நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53
53. சுற்றந் தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களுக்கும் முன்னால இருந்த ஒட்டுஒறவ நெனப்புல வச்சி பேசுத கொணம் சொந்தக்காரங்களுக்கு உண்டு.
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
ஒருத்தனுக்கு எப்பமும் கொறையாத நேசத்தோட சொந்தபந்தம் அமைஞ்சிடுச்சின்னா அது அவனுக்கு வளர்ச்சி கொறையாத செல்வங்கள் பலதையும் கொடுக்கும்.
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
சொந்தக்காரங்களோட மனசு விட்டு பேசிப் பழகாதவனோட வாழ்க்க, கரையில்லாத குளத்துல தண்ணி நெறஞ்சது கணக்கா ஒபயோகமில்லாமப் போயிடும்.
குறள் 524:
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
சுத்திச்சூழ இருக்குத பாசமான சொந்தக்காரங்களோட வாழுத வாழ்க்க தான் ஒருத்தன்கிட்ட இருக்க காசுபணத்தோட ஒபயோகம்.
குறள் 525:
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்
வேண்டியதக் கொடுக்குத குணமும், நயமா பேசுத கொணமும் இருக்கவனச் சுத்தி சொந்தக்காரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க.
குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
தேவைப்படுதவங்களுக்கு அள்ளிக் கொடுத்து கோவப்படாம ஒருத்தன் இருந்தாம்னா அவனப்போல சுத்திவர சொந்தபந்தம் இருக்கவன் ஒலகத்துல இல்லன்னு சொல்லிப்புடலாம்.
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
தனக்கு சாப்பிடக் கெடச்சத ஒளிச்சு வையாம தன் இனத்தக் கூப்பிட்டு சாப்பிடுத காக்கா கணக்கா கொணம் உள்ளவுகளுக்கு மட்டுமே ஒலகத்துல செல்வம் உண்டு. .
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
ராசா எல்லாரையும் ஒண்ணுபோலப் பாக்காம அவனவன் சிறப்புக்கு ஏத்தபடி பாத்தா அத விரும்பி அவரப் பிரியாம வாழுத சுற்றத்தார் பலர் இருப்பாங்க.
குறள் 529:
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்
ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிஞ்சு போன சொந்தக்காரவுக அந்தக்காரணம் பொருந்தாது னு தெரிஞ்ச பொறவு திரும்ப சொந்தம் கொண்டாட வருவாக.
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
தன்னவுட்டு பிரிஞ்சு போயிட்ட ஒருத்தன் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு திரும்பி வந்தாம்னா அவன சோதிச்சு பாத்த பொறவுதான் சேத்துக்கிடணும்.
(அடுத்தாப்லயும் வரும்….)