-மேகலா இராமமூர்த்தி

முத்தமிழைப் போல வ.உ.சி. என்ற மூன்றெழுத்துக்களுங்கூட என்றும் நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டியவை. கப்பலோட்டிய தமிழர் என்றும் பெருமிதத்தோடு அறியப்படும் வ.உ.சிதம்பரனார் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த அதே நாளில், உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் திருமகனாய்த் தோன்றினார்.

வ.உ.சி., அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளியில் படித்தார். ஒளவையின் பாடல்கள் மற்றும் நீதி நூல்கள் அவருக்குக் கற்றுத்தரப்பட்டன. அவருடைய வீட்டில் அவருடைய தாத்தாவும் பாட்டியும் இதிகாசம் மற்றும் புராணக் கதைகளை வ.உ.சி.க்குக் கூறுவது வழக்கம்.  ஒட்டப்பிடாரத்தில் அவ்வப்போது நடைபெறும் புராணச் சொற்பொழிவுகளுக்கும் வ.உ.சி. தம் பாட்டனாருடன் செல்வதுண்டு. வ.உ.சி.க்கு ஆரம்பப் பாடம் சொல்லிக்கொடுத்தவர் வீரப்பெருமாள் அண்ணாவியார். 

வ.உ.சி.யின் தந்தையான உலகநாதப் பிள்ளை ஒரு வழக்கறிஞர். தம்முடைய மகனும் தம்மைப் போலவே நன்கு படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பினார் அவர்; அதனால் தம் மகனுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார்.

வ.உ.சிதம்பரனார் இப்பள்ளியில் தம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பிறகு தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அங்கிருந்த கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் ஒருமுறை வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட வ.உ.சி., பிறகு அதில் வெற்றிபெற்றுத் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்க ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக இருமாத காலம் பணியாற்றியிருக்கின்றார். அவ்வேலையில் வ.உ.சி.க்கு ஈடுபாடில்லை. தம் தந்தையைப் போலத் தாமும் வழக்கறிஞராக விரும்பிய அவர், தம் விருப்பத்தைத் தந்தையிடம் கூறியிருக்கின்றார். அவரும் அதற்கிசைந்து திருச்சியில் அப்போது மிகவும் பிரபலமாயிருந்த கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்ற இரண்டு சட்ட நிபுணர்களிடம் வ.உ.சி.யைச் சட்டத்தேர்வுப் பயிற்சிக்காக அனுப்பினார்.

வழக்கறிஞருக்கான தேர்வை 1894இல் எழுதி வெற்றிபெற்ற வ.உ.சி., 1895இல் வழக்கறிஞராகத் தம்மைப் பதிவுசெய்துகொண்டார். அப்போது அவருடைய வயது 23. உரிமையியல் (civil), குற்றவியல் (criminal) என இரு துறைகளிலும் சிறந்துவிளங்கினார் அவர்.  குறிப்பாகக் குற்றவியல் துறையில் மிகுந்த திறமையுடையவராக வ.உ.சி. திகழ்ந்திருக்கின்றார். அதுகண்டு வழக்கறிஞர்கள் சிலர் அவர்பால் அழுக்காறு கொண்டதும் உண்டு. தொழிலில் நல்ல வருமானம் வந்தும்கூடச் சம்பாதிப்பதையே தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை வ.உ.சி. மாறாக வாய்மை, ஒழுக்கம், பிறர்நலம் பேணுதல் போன்றவற்றையே தம் வாழ்வுக்கான குறிக்கோள்களாகக் கொண்டார்.

அக்காலத்திலும் வழக்கறிஞர்கள் சிலர் கைக்கூலி கொடுத்துக் கட்சிக்காரர்கள் பிடித்ததையும், நீதித்துறையிலும் கையூட்டாக நிதி புகுந்துவிளையாடியதையும் வெறுப்போடும் வேதனையோடும் தம் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கின்றார் அவர்.

