மதுரையில் விக்னேஷ் குருதி வங்கிக்குத் தடை
மதுரையில் இயங்கி வரும் விக்னேஷ் குருதி வங்கிக்குக் குருதியைச் சேமிக்கவும், விநியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது
மதுரை மண்டலத்திலுள்ள தனியார் குருதி வங்கிகள், மருந்துக் கட்டுப்பாடு துறை, மருந்து ஆய்வாளர்களால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது மதுரை, சிவகங்கை சாலை, எண்.101/1-இல் செயல்படும் “விக்னேஷ் குருதி வங்கி”யின் செயல்பாட்டில் சில முக்கியமான குறைபாடுகள் காணப்பட்டன.
எனவே அந்த குருதி வங்கியின் 2008-2012 ஆண்டிற்கான குருதி உரிமம் புதுப்பித்தல் மனுவை ஏன் நிராகரிக்கக் கூடாது எனக் காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மருந்து மற்றும் அழகு சாதனச் சட்ட விதி 122-0இன் படி குருதியைச் சேமிக்கவும், விநியோகம் செய்யவும் அக்குருதி வங்கிக்குத் தடை விதித்து, மருந்துக் கட்டுப்பாடு இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.