-சேஷாத்ரி ஸ்ரீதரன்

பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவன் கீழ் மன்னன்(king). மன்னன் கீழ் அரையன்(duke). அரையன்  என்ற அரசன் கீழ் கிழான்(knight) அல்லது கிழார் கோன் என்பவாம். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேந்தர் 4-5 பேர் இருந்தால் மன்னவர் அதைவிட கூடுதலாக 15-20 பேர் வரை இருந்தனர். அரையர்கள் 40-50 பேருக்கு மேல் இருந்தனர். கிழார்கள் 150-200 பேருக்கு மேல் இருந்தனர். கல்வெட்டுப் பதிவுகளில் நிலம் விற்று ஆவணமாகும் போது அதை வேளாண் எனும் அரையர்களும் கிழார்களும் ஒப்பமிட்டு ஏற்பிசைவு தந்ததை வைத்து மேற்சொன்ன கூற்றைச் சரி என்று உணரலாம்.

வேளாண் என்னும் அரையர்களான அரசர்கள் இக்கால் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறத்தவர், அடக்கி ஆண்டவர், மண்ஆண்டவர், பாராண்டவர் என்று மார்தட்டிக் கொள்ளும் சாதிகளில் கலந்துவிட்டது தெரிகின்றது. குறிப்பாக, வெள்ளாளர், துளுவ வேளாளர், படையாச்சி, கொங்கு வேளாளர், கள்ளர் முதலாய சாதிகளே அவை. பறையர்கள் சில இடங்களில் கிழார்களாக அல்லது கிழார்களிடத்திலும் அரையர்களிடத்திலும் பாதுகாவலர்களாக (பந்தோபஸ்து), ஊராளிகளாக, படைத் தலைவர்களாக இருந்த போர்க்குடிகளாவர். இதனால் இந்த அரையர், கிழார்களிடத்தில் பறையருக்குப் பல நேரங்களில் அவமதிப்பு நேர்ந்துள்ளது. இந்த அவமதிப்பு பிற்காலத்தே 16-17ஆம் நூற்றாண்டில் தீண்டாமையாக உருப்பெற்றது. மேற்கண்டதை விளங்கிக்கொள்ள சில கல்வெட்டுகள் சான்றாக உள்ளன.

இக்கால் பறையர்கள் பலர் தமது தீண்டாமைக் கொடுமைக்குப் பிராமணரே பொறுப்பு, காரணம் என்று தப்பும் தவறுமாக எண்ணமிட்டு வருகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தாத, எண்ணிக்கையில் குறைவான பிராமணரால் அவ்வாறு தம்மைத் தீண்டாமையில் ஆட்படச் செய்திட முடியாது என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்றோர் பிராமணரை முன்னிலைப்படுத்தியே, பிராமணரை வெறுக்கும்படியாக எழுதியும் பேசியும் பரப்புரை செய்து வந்தது தான். இதைப் பறையர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லா பிற சாதிமாரும், அரையர் குடியில் வந்த சாதிகளும் கூட முழுமையாக நம்புகின்றனர். இதனால் தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளனர். எப்படி என்றால் அடுத்த வரும் 500 ஆவது ஆண்டில் ஒரு குழந்தை பிராமண சாதியில் பிறக்கப் போகின்றது என்றால் அதையும் இதே வெறுப்பில்தான் தமிழ்ச் சாதிகளில் பலர் அணுகுகின்றனர். குழந்தை பிறக்கும் என்ற செய்தி மட்டும் தான் உறுதியே தவிர அதற்கு பெயர் இல்லை, அதன் வினை என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அதன்மீதும் வெறுப்புக் கருத்து சுமத்தப்படுகின்றது. இது எந்த வகையிலும் பகுத்தறிவின்பாற்படாது என்பதை யாவரும் அறிவர்.   இதைப் பற்றி தமிழ்ச் சாதிகள் கருத்துத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஈண்டு சில கல்வெட்டுகள் ஆராயப்படுகின்றன. இதைப் படித்தாவது தமிழ் மக்கள் இந்த அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கரின் கற்பனைக் கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் பறையர்கள் அரையர் குலத்தவரான பண்ணையார்களிடம் தான் வேலை செய்கின்றனர். அவருடைய சுரண்டலுக்கும் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகி அவமானப்பட்டனர் என்ற வகையில் இந்த நிலக்கிழார் சாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்த்தாமல் பிராமணரை நோக்கி, தப்பாக இம்மக்களை வழிநடத்தியதால் 130 ஆண்டுகாலப் போராட்டம், உழைப்பாற்றல், காலம் எல்லாம் வீணாகிப்போனது.  இன்றுவரை பறையர் இழிவு, குறை தீரவில்லை என்பதே உண்மை.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உடையவர் சன்னதி எதிரே 4 –ம் பிரகாரத்தில் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகள்.