சிறந்த வழக்கறிஞராகச் சிதம்பரனார் பணிசெய்துவந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு, வைஸ்ராய் கர்சன் பிரபு வங்கப் பகுதியைக் கிழக்கு வங்கம் மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிரித்தார். இதை எதிர்த்து இந்தியாவெங்கும் கிளர்ச்சி வெடித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவினர் இருந்தனர். இதில் பாலகங்காதர திலகர் தீவிரவாதப் பிரிவுக்குத் தலைவராகச் செயற்பட்டார். தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வ.உ.சி, மகாகவி பாரதி, வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள்.

அப்போது நாடெங்கும் அந்நிய ஆடைப் புறக்கணிப்பு இயக்கம் தோன்றியது. வெளிநாட்டு ஆடைகளை வீதிகளில் மலைபோல் குவித்த மக்கள் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். பம்பாயில் திலகர் தலைமையில் அந்நியத் துணி எரிப்புப் போராட்டம் நிகழ்ந்தது. தூத்துக்குடியில் வ.உ.சி. தலைமையில் அப்போராட்டம் தீவிரமடைந்தது. அந்நியப் பொருள்களை வாங்குவதில்லை என்று உறுதிபூண்டனர் மக்கள்.

1906-இல் வ.உ.சி. ’சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ என்ற பெயரில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் விடுவதென முடிவுசெய்தார். பாலவனத்தம் ஜமீன்தார் திரு. பாண்டித்துரைத் தேவரைத் தலைவராகவும், 13 வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட செல்வந்தர்களின் ஆதரவுடன் வ.உ.சி. செயலர் பொறுப்பில் இருந்து கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். தொடக்கத்தில் வாடகைக்குக் கப்பல்கள் வாங்கித் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே பயணிக் கப்பல்களை ஓட்டினார். பிறகு திலகர் உதவியுடன் கம்பெனிக்குச் சொந்தமாகக் கப்பல்கள் வாங்க முடிவுசெய்து பம்பாய் சென்றார் வ.உ.சி.

வ.உ.சி.யை கப்பல் வாங்கவிடாமல் சூழ்ச்சிசெய்து தடுத்தனர் வெள்ளையர். ஆனால் அந்தத் தடைகளைத் தகர்த்துத் திலகரின் துணையுடன் பிரான்சிலிருந்து இரு கப்பல்களைத் தூத்துக்குடிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஊர் திரும்பினார் வ.உ.சி. அந்த இரு கப்பல்களின் பெயர்கள் கேலியா (Gallia), மற்றும் லேவோ (Lavo) என்பதாகும்.

தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து நன்கு நடைபெற்றது. வெள்ளையர் கப்பல்களிலோ வருமானம் குறைந்தது. எப்படியாவது சுதேசிக் கப்பல் கம்பெனியை ஓடவிடாமல் தடுக்கப் பல குறுக்குவழிகளை வெள்ளையர் கையாண்டனர். வ.உ.சி.க்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து அவரைக் கப்பல் கம்பெனியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால் கொள்கை வீரரான வ.உ.சி. அதற்கு இம்மியும் அசைந்துகொடுக்கவில்லை; மாறாக எப்படியாயினும் சுதேசிக் கப்பல் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது என்றே முடிவுசெய்து செயற்பட்டார்.

அதே காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் வெள்ளையர்களுக்குச் சொந்தமான கோரல் மில்லில் தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன; சம்பளமும் சரியாகக் கொடுக்கப்படவில்லை. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்தனர். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 1908 பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை தூத்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி மக்களுக்கு வீர உணர்வும் விடுதலை உணர்வும் ஊட்டினார் வ.உ.சி. அதே ஆண்டில் நெல்லையில் தேசாபிமானச் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடையவே, இறுதியில் நூற்பாலை நிர்வாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தது. தொழிலாளர்களின் கூலியை உயர்த்தவும், வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது. தொழிற்சங்கங்கள் இல்லாத காலமது. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமே 1920-இல்தான் தொடங்கப்பட்டது. ஆனால் வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தி, அவர்களை வழிநடாத்தி, வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்திருக்கின்றார். அவ்வகையில் வ.உ.சி.யே தொழிலாளர் போராட்டங்களை நடத்திய அனைவருக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் எனில் மிகையில்லை.

இதினிடையே சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களுக்கு எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று கருதிய ஆங்கிலேயர் அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான  பிபின் சந்திர பால் (Bipin Chandra