சாந்தி மாரியப்பன்

சூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள்.

“ஹாய்… பிரயாணம் நல்லாயிருந்ததா?..” சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான்.

“ஓயெஸ்.. ரொம்ப நல்லாருந்தது. ஃப்ளைட் ரத்தானாலும் ட்ரெயின்ல இடம் கிடைச்சது நல்லதாப் போச்சு. நேத்திக்கு செம மழை இல்லே?. ப்பா!!..  ஆமா, நீரஜ் எங்கே?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன். நீங்க போயி அம்மாவைக் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டு சார் காலையிலயே கிளம்பிப் போயிட்டார்..”

“ம்..” என்று யோசனையுடன் தலையாட்டிக் கொண்டாள், டிடிஆரிடம் தன்னுடைய டிக்கெட்டை நீட்டியபடியே.

“வேலை ரொம்ப அதிகமோ.. ஒரு வாரத்துல இன்னும் ஸ்லிம்மாகி கல்யாணத்தப்ப இருந்த மாதிரியே தெரியுறியே..” குறும்புடன் கேட்டபடியே கையிலிருந்த சூட்கேஸை காரின் டிக்கியில் போட்டான். வேண்டுமென்றே போலியான மரியாதையுடன் அவள் ஏறுவதற்காக காரின் முன் கதவைத் திறந்து விட்டு, தன் வயிற்றில் கையை மடித்துப் படிய விட்டுக் கொண்டு பணியாளர் போல் லேசாகத் தலை வணங்கினான்.

சற்றுப் பூசினாற்ப் போல் ஆகி விட்டிருந்ததைத்தான் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை குறுகுறுவென்று ஏற இறங்கப் பார்த்தாள்.

“நீங்க மட்டும் என்னவாம்?.. என்னைப் பிரிஞ்ச சோகத்துல இன்னும்தான் இளைச்சுப் போயிருக்கீங்க..” என்றபடி அவன் தொப்பையைச் சுட்டிக் காட்டியவள், “ஒரு வாரமா நான் இல்லைன்னதும் அப்பாவும் புள்ளையும் ஹோட்டல், சினிமான்னு ஜாலியா இருந்திருப்பீங்களே..” என்றபடி கதவைச் சாத்திக் கொண்டாள்.

ஜன நெரிசலில் திருவாரூர்த் தேர் போல் மிக மெதுவாக ஊர்ந்து, ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வந்த கார், சாலையை அடைந்ததும் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு பறந்தது.

அது வரையில் போக்குவரத்தில் கவனமாக இருந்தவன், அப்போதுதான் அவள் கேட்டதே காதில் விழுந்தாற் போல், “ம்… என்னவோ கேட்டியே?.. என்னது?..” என்றான்.

“தெரியுமே.. முக்கியமானதெல்லாம் காதுல விழாதே”

“சரி.. சரி.. நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம்.. கான்ஃபரன்ஸ் நல்லபடியா நடந்துதா?..”

“ம்.. சூபர்ப். எங்க கிளையைப் பத்தி நான் கொடுத்த ப்ரசண்டேஷன் ஹெட் ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க வேலை மேல ரொம்ப திருப்தி அவங்களுக்கு.. அனேகமா இந்த வருஷத்திய சிறந்த கிளைக்கான ட்ராபி எங்களுக்குத்தான் கிடைக்கும்..”

“உனக்கும் சீக்கிரமே ப்ரமோஷனும் கிடைக்கும்ன்னு சொல்லு..”

முதல் நாள் சூறைக் காற்றுடன் பெய்திருந்த மழை வழியெங்கும் நிகழ்த்தியிருந்த திருவிளையாடல்களால் சிற்சில இடங்களில் மெதுவாக ஊர்ந்தும், சில இடங்களில் விழுந்திருந்த மரங்களை நகராட்சியினர் அப்புறப் படுத்திக் கொண்டிருந்ததால் பாதையை மாற்றிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.

வீட்டுக்குப் போய் ‘அக்கடா’ என்று படுக்கையில் விழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. மழையின் காரணமாக அவர்கள் திரும்பி வருவதாயிருந்த விமானம் ரத்தாகி விட, அலுவலகத்தார் எங்கெங்கோ அலைந்து யார் யாரையோ பிடித்து ரயிலில் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள். அதுவுமே ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததில் அவள் மிகவும் களைத்திருந்தாள்.

