இலக்கியம்கட்டுரைகள்திரை

சிவாஜி – ஒரு சுயம்பு

-சேஷாத்ரி பாஸ்கர்

ஒரு படத்தின் இறுதிக் காட்சி. படப்பிடிப்புக் குழு தயார். இதற்காக அந்த நாயகர் மூன்று நாட்கள் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாடிய முகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தச் சில நாட்கள் அவர் பேசுவதைக் குறைத்து, அந்தப் பாத்திரத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதில் லயித்து எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். தூக்கம் இழந்த முகம் கொஞ்சம் உப்பியது. கண்கள் கொஞ்சம் பெரிதாகின. பெரும் களைப்பு முகத்தில் தெரிந்தது

இரவு வீட்டுக்குச் சென்ற போதும், அவர் சகஜமாகவில்லை. பின்னர் போட்டுக் கொண்ட ஒப்பனை அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்க, பாசமலர் ராஜசேகரன் தயார். கிழிந்து போன கைச் சட்டை , கால் சட்டை, கையில் குழந்தை, பார்வை இழந்த கண்கள், பாசம் பொங்கும் முகம்,  தெறிக்கும் குரல், கூர்மையான ஆரூர்தாஸ் வசனம், பலம் சேர்க்க சாவித்திரி, தொந்தரவு செய்யாத பின்னணி இசை? நகர்ந்து கொண்ட பீம்சிங், நேரிடையான கழுத்தைச் சுளுக்காத கோணம். What More is Needed? எனக்குத் தெரிந்து இவரைப் போல ஒரு நடிகர் வேறெங்கும் இல்லை. நாடக நடிப்பு, ஸ்த்ரீபார்ட் வேஷம் தாண்டி இப்படி யோசித்துப் புனைந்து ஒரு நடிகன் இப்படித் தன்னை வளர்த்து ஒரு பெரிய பரிமாணத்தைத் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியது பெரும் சாதனை.

சரஸ்வதி சபதம் படத்தில் ராஜசபையில் நடந்து வரும் காட்சிக்குப் பத்து வகையான நடை நடந்து ஏ.பி. நாகராஜனுக்குத் திகைப்பூட்டினார்.

ஆண்டவன் கட்டளையில் விவேகானந்தர் வேஷம். ஒப்பனை போட்டு, படத்தளம் வந்தபோது அரங்கமே எழுந்து நின்றது. அது போன்ற முகவாகு. கண்களை உருட்டிக் கொண்டு ஜப்பான்காரன் குண்டு போட போகிறான் என்று ஒரு எதிரி நாட்டினர்கூட சொல்ல முடியாத முக பாவம். இது அந்த நாள்.

இவர் ஒரு சுயம்பு. எல்லாவற்றையும் உள்வாங்கி அதை எந்த நேரத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்த கலைஞன், அன்னையின் ஆணை பற்றியும் ராஜாராணி பற்றியும் அவரிடம் பேசியவர்கள் மிகக் குறைவு. அவர் படத்தில் எல்லோருக்கும் ஒரு கனம் இருக்கும். பாடல்கள் இருக்கும். வசனம் இருக்கும். சினிமாவை சினிமாவாகப் பார்த்தவர். பந்துலு இயக்கத்தில் சபாஷ் மீனா படம் ஆரம்ப நிலையில் கணேசனை அணுகிய போது அவர் மெட்ராஸ் பாஷை பேசும் வேடத்திற்குச் சந்திரபாபுவைச் சொன்னாராம். பாபுவுக்கு மகிழ்ச்சி. பதிலுக்குப் பாபு தனக்கு சிவாஜியை விடக் கூடுதலாக ஒரு ருபாய் ஊதியம் வேண்டும் என்றாராம். சிவாஜியிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார். கிறுக்கன். விஷயம் உள்ளவன். அவனையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்றாராம். இது, பிம்பம் பார்க்கும் கலைஞனுக்கு வராது.

அவரைப் பார்த்து ஒருவர் உங்கள் நடிப்பு முதல் மரியாதையில் சூப்பர் என்றாராம். குரல் வந்த திசையில் அவர் முறைத்துக்கொண்டு திரும்ப, கேட்டவன் ஓடியே போய் விட்டான். எனக்குத் தெரிந்து உலகில் இவரைப் போல ஒரு பெரும் நடிகர் இல்லை. அவர் நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க