ரயில்களின் எண்கள், 5 இலக்கமாக மாறுகின்றன

புதுதில்லி, செப்டம்பர் 23, 2010

இந்தியா முழுவதும் பயணிகள் ரயில்கள் அனைத்தின் எண்களையும் 5 இலக்க எண்ணாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம், 2010 டிசம்பரில் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் பெரும்பாலும் ரயில்களுக்கு 4 இலக்க எண்களே கொடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 3 இலக்க ரயில்களும் உள்ளன. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களுக்கு ஒரே எண் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக முன்பதிவு செய்தல் மற்றும் தேசிய அளவில் எண்ணைக் கொண்டு ரயில்களைக் கண்டுபிடிப்பதில்  சில சிக்கல்கள் உள்ளன. மேலும் தற்போது நாடு முழுவதும் தினமும் 10 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அனைத்து ரயில்களின் எண்ணையும் 5 இலக்க எண்ணாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி வழக்கமாக ஓடிவரும் துரந்தோ, யுவா, ராஜதானி, சதாப்தி, ஜனசதாப்தி, ஏழைகள் ரதம், சம்பர்க் சிராந்தி உள்பட அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் வண்டிகளுக்கும் அவற்றின் இப்போதைய 4 இலக்க எண்ணுக்கு முன்பு ’1’ என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் விழாக்காலங்களின் போதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களைப் பொறுத்தவரை அவற்றின் 4 இலக்க எண்ணுக்கு முன்பு ’0’ என்ற எண்ணைச் சேர்க்கவேண்டும். முழுக் கட்டண அடிப்படையில் இயக்கப்படும் ரயில்களுக்கும் இது பொருந்தும்.

பாசஞ்சர் ரயில், புறநகர் ரயில்களுக்கும் இதே போல 5 இலக்க எண்ணே கொடுக்கப்பட உள்ளது. இது பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த மாற்றங்கள், 2010 டிசம்பர் 20ஆம் தேதி அமலுக்கு வரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *