர்ச்சி பூர்வமாய்க் கலந்து விடுகிறான். எழுத்தின் வெற்றிக்கு வேறு என்ன வேண்டும்?
தொடர்ந்து எழுதுங்கள். அலிபாபாவைப் போல், நாங்கள் கண்டறியாத ரகஸியங்களையெல்லாம், உங்கள் பேனா கொண்டு வருகிறது.
யந்திர வேகமும், பகட்டும், நாகரீகம் என்னும் போர்வையும் மூடிக்கொண்டு வரும் வேளையில் உண்மையான வாழ்க்கைக் கூறுகளை கவனிக்க இயலாது போய் விடுகிறது.
கிராமங்களும் இனி அழிந்து போய்விடும். பேருக்குக் கிராமமாய் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
உண்மையான கிராமத்தை உங்கள் எழுத்தில் வடித்து வையுங்கள். நம் பேரப்பிள்ளைகளெல்லாம் கண்டு மகிழட்டும்.
இப்போது புத்தகம் படிப்பதில் தீவிரமாய் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு ஒழுங்குமுறையோடு தினமும் சிறிது நேரம் ஒதுக்கிப் படித்து வருகிறேன்.
அறிஞர்களோடு பழகுவது நல்லது என்று சொல்கிறார் வள்ளுவர். நேரில் பழகும் வாய்ப்பு என்னுடைய இருபதாவது வயதோடு போய் விட்டது.
அந்தப் பழக்கத்தினால் நான் பயனடைய முடியும் என்று உணர்ந்து நான் பழகிக் கொள்ளவில்லை. ஆனாலும் நான் உணராவிட்டாலும், அந்த பழக்கம் என்னுள் எவ்வளவோ மாறுதலைச் செய்துள்ளது. அறிந்து, உணர்ந்து பழகியிருந்திருப்பேனாகில் நான் இன்னும் எவ்வளவோ உயர்ந்திருப்பேன்.
இப்போது அதை நினைத்துப் பிரயோசனம் என்ன?
புஸ்தகங்கள் மூலம் பேரறிஞர்களோடு நாம் பழகிக் கொள்ளலாம். அதன் பயனாக நம் உள்ளம் வளர்ச்சியடையும். இந்த உண்மை சமீபகாலமாய் நான் உணர்ந்த ஒன்று.
புஸ்தக அறிஞர்களோடு பழகு என்று சொன்ன வழிகாட்டி ஒரு பட்டிக்காட்டு ஆசாமி. உலக இலக்கியங்களடங்கிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் (ஆங்கிலம்) மணி தந்திருக்கிறார்.
என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேனே. போர் அடிக்காதோ, நிறுத்திக் கொள்கிறேன்.”
நட்பின் பண்பும் பயனும் பற்றிக் கூறுகிறது இன்னொரு கடிதம்.
“இன்னொரு விஷயம்.
பழகியவர்கள் பலரையும் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்படும். நாம்தான் அவர்களைப் பற்றியெல்லாம், அவர்கள் இல்லாத இடத்தில், பல வருஷங்கள் நேரில் பார்க்காவிட்டாலும், சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதேபோல் நம்மைப் பற்றி அவர்களும் எண்ணுவார்களா என்று சந்தேகம் எழுந்து விடும். இதெல்லாம் விடைகாணாத சந்தேகங்கள். வெளியே சொன்னால் “இவனார்டா வெறும் கிறுக்கனா இருக்கான்!” என்று எண்ணுவார்கள்.
நாம் இருவர் விஷயத்திலும் இதுமாதிரி எண்ணம் போவதற்கு பிரமேயம் கிடையாது. நான் உங்களை அடிக்கடி நினைப்பது கிடையாது உங்கள் நினைவு என்னை விட்டு அகன்றால் அல்லவா திரும்ப நினைப்பது? என்பது ஏற்படும். இதே நிலைதான் அங்கும் என்பது எனக்குத் தெரியும். இதனால் நான் அடையும் பேறுகள் எத்தனையோ, மரியாதைகள் எத்தனையோ, நண்பர்கள் எத்தனையோ.
என்னைவிட வயதிலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் மூத்தவரான தாங்கள் என்னை நண்பனாகக் கொண்டீர்கள். அதேபோன்று அழகிரிசாமியும் என்னிடம் அன்பு கொண்டிருந்தார். இவை நான் செய்த பாக்கியமல்லாது வேறு என்ன?” என்று தீப. நடராஜன் அவர்கள் கடிதங்களில் கி.ரா.வுடன் கொண்டிருக்கும் நட்பின் பேற்றைப் பற்றிப் பெருமிதம் கொள்கிறார்.
