-மேகலா இராமமூர்த்தி

கிளைமீது அமர்ந்திருக்கும் பால்வண்ணக் கொக்கைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் பார்கவ் கேசவன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 215க்கு அளித்துள்ளார் சாந்தி மாரியப்பன். பார்கவுக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

”கண்ணைக் கவர்கின்ற கொக்கின் வெண்ணிறத் தோற்றமானது மாரிக்காலத்து ஆம்பல் மலரை ஒத்திருக்கின்றது” என்கிறது சங்கநூலான நல்ல குறுந்தொகை.

”மாரி யாம்ப லன்ன கொக்கின்…”  (குறுந்: 117)

கொக்கினைப் பற்றிப் பாப்புனையக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன் கவிபடைக்க!

”காட்டைக் கொளுத்தித் தன் கூட்டை அழித்துவிட்ட மனிதனிடம் தான்பட்ட பாட்டைக் கூறும் கொக்கின் சொற்கள் அவன் செவியில் ஏறுமா?” என்று கேட்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

கேட்குமா…

மரங்களை வெட்டி
மனிதன்
மழையைத் தடுத்துவிட்டான்..

காட்டைக் கொளுத்திக்
கொக்கின்
கூட்டைக் கலைத்துவிட்டான்..

மீன்கள் வாழும்
குளங்களைத் தூர்த்தே
மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
கொக்கின் பிழைப்பில்
மண்ணைப் போட்டுவிட்டான்..

பட்டமரக் கிளையிலிருந்து
கொக்கு
பட்ட பாட்டைக்
கூறுவது
கேட்குமா மனிதன்
காதுகளில்…!

*****

”பற்றற்ற எதிர்பார்ப்பில் தனித்துத் திரிதலில் அலுப்பேதுமில்லா இக்கொக்கு, நாளைய பறத்தலின் நம்பிக்கையோடு காத்திருக்கின்றது” என்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

காத்திருத்தலின் அதீத சுகத்தில்
போனவை திரும்புவதில்லை
வருவதில் பற்றற்ற எதிர்பார்ப்பில்
தனித்து அலைந்து திரிதலில்
அலுப்பேதும் அருகில் இல்லை
கூட்டமாகப் பறந்து திரிந்தாலும்
தனி யுலகின் ஏமாற்றங்களும் யதார்த்தங்களும்
யார் மீதும் குறை சொல்லாத
வாழ்தலின் நிறைவு
நாளைய பறத்தலின் நம்பிக்கையில்!

*****

”என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்கவும், வெள்ளத்து நீரில் துள்ளி வரப்போகும் உறுமீனைக் கொத்தவும் காத்திருக்கின்றது கொக்கு” என்று பேசும் பாவினைப் படைத்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

கொக்கு ஒன்று காத்திருக்குது
அதற்குப் பரிச்சயமில்லா உலகம்
நீர்நிலை தேங்க இயலா நிலம்
அக்னிப் பிழம்பில் சுட்டுப்போன சுடுவெளி
இலைகளும் தழுவாத பட்டமரம்
பசுந்துளிர்களைப் பறிகொடுத்த கிளைகள்
மலர்களின் மணம் பரப்ப மறந்து போனாலும்,
என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்று
வெள்ளத்து நீரில் புரண்டு வரப்போகும்
உறுமீனுக்கென
பாவம் கொக்கு ஒன்று காத்திருக்குது!

*****

”பறவைகளும் விலங்குகளும் நிறைந்திருந்த கானகம் நீரின்றி வறண்டுபோனதால் மகிழ்வாய் மீனுண்ட கொக்கு இன்று வான்நோக்கி அமர்ந்திருக்கின்றது மழைக்காக!” என்றுரைக்கின்றார் திரு. சுந்தர்.

தனிமை
நினைவுகளின் சாரலில்
சிறகடிக்கிறேன்
தனிமையின் தாகம் தணிக்க
நினைவுகளின் ஈரமே மிச்சம்!
வசந்தகாலங்கள் வாசல் தெளிக்க
வண்ணமயில்கள் கோலமிட
வண்டுகளும் பூச்சிகளும்
ரீங்காரமிட
காகம் கரைய
பருந்து வட்டமிட
ஆந்தையின் அலறலில்
அறிவிப்புமணி அலறடிக்க
மைனாவின் மெல்லிசை
தேன் சிந்த
வானரங்களும் வௌவால்களும்
களிநடனமாட
நரியின் ஊளையிலும்
புலியின் உறுமலிலும்
புள்ளி மான்கள் பாய்ந்தோட
விண்ணைப் பிளக்கும்
யானையின் பிளிறலையடுத்து
சிங்கத்தின் கர்ஜனையில்
நிசப்தம் சிறிது நீடிக்கும்
ஆரவாரம் மீண்டும் ஆர்ப்பரிக்கும்
அருவியின் வீழ்ச்சியும்
ஓடிய நீரோடைகளும்
தேங்கிய குன்றுகளும்
பசையற்றுப் போனதேனோ…?
வனத்தின் வாரிசுகள்
தாகவேட்கையில் திரிவதேனோ….?
அறிவற்ற மனித மிருகத்தின்
மரங்கள் வேட்டைதான் காரணமோ…?
நீர் நிலையில் ஊன்றிய
என் கால்களும்
மீன்களை நோக்கிய
என் கழுத்தும்
மழையின் வரவை நோக்கி
பட்டமரத்தில் உச்சிக்கிளையில்
விண்ணை நோக்கிய
காத்திருப்பு மேன்மேலும் தொடர்கிறது…!

கொக்கினை வைத்து நம் வித்தகக் கவிஞர்கள் வித்தாரக் கவி படைத்திருக்கின்றனர் நன்று! அவர்களுக்கு என் பாராட்டுக்கள் சேரட்டும் சென்று!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

இலைகள் எல்லாம் கிளைகளின் உறவறுத்தாயிற்று..!
பசுந்தளிர்களை மீண்டும் பிரசவிக்க இயலாது பட்டமரமாயிற்று!
இருந்தும்…வெள்ளைநிறப் பூவொன்று
இங்கே விரிந்திருக்கும் விந்தையென்ன…?
முற்றும் இழந்தபின்னும் கிளை
கொக்கைத் தாங்கிநிற்கும் கோலம் புரிகிறதா…?
மரம் இறந்தும் வாழ்கிறது…!
மனிதம்…? இரக்கமின்றிச் சாகிறது!

”கிளைகளும் இலைகளும் உறவறுத்து, பட்டுப்போய்விட்ட மரமோ பால்வெள்ளைக் கொக்கு பூவாய் அமர்ந்திருக்க இடம் கொடுத்ததனால் இறந்தும் வாழ்கின்றது! இயற்கை நேயமற்று வனமழிக்கும் மனிதமோ இரக்கமின்றிச் சாகின்றது!” எனும் புதிய சிந்தனையைத் தன் கவிதையில் பதியம் போட்டிருக்கும் திருமிகு சத்யாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 215-இன் முடிவுகள்

  1. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாக திகழ்கின்றன. அவை அவ்வவ் காலச் சூழ்நிலைகளை அவ்வாறே காட்ட வல்லன.அந்த வகையில், இன்று உலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வன அழிப்பு உள்ளது.அதனைக் கருவாக்கி மேலமைந்த கவிதைகள் காலத்தின் கண்ணாடியாகவே தோற்றமளிக்கின்றன.இக்காட்சியைப் பார்த்தவுடன் “பட்டபின்னும் மரக்கிளையின் பயன் தன்னை மனிதர்க்கு பாடமாக்க” சிந்தை எண்ணியது.அதன் வழி விளைந்த என் கவிதை, சிறப்புக் கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதோடு, திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், வல்லமைக் குழுவினர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *