தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகத் தாய்மார்கள் முதலிடம்
சென்னை, செப்டம்பர் 23, 2010
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம், தேசிய சராசரியைவிடத் தமிழகத்தில் இருமடங்கு அதிகம் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பிறப்பு-இறப்பு விகிதம், தாய்-சேய் ஆரோக்கியம், ஊட்டச் சத்து உணவு கிடைப்பது, எச்ஐவி பாதிப்பு உள்பட பல அம்சங்களைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. 1992-93 மற்றும் 1998-99-க்குப் பிறகு 2005-06இல் இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
குழந்தை பிறந்ததும் 24.5 சதவீத தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர் என்று இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது தேசிய சராசரி ஆகும். தமிழகத்தில் 58.8 சதவீதமாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். நாடு முழுவதும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் இது 30.9 சதவீதம் ஆகும். எடை குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 42.5 சதவீதமாகவும் தமிழகத்தில் 29.8 சதவீதமாக உள்ளது.