வீட்டினுள் நுழைந்ததுமே, ஒரு வாரமாக அவள் இல்லாத வீட்டின் அலங்கோலங்கள் அவளுக்கு மலைப்பைக் கொடுத்தன. டீபாயெங்கும் சிந்தியிருந்த உணவுத் துணுக்குகளும், படிந்திருந்த வட்ட வட்டமான காபிக்கோப்பை அடையாளங்களும், இறைந்திருந்த பத்திரிகைகளும் அவளை வரவேற்றன. அறை முழுதும் ஓட்டிய ஒரு பார்வையிலேயே வீடு முழுசும் எப்படியிருக்குமென்று புரிந்து போயிற்று. டிவியின் மேல் படிந்திருந்த தூசியை விரலால் வழித்தெடுத்தவள், ஒரு பெருமூச்சையும் அதனுடன் சேர்த்து எறிந்தாள்.

குளித்து ஃப்ரெஷ்ஷாகி ஹாலில் வந்து அமர்ந்தவளின் பார்வை கடிகாரத்தைத் தொட்டுத் தடவியது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. கவலையுடன் வாசலைப் பார்த்தாள்.

“ஏங்க.. இந்தப் பிள்ளை, யார் வீட்டுக்குப் போனான்.. உங்க கிட்ட ஏதாச்சும் சொன்னானா?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன்னான். யார் என்னன்னு கேட்டுக்கலை..”

“நானில்லாத இந்த ஒரு வாரத்துலயாவது பொறுப்பு வந்து, அவன் கிட்ட மாற்றம் இருக்கும்ன்னு நினைச்சா அப்படியேதான் இருக்கான். ஏங்க!!.. நீங்க அவன் கிட்ட பேசிப் பார்க்கக் கூடாதா?..”

“நீயாச்சு.. உன் பிள்ளையாச்சு.. பஞ்சாயத்துக்கு நான் வரலைப்பா.. ஆளை விடு..” என்றபடி கார்கள் விர்ர்ரிக் கொண்டிருந்த ஏதோவொரு சானலில் மூழ்கி விட்டான்.

“ம்க்கூம்.. என் பிள்ளையா?.. ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்சு கப்போட வரச்சே.. உங்க பிள்ளைன்னு மார் தட்டிக்குவீங்கல்ல.. இனிமே அப்படிச் சொல்லுங்க.. அப்ப பேசிக்கறேன் உங்களை..”

பத்து மணிக்கப்புறம் வந்த நீரஜ், “ஹாய் மா. எப்போ வந்தீங்க?. சச்சின் வீட்ல சாப்பிட்டுட்டேன். எனக்காகக் காத்திருக்காம தூங்குங்க..” என்றபடி அவனது அறையை நோக்கி நகர்ந்தான்.

“இருடா பெரிய மனுஷா… கொஞ்சம் பாலையாவது சாப்ட்டுட்டுப் படு..” என்றபடி அடுக்களைக்குள் சென்று, பதமாகக் காய்ச்சிய பாலை, பிள்ளையின் கையில் நீட்டும்போது, நிகோடின் வாசனையும், சூயிங்கம் வாசனையும் கலந்து வீசும் மணம் எங்கிருந்தோ வருவதை உணர்ந்தாள். அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

‘சே.. சே.. இருக்காது..’ என்று செய்து கொண்ட சமாதானத்தில் ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றது, “குட் நைட் .. மா” என்றபோது அவன் வாயிலிருந்து வந்த அதே வாசனை.

என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு. பயணக் களைப்பால் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய போதிலும் இரவு முழுவதும் பொட்டு உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள். ‘என் பிள்ளையா இப்படி?..’ என்ற ஒற்றைக் கேள்வி அவளைத் தூங்க விடாமல் செய்திருந்தது. அதிகாலையில் லேசாகக் கண்ணயர்ந்தவள், வழக்கமான நேரத்தில் விழிப்புத் தட்டவும், அதற்கு மேல் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

‘இன்னிக்குக் காப்பிய தோட்டத்துல உக்காந்து குடிச்சா என்ன?..’ என்று தோன்றவும், கையில் காபியுடன் தோட்டத்திலிருந்த நாற்காலிகளை விடுத்து, ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம். வழக்கமான இரும்பு, மரம் போன்ற சமாச்சாரங்களை விடுத்து, ஃபைபரால் செய்யப்பட்ட ஊஞ்சல் அவள் சொல்லியிருந்தபடி மாமரக் கிளையில் தொங்க விடப் பட்டிருந்தது. காபியையும் செய்தித்தாளையும் முடித்து விட்டு, தோட்டத்தைச் சுற்றி வாக்கிங் புறப்பட்டாள்.

மரத்தையே பெயர்த்தெடுத்து வீசிய சூறைக்காற்று, இலவம் பஞ்சை விட்டு வைக்குமா என்ன?.. வானரர்கள் புகுந்த கிஷ்கிந்தையாய்ச் சிதறிக் கிடந்தது அவளது தோட்டம். ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து கிடந்ததில், அது தக்காளியா கத்தரியா என்று பகுத்தறிய முடியாதபடி பின்னிக் கிடந்தன வாடி வதங்கிய இலைகளுடன் இருந்த செடிகள். செவ்வரளியின் கிளைகள் முறிந்து தொங்கின. வாசற்பக்கமிருந்த முல்லைக் கொடியை பெயர்த்தெடுத்து வீசிய காற்று அதை கரும்பின் மேல் படர விட்டிருந்தது. புறக்கடையில் அவள் ஆசையாக கேரளாவிலிருந்து கொண்டு வந்து நட்டு வளர்த்து வந்த செவ்வாழை மரம், அவள் ஊருக்குக் கிளம்பும்போது, இப்பவோ அப்பவோ என்று குலை தள்ளத் தயாராக இருந்தது. இப்போது இரண்டு சீப்பு பிஞ்சுகளும் தரையில் புரள, எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் போல் குனிந்து கிடந்தது.

சிறு பெருமூச்சுடன் தோட்டத்தைச் சுற்றி வந்தவளின் கண்கள், தோட்டம் பராமரிப்பில்லாமல் காய்ந்த சருகுகள் கூட்டப்படாமல் கிடந்ததை கவனிக்கத் தவறவில்லை. முதல் நாள் பெய்த மழையைத் தவிர்த்து, அவை தண்ணீர் கண்டு குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது ஆகியிருக்கும் என்பதை லேசாக காயத் தொடங்கியிருந்த இலைகள் காட்டிக் கொடுத்தன.

“வாடிம்மா.. ஊர்லேருந்து வந்தாச்சா?..” என்றபடி கையில் ஒரு சிறு ப்ளாஸ்டிக் கூடையுடன் நுழைந்தாள் பக்கத்து வீட்டு ஜமுனா மாமி. கீதா வீட்டுப் பூக்களின் ஒரு பகுதி, மாமியின் வீட்டுப் பூஜையறையை அலங்கரிப்பது வழக்கம். வரும் போதெல்லாம் முதல் நாளே பறித்துச் சென்று அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை, கீதாவுக்கு கொண்டு வந்து கொடுப்பாள். பிரதியுபகாரமாக இல்லை.. ‘இவளும் என் பொண்ணாட்டம்தானே..’ என்ற நினைப்பால்.

“நீ ஆத்துல இல்லைன்னா நேக்கு என்னவோ வெறிச்சோட்ன மாதிரி இருக்குடி. ஆமா, காப்பி குடிச்சயா?.. புள்ளாண்டான் ஏந்துக்கலையா இன்னும்?.. நீ இல்லைன்னா, ரெண்டு பேருக்குமே துளிர் விட்டுடுது. அதென்ன!!.. ஒரு நாளைப்போல தெனமும் கொட்டமடிக்கறது? நன்னால்லை பார்த்துக்கோ.” பதிலை எதிர்பாராமல் மாமியின் கையும் வாயும் வேகமாகத் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தன. கூடை நிரம்பியதும், “வரேண்டிம்மா.. மாமா ஏந்து குளிக்கப் போயிட்டார். அடுப்பில் பாலை வெச்சுட்டு வந்த்ருக்கேன்” என்றபடி போய் விட்டாள். அவள் அப்படித்தான்.

அன்றும் மறு நாளும் அலுவலகத்துக்கு விடுமுறையாக இருந்தது அவளுக்கு வசதியாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த நர்சரியில் சொல்லி தோட்டத்தை சீரமைக்க ஆள் கிடைக்குமா என்று விசாரித்து வந்தாள். வந்தவனின் உதவியுடன் முறிந்து கிடந்த கிளைகளைக் கழித்து, காய்ந்த செடிகளை அப்புறப் படுத்தி, குப்பை கூளங்களையெல்லாம் சுத்தப் படுத்தி நிமிர்ந்த பின் தான் ஆசுவாசமாக இருந்தது.

