2019 நவராத்திரி கவிதைகள் 4
-மரபின் மைந்தன் முத்தையா
தோகை விரித்திடும் பொன்மயில் அழகில்
தென்படும் பசுமை அவள்கொடைதான்
வாகைகள் சூடிட நீதியும் எழுகையில்
வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான்
யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை
ஏகி நடப்பது அவள் நடைதான்
நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும்
நாளும் அசைவது அவள் இடை தான்!
சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில்
சூட்சுமம் ஆனவள் பராசக்தி
பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில்
பவித்திரம் ஆனவள் பராசக்தி
காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய்
கண்ணெதிர் தெரிபவள் பராசக்தி
சாத்திர விதிகளைத் தாண்டிய ரூபமாய்
சாகசம் செய்பவள் பராசக்தி!
ஆலய வாயிலில் பூச்சரம் விற்கையில்
அவளே வெய்யிலில் வாடுகிறாள்
காலமும் நேரமும் கருதா உழைப்பினில்
காளி மரநிழல் தேடுகிறாள்
தூலமும் உயிரும் தூளியில் ஆடிடும்
தருணம் அவளே பாடுகிறாள்
காலகாலனின் உடுக்கை அசைவுக்குக்
கால்கள் மாற்றி ஆடுகிறாள்!
பிச்சியென் றலைவதும் பெருங்கலை ஆள்வதும்
பிறவியை அறுப்பதும் அவள்தானே
உச்சியில் திலகமாய் சூரியச் சாந்தினைச்
சூடி நடப்பதும் அவள்தானே
அர்ச்சனை வேளையில் ஆதங்கப் பார்வைக்கு
ஆறுதல் தருபவள் அவள்தானே
கர்ச்சனை சிங்கத்தின் முதுகினில் ஏறி
ககனங்கள் ஆள்வதும் அவள்தானே!
படத்திற்கு நன்றி – http://www.tantricmoments.nl/shiva-shakti/