வை.கோபாலகிருஷ்ணன்

உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிவிட்டு, தன் கணவரிடம் வினவினாள்.

”அம்மா இங்கு இல்லை. எங்கு போனார்களோ தெரியாது. இனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி விட்டு வனஜாவை கடுப்புடன் முறைத்துப் பார்த்து விட்டு, எங்கோ வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார்.

பகல் பூராவும் எப்போதுமே இந்த மனுஷனுக்கு வனஜா மேல் ஒரே கடுப்பு வருவது சகஜம் தான். வாக்கப்பட்டு வந்து ஆறு மாதங்களாகத்தான் அவளும் பார்த்து வருகிறாளே! ஆனால் ராத்திரியானால் அவரின் கடுப்பையெல்லாம் எங்கோ பறந்து போக வைத்து, பெட்டிப் பாம்பாக ஆக்கி விடுவாள், அந்த கெட்டிக்காரி, வனஜா.

ஜாதக விசேஷம் அப்படி. ஜாதகப் பொருத்தம் இல்லை, இந்த ரெண்டு ஜாதகத்தையும் சேர்க்க வேண்டாம் என்றார் ஒரு ஜோஸ்யர். செகண்ட் ஒபீனியனுக்காக இன்னொரு ஜோஸ்யரிடம் போனார், வனஜாவின் தந்தை.

அந்த ஜோஸ்யர் ஜாதகங்களைப் பார்த்து விட்டு, “பையனுக்குப் புனர்பூசம் நக்ஷத்திரம்; பெண்ணுக்கு உத்திராடம் நக்ஷத்திரம். சஷ்டாஷ்டக தோஷம் மட்டும் உள்ளது” என்றார். அதுவும் “மித்ர சஷ்டாஷ்டகம் தான். மற்றபடி தேவலாம்” என்றார்.

“சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? அது என்ன செய்யும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?” என்றார் வனஜாவின் அப்பாவும் விடாப்பிடியாக.

வந்துள்ள நல்ல வரனை விடக் கூடாது. ‘நல்ல பையன். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். சொந்த வீடும் சொத்து சுகமும் உள்ளது. ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சொல்லி, மற்ற எல்லாம் பொருந்திய மாப்பிள்ளையை நழுவ விடலாமா?’ என்பது பெண்ணைப் பெற்றவரின் கவலை.

”சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம் தான். அதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம். என்ன ஒன்று, இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும் சண்டை போட்டுக் கொண்டே வாக்குவாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ராத்திரியானா சமாதானமாப் போய் விடுவார்கள்” என்று புன்சிரிப்புடன் சொல்லிக் கொண்டே, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை, பாக்கு பன்னீர்ப் புகையிலையை எட்டிப் போய்த் துப்பிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரால் வாயையும் கழுவிக் கொண்டு வந்தவர் “என்ன ஸ்வாமி, நான் சொல்வது விளங்கிச்சா உமக்கு” என்று மீண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை வெளிக் கொணர்ந்தார், அந்த ஜோஸ்யர்.

“நானும் என் சம்சாரமும் கூட இதே போலத்தானே!; எங்க வனஜா பிறந்தன்னிலேந்து கடந்த 25 வருஷமா, பகலெல்லாம் சண்டை போட்டுண்டு, ராத்திரியானா சமாதானம் ஆகிண்டு தானே இருக்கோம்!; அதனால் என்ன பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது.

வேறு ஒன்றும் ஜாதகக் கோளாறு இல்லையே! அப்போ மித்ர சஷ்டாஷ்டகம் மட்டும் தான்; அதனால் பரவாயில்லை; மேற்கொண்டு ஆக வேண்டிய கல்யாண வேலைகளைப் பார்க்கலாம்னு சொல்றேளா!” என்றார் வனஜாவின் அப்பா, மிகுந்த ஆர்வத்துடன்.

அது போல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம் என்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார் என்பது ஜோஸியருக்கும் புரிந்து விட்டது.

“பேஷா இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கலாம் ஸ்வாமி; இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி எங்கே இருக்கிறார்கள்? எங்கேயாவது நூற்றுக்கு ஒத்தரோ, ஆயிரத்துக்கு ஒத்தரோ இருக்கலாம்; குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்.