மண்ணைக் கொத்திச் சீரமைத்து சமப் படுத்தி விட்டு, “நாளைக்கு உரம் கொண்டாந்து போடறேன்” என்று சொல்லிப் போனவன், கொண்டு வந்து கொட்டிய இயற்கையுரத்தை அவனது உதவியுடனேயே தோட்டத்திற்குப் போட்டாள்.

அதன் பின்னான வார நாட்கள் வழக்கம் போல் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாய் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. நீரஜ் இப்போதெல்லாம் விட்டேத்தியாய் இருப்பதாய்ப் பட்டது. படிப்பிலும் முன் போல் அக்கறை காட்டுவதாய்த் தெரியவில்லை. ‘சரி,.. இளம் பருவம். அப்படித்தான் இருக்கும். அவன் போக்குல விட்டுத்தான் பிடிக்கணும்’ என்ற அவளது எண்ண ஓட்டம், ‘தும்பை அறுத்துக்கிட்டு காளை ஓடிருமோ?’ என்று கவலையுடன் திசை திரும்ப ஆரம்பித்திருந்தது.

வழக்கம் போல் காலை நடைக்கு தோட்டத்தைச் சுற்றி வந்த அவளது கால்கள், அவளுக்குப் பிரியமான மருதாணிச் செடியின் அருகே வந்து நின்றன. ஒரு வாரமான இடை விடாத உழைப்பும், காட்டிய கவனமும், கொட்டியிருந்த உரமும் அவளது தோட்டத்தை பழைய பொலிவான நிலைக்கு மெதுவாகத் திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்தன. மருதாணியின் இலைகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவளுக்கே சிரிப்பு வந்தது. ‘அலுவலகத்தில் அத்தனை பேரை சமாளிக்கிறேன். ஒரு சின்னப் பையனை எப்படிச் சமாளிப்பதுன்னு கவலைப் படுறேனே!!.. அவனைக் கவனிக்கிறதுல எங்கியோ சின்னதா கோட்டை விட்டிருக்கேனோ என்னவோ?.. சரி செஞ்சுக்க முடியாததா என்ன?. ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”

தீர்வு மனதில் எழுந்ததும், திடீரென்று உலகமே அழகாக மாறி விட்டது போலிருந்தது, அவளுக்கு. பன்னீர் ரோஜாவை முகர்ந்து கொண்டே ஏதோவொரு பிடித்தமான பாடலை அவள் முணுமுணுக்க, அவளுக்குப் போட்டியாக இனிமையாக குரலெழுப்பியது கொன்றைப் பூக்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஒரு தேன்சிட்டு.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மீண்டும் துளிர்த்தது

  1. தும்பை அறுத்துக்கிட்டு காளை ஓடிருமோ?’ என்‌கி‌ற கவலை‌யு‌ம்‌, பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..” என்‌று நம்‌பி‌க்‌கை‌யு‌ம்‌ கா‌ட்‌டுகி‌ற அற்‌பு‌தமா‌ன கதை‌. வா‌ழ்‌த்‌துக்‌கள்‌ சா‌ந்‌தி‌ மா‌ரி‌யப்‌பன்‌!.

  2. 1.’…தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள்…’
    ~ ‘ஓ’ போட்டுட்டேன்!
    2. ஆறாம் வகுப்பில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. வீட்டு பசுமாட்டின் பெயர் ‘டைடி’ என்பது கூட நினைவில். கணவன் பந்தயம் போடுகிறான் – நீ மூன்று நாளில் செய்வதை நான் ஒரு நாளில் செய்வேன் என்று. ஆக மொத்தம், அவன் மூன்று நாளில் செய்வதை அவள் ஒரு நாளில் செய்ய, அவள் ஒரு நாளில் செய்வதில் மூன்றில் ஒரு பங்கு அரைகுறையாக செய்ய!
    3.’..‘சே.. சே.. இருக்காது..’ என்று செய்து கொண்ட சமாதானத்தில்..’ 
    ~ இந்த அம்மாக்காரிகளே இப்டித்தான்!
    4.’..ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றது, “குட் நைட் .. மா” என்றபோது அவன் வாயிலிருந்து வந்த அதே வாசனை…’
    ~ இந்த பசங்களே (பொம்பளைப்பசங்க உள்பட) இப்டித்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.