விழா முடிந்து சென்னை வந்த மறுநாளே இக்கடித இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கி விட்டேன். “இதைப் படித்து விட்டு கி.ரா.விற்கு கடிதம் எழுதி விட்டு, எனக்கு ஒரு நகல் அனுப்புங்கள்” என்று எனக்கு அன்புக் கட்டளை இட்டது, சாகித்திய விருது பெற்ற இலக்கியத்தந்தை திரு. தி.க. சிவசங்கரன் அவர்கள். படித்து முடித்தவுடன், திரு. தீப. நடராஜன் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் எழுதிய கடிதங்கள் படித்ததைப் பற்றி கூறினேன். அவர் மிகவும் வருத்தமும் ஏக்கமும் தோய்ந்த குரலில் “சுபாஷிணி! முன்போல் ஆத்மார்த்தமாக, எழுதுவது நின்றுவிட்டது. வயதும் ஒரு காரணமாகிப் போய்விட்டது. அந்த “இதயங்களோடு இதயங்கள் பேசிய காலங்களை” நாங்கள் மறக்க முடியாது. “அது ஒரு பொற்காலம்“ என்றார்.
“கி.ரா. மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் படிக்க வேண்டும். கடிதங்கள் எழுதிய எல்லோரும் ‘கி.ரா.’வின் கடிதங்களுக்கு ஏங்கிக் காத்திருந்து இருக்கின்றனர்.” என்று நான் கூறினேன்.
உடனே அவர் எனக்கு குறுஞ்செய்தியில் தகவலை அனுப்பி விட்டார்.
கி.ரா.வின் கடிதங்கள், வெளியிட்டவர் றி. திருநாவுக்கரசு
31/48 ராணி அண்ணா நகர், ரி.ரி. நகர்,
சென்னை- 78 : 2472 8326
நண்பர்களே! இவருடன் தொடர்பு கொண்டு, கி.ரா.வின் கடித இலக்கியங்களைப் படிக்க நானும் தீர்மானித்து விட்டேன்; என்ன இப்போதே கிளம்பி விட்டீர்களா, நானும் வருகின்றேன் நண்பர்களே!
வல்லமை ஆசிரியருக்கு,
விகடனில் வரும் பொக்கிஷம் போல, பிற்கால மீள்பதிவுகளுக்கு ஒரு சேகரம் செய்ய வேண்டும். ஆலோசனைக்குழுவின் சிறிய கமிட்டி ஒன்று அந்த பணியை தொடங்க வேண்டும் என்று கூறுவதற்கு தக்கதொரு தருணம் வர காத்திருந்தேன். அத்தருணமும் வந்து விட்டது. இந்த இலக்கியநோக்குடைய கட்டுரையை முதலில் சேகரத்தில் வைக்கவும். மு.வ. அவர்கள் ‘கரித்துண்டு’ என்று ஒரு புதினம் எழுதினார். அதில் அய்ன் ராண்ட் தாக்கமும், பொதுவுடைமை வாதத் தாக்கமும் இருந்ததாக, என் கணிப்பு. அதை விட முக்யம் மடலிலக்கியம். கு. அழகிரிசாமி அவர்களின் விசிறி நான். அவருடைய மடல் என்னை கவர்ந்தது. சங்கீததுக்கு எவ்வளவோ செய்ய நினைத்தவர், அவர். சென்னை வரும்போது, இந்த நூலை வாங்கவேண்டும். நன்றி, திருமதி.ஸுபாஷிணி.
கரிசல்காட்டு ராஜா -கி.ரா.- கட்டுரை பல அரிய செய்திகளைத்
தாங்கி வந்திருக்கிறது. “கோபல்ல கிராமம்” கதை பற்றி
தீப.நடராஜன் அவர்களின் கூற்று உள்ளிருந்து வருகிறது.
அக்கதையில் கால்க்கட்டை விரல் வெட்டப்பட்ட ஒருவனை,
அதாவது கொலைகாரனை துப்பு கண்டு பிடிக்கும் காட்சி
இருக்கிறது. அந்தக் காட்சியை “முதல் மரியாதை” படத்தில்
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கி.ரா. அவர்களின் அனுமதியோடு
படம் பிடித்துள்ளார். “கதவு” என்ற சிறுகதையில் கதவை வைத்துக்
கொண்டு காவியம் படைத்தவர் கி.ரா.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.