இப்போ நானும் என் சம்சாரமுமே மித்ரசஷ்டாஷ்டக தோஷம் உள்ளவா தான்; எங்களுக்கு விளையாட்டுப் போல ஆறு புள்ளைகள், ரெண்டு பொண்ணுகள். பகலெல்லாம் இங்கே தான் ஜோஸ்யம் பார்த்துண்டு இருப்பேன். வீட்டுக்குப் போனா ஒரே பிரச்சனைகள்; ராத்திரி படுத்துக்க மட்டும் தான் வீட்டுக்கே போவேனாக்கும்” என்று சொன்ன ஜோஸ்யருக்கு ரூபாய் 100 க்கு பதில் ரூபாய் 200 ஆகக் கொடுக்கப்பட்டது, வனஜாவின் அப்பாவால்.

இந்த ஜோஸ்யர் சொன்ன மித்ர சஷ்டாஷ்டக விஷயம் வனஜாவுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. அவளுக்கு இதிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை ஏதும் கிடையாததால், இதை ஒரு பொருட்டாகவே அவள் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன ஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள். சில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே, அனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது.

சரி இந்த சஷ்டாஷ்டக தோஷத்தைப் பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் விட்டு விட்டு, தொலைந்து போன வனஜாவின் மாமியார் என்ன ஆனாள்ன்னு பார்ப்போமா!

‘நேற்றுக் காலையில் உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் சற்றே சப்தம் போட்டுப் பேசிக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவே இது’ என்பது வனஜாவுக்குப் புரிந்து விட்டது.

நேற்று சாயங்காலம், “நான் என் அம்மா வீடுவரை போய்விட்டு நாளைக்கு வந்து விடுகிறேன்” என்று தான் சொன்னபோதே, மாமியார் முகத்தில் ஒரு மகிழ்ச்சியோ, பதிலில் ஒரு சுரத்தோ இல்லை என்பதை எண்ணிப் பார்த்தாள்.

தன் கணவராகிய ஒரே பிள்ளையை பெற்றெடுத்தவள் வேறு எங்கு தான் கோபித்துக் கொண்டு போய் இருப்பார்கள்? என்று ஊகிக்க முடியாமல் தவியாய்த் தவித்தாள், வனஜா.

வனஜா தன் தாயாருக்கு போன் செய்து, தான் பஸ் பிடித்து செளகர்யமாக, வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவித்து விட்டு, தன் மாமியார் காணாமல் போய் உள்ள விஷயத்தையும் கலக்கத்துடன் கூறினாள்.

”நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமையா இருக்கே, நம் கையால் தான் இன்று சமையல் செய்வோமேன்னு, சமையல் அறையில் புகுந்தேன். அது என்ன பெரிய ஒரு தப்பா? என்னை சமைக்க விடாம தடுத்துட்டாங்க, என் மாமியார்.

“நான் என்ன தீண்டத் தகாதவளா” ன்னு ஏதேதோ கோபமாப் பேசிட்டேன்” என்றாள் வனஜா தன் தாயிடம்.

”வயசான காலத்திலே, ஆசை ஆசையா, உன் மாமியார் தன்னால முடிஞ்ச எல்லாக் காரியங்களையும் இழுத்துப் போட்டு செஞ்சு கொடுத்து, உனக்கு ரொம்பவும் உபகாரமாகத்தானே இருக்காங்க! அவங்க மனசு வருத்தப்படும்படியா ஏன் நீ ஏதாவது இப்படி பேசுகிறாய்?

‘தலைய வாரிப் பின்னிண்டு, மூஞ்சிய பளிச்சுனு அலம்பிண்டு, தலை நிறையப் பூ வெச்சுண்டு, புதுசு புதுசா புடவையைக் கட்டிண்டு, நீ உன் புருஷனை கவனிச்சிண்டா போதும்டீ கண்ணே’ன்னு தானே உன் மாமியார் அடிக்கடி சொல்றாங்க!

அதுக்கு நீ ‘உங்களுக்கு வயசாயிடுச்சு; நீங்க எதுவும் செய்ய வேண்டாம்; நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க; நானே எல்லாம் பார்த்துக்கறேன்னு’ சொல்கிறாயாமே! பாவம், நீ இதுபோலச் சொல்லும் போதெல்லாம், அது அந்த அம்மாவை மனதளவில் பலகீனமானவங்களா ஆக்கிடுதோ என்னவோ.

மேலும் நீ புதிசா கல்யாணம் ஆகி வந்தச் சின்னப் பொண்ணு; சமையல் கட்டுல அவசரத்துல ஏதாவது நீ சுட்டுக் கொண்டாலோ , குக்கர் முதலியவற்றைத் திறக்கும் போது உன் முகத்தில் ஆவி அடித்து விட்டாலோ, அப்பளம் வடகம் முதலியன பொரிக்கும் போது ஏதாவது சுடச்சுட எண்ணெய் தெளித்து விட்டாலோ, அந்த அம்மாவுக்கும், உன் கணவருக்கும் தாங்கவே முடியாதாம்.

அன்றொரு நாள், நான் அங்கே வந்திருந்த போது, குழந்தை மாதிரி, கண் கலங்கிப்போய், என் கையைப் பிடித்துக்கொண்டு என்னிடம் இதெல்லாம் சொன்னாங்க! இவ்வளவு நல்ல மனசு உள்ள உன் மாமியாரை புரிந்து கொள்ளாமல் நீ ஏன் அவங்க மனசு வருத்தப்படும் படியாக நடந்து கொள்கிறாய்?” என தன் மகளைத் திட்டித் தீர்த்தாள் வனஜாவின் தாய்.

”சரிம்மா, இப்போ அவங்களைக் காணோமே, நான் எங்கு போய் அவங்களைத் தேடுவேன்?” அழாக் குறையாகக் கேட்டாள், வனஜா தன் தாயிடம்.

”நேத்து சாயங்காலத்திலிருந்து உன்னைப் பார்க்காமல், வீடே விருச்சோன்னு இருந்ததாகச் சொல்லி, இங்கே நம் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருக்காங்க உன் மாமியார். நீ இங்கிருந்து புறப்பட்ட அதே நேரம் அவங்க அங்கிருந்து புறப்பட்டிருக்காங்க. உன்னை நேரில் சந்தித்துப் பேசி சமாதானப்படுத்தி, அழைச்சிட்டுப் போகலாம்னு, பாவம் அவங்களே புறப்பட்டு வந்திருக்காங்க.

”நீ இங்கே இல்லாமல் புறப்பட்டு விட்டதால், ஒவ்வொரு விஷயமா என்னிடம் இப்போ தான் கண் கலங்கியபடிச் சொன்னாங்க”

“இன்னும் என்னென்ன சொன்னாங்க, என் மாமியார்” வனஜா கேட்டாள்.

“ ‘சின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆன புதுசு, ஞாயிற்றுக்கிழமை லீவுன்னா, சினிமா, டிராமா, பார்க்கு, பீச், குற்றாலம், கொடைக்கானல்ன்னு ஜாலியாப் போய்ட்டு வந்தால் தானே, நானும் நீங்களும் சீக்கரமாப் பாட்டியாகப் பிரமோஷன் வாங்க முடியும்னு சொன்னாங்க.

இதெல்லாம் புரியாம உங்க பொண்ணு, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, நானே சமைக்கிறேன்னு எனக்குப் போட்டியா சமையல் கட்டுக்கு வந்தாள்னா, நான் அவளுக்கு எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும்’ என்று சொல்லி வருத்தப்படறாங்க.

இவ்வளவு நல்ல ஒரு மாமியாரை அடைய நீ போன ஜன்மத்துலே ஏதோ புண்ணியம் செய்திருக்கனும்னு நினைக்கிறேன். சம்பந்தியம்மாவுக்கு நம்ம வீட்டுலே விருந்து போட்டு, நானே அவங்களை அங்கே அழைச்சிட்டு வரேன், நீ கவலைப்படாம இரு” என்றாள் வனஜாவின் தாய்.

தங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை, தன் தாயின் மூலம் அறிந்து கொண்ட வனஜாவுக்கு, ஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.

மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள், வனஜா.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மாமியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.