 1. ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
 2. ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
 3. ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே  இருந்தேநாகில் எந்
 4. மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நானே
 5. சிதைந்துள்ளது

கைக்கோளர் – செங்குந்தப் படைவீரர்; முதலி – தலைவர்; நாயநான – தலைவர்க்கு தலைவனான; மிணாட்டி – மனைவி; அம்மை – தாய்; மிணாளன் – கணவன்; உடன்வேளையாக – in no time, சட்டென்று.

விளக்கம்:  அழகிய மணவாள மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவர்களுக் கெல்லாம் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அந்தவகையில் இவர் உயிர் துறக்கும் முன்பே நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

 1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றி[ரு]ந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
 2. கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரைய னேந் இவற்கு உட
 3. ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
 4. தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
 5. நே மிணாளநாவேந்.

விளக்கம்:  அரியானான கிடாரத்தரையன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

 1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றிருந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு
 2. திருவரங்கத்துக் கைக்கோளரில் உலகநாந அழகானைச் சோ
 3. ழ மாராயநேந் இவற்கு உடந் வேளையாகச் சாவக்கடவேநாகவு
 4. ம் இவற்கு பின்பு சாவாதே இருந்தேநாகில் எந் மிணாட்டியைப் 
 5. றையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நாநே மிணாளநா
 6. வேந்.

விளக்கம்: உலகனான அழகானைச் சோழன் மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தப் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’ இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

மேற்கண்ட மூன்று திருவரங்கக் கல்வெட்டில் மூன்று செங்குந்தர்களான கைக்கோளர்கள் படைத் தலைவர்களாக தனித் தனியே சூளுரை ஏற்றது பொறிக்கப்பட்டுள்ளது. கைக்கோளர் என்போர் பல்லவரது பட்டடைக்குடி / படைக்குடியாக பல்லவர்களால் உருவாக்கப்பட்ட தனி சாதியார் ஆவர். அரையரான அகளங்க நாடாழ்வான் இவர்களை கட்டாயப்படுத்தி எவ்வாறு இழிவாக சூளூரை ஏற்கசெய்துள்ளார் என்பது தெரிந்தாகிவட்டது. பார்வை நூலில் இவர்கள் சாகும்  வரை வேலைக்காரனாக சாவதாக சூளுரை ஏற்பதாக பொருத்தமற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. வேந்தர் பெயரும் காலமும் குறிக்காததால் கல்வெட்டின் காலம் என்ன என்று அறிய முடியவில்லை.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 24, பக்கம் 162, தொடர்ச்சியாக மூன்று கல்வெட்டுகள்  (A.R.No 267 to 269 of 1930) 

விழுப்புரம் மாவட்டம், ஜம்பை, ஜம்பநாதர் கோயில் கல்வெட்டு

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்கு யாண்டு 11 வது பெண்ணை வடகரை வாணகோப்பாடி நாட்டு செண்பையான வீரராசேந்திர சோ
 2. ழபுரத்து உடையார் திருத்தொந்தோன்றி ஆவுடையனாயனார் தேவதாநம் பெண்ணை தென்கரை குணமங்கலம் பயிற் செய்யும் படிக்கு ஏழாவழ முதல் காசாயம், பொன்வரி, ஆளமஞ்
 3. சி, அன்தராயம் கொள்ளக் கடவதல்லவாகச் சொன்னோம் ஆறகளூருடைய வாணகோவரையன் இராசராச தேவன் வந்நெஞ்ச இராயனேந். இப்படி சன்திராதித்தவரை செய்வதே. இது மாறுவான்
 4.  தன் மிணாட்டியை பரைமாயன்நுக்கு குடுப்பான். இது பன்மாகேசுர இரக்ஷை.

செண்பை – ஜம்பை; காசாயம் –  காசாக வந்த வரி; ஆளமஞ்சி – நீர்நிலைகள் பேண வரி; அன்தராயம் – நிலவரி அல்லாத அகநாட்டு வரி ; மாறுவான் – இந்த ஏற்பாட்டை மாற்றுபவன்; குடுப்பான் – கொடுத்தவன் ஆவான்.

விளக்கம்: காடவப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கனின் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1253) பொன்பரப்பின வாணகோவரையர் வழிவந்த வாணகோ இராசராச தேவன் வன்நெஞ்சராயன் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்த வாணகோப்பாடி நாட்டு செண்பை கிராமத்தில் அமைந்த திருத்தொன்தோன்றி ஆவுடையார் கோவிலின் தேவதானம் ஆன தென்பெண்ணை தென்கரையில் உள்ள குணமங்கலம் என்ற ஊரில் பயிர் செய்வதற்கு காசாயம், பொன்வரி, அன்தராயம் உள்ளிட்ட  வரிகள் தண்டவேண்டாம் என்று வரிவிலக்கு அளித்தேன் என்கிறான். இந்த ஏற்பாட்டை மாற்றுபவன் தன் மனைவியை பரைமாயன் புணர விட்டுக் கொடுத்தவன் ஆவான். இந்த தர்மத்தை சிவபக்தர்கள் காக்க வேண்டும். பறையர் குறித்து வாணகோ வன்நெஞ்சன் கொண்டிருந்த இழி கருத்து இக்கல்வெட்டில் வெளிப்படுகின்றது.

பார்வை நூல்: தொல்குடி வேட்டுவர் சமூக ஆவணங்கள், ஆசிரியர் ப. ஆனந்தகுமார், பக்.106

கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்

ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழதேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு 11 வதுக் கெதிராவது புரட்டாதி மாதம் 18 தியதி ஞாயிற்றுக் கிழமை முதல் வாயறைக்கா நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலனேன். நாயனார் திருமுருகன்பூண்டி ஆளுடையார்க்கு கோயில் நாயகர்க்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காஸ்ய கோத்திரத்து அவிநாசி முருகனான சீகாழியானும் அவிநாசிமுருகன் உள்ளிட்டாரும் சாந்தாரைக் காப்பான் திருவேங்கடமுடையானும் இவ்வனைவோங்கள். இவ்வச்சு பத்துக் கொண்டு எங்கள் மக்கமக்கள் குடங்கொண்டு கோயில் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செல்வதாக. இது பன்மாகேஸ்வர ரட்சை.

நல்லியாண்டு – முடிசூட்டிய ஆண்டு, வெள்ளாளன் – கிழான் அல்லது அரையன், மாப்புள்ளி – தலைமை மதிப்பீடு செய்வோன், chief assessor, சாந்தாரை – சந்தனக் கல், மக்க மக்கள் – பேரர் வழிப் பேரர்.

விளக்கம்: கொங்கு சோழன் விக்கிரமசோழன் முடிசூட்டி 11 ஆம் ஆண்டிற்கு எதிர்ஆண்டான 12 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1285) புரட்டாசி மாதம் 18 –ம் நாள் ஞாயிறு தொட்டு வாயறைக்கா நாட்டு பல்லடத்தின் கிழானான வெள்ளாளனிடத்தில் மாப்புள்ளியாக பொறுப்பில் இருக்கும் சோழன் பறையனான தனபாலன் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஒவ்வொரு நாளும் அமுதுபடிக்காக நாழியரிசிக்கு பத்து அச்சு வழங்கினான்.  இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காசியப கோத்திரத்து அவிநாசி முருகன் சீகாழியான், அவிநாசி முருகன்,  திருவேங்கடமுடையான் ஆகியோர் பத்து அச்சு பெற்றுக்கொண்டு மக்களுக்கு மக்கள் என வழிவழிப் பேரர் காலம் வரை இதைநடத்தி வருவோம் என்று உறுதி கூறுகின்றனர்.

இதனால் சோழப்பறையன் தனபாலன் கோவிலில் நுழைந்து இறை வழிபாடு செய்துள்ளான் என்று உறுதி ஆவது தீண்டாமை அக்கால் இருந்த்தில்லை என்பது மட்டுமல்ல அவன் தலைமை மதிப்பீட்டாளனாக இருந்துள்ளான் என்பது பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதையும் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதற்கு சான்று. இதாவது, நிலம், பயிருக்கு வரி மதிப்பீடு செய்தான் என்பதற்கு சான்று.

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _  க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
 2.  நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
 3. பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
 4. ணுவாரும்  நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும்   பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும்      இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
 5. யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
 6. ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும்      நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
 7.  மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
 8. இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல்  செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
 9.  க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை]  இட்டுக் கொன்றுபோடக்  கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
 10. இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
 11.  ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.

மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம்  பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

விளக்கம்: வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன்,  அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர்  ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி  சூளுரை செய்துள்ளனர். அரசியல் அறியாத வெகுளி மக்கள் அவர்கள் என்று தெரிகின்றது. இவர்கள் பறையரை இழிவாக மதிப்பிட்டது படைத்துறையில் அப்படியாக இருந்த ஒரு சொல்வழக்கைப் நமக்குப் புலப்படுத்துகின்றது. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றது.மொத்தத்தில் கல்வெட்டுச் செய்து அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 49-50, (A.R.No 105 of 1990) 

    

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பறையரை அவமதித்த அரையர்

 1. அரையர்கள் ஆண்ட பரம்பரை என்றால் … மன்னர்கள் , வேந்தர்கள் யார்…
  பள்ளரா அல்லது சக்கிலியரா… உங்கள் கட்டுக்கதைகளை நம்ப நாங்கள் தயாராக இல்லை பறையர் என்ற பேரினத்தில் பல பிரிவுகளில் ஒரு பிரிவு அரையர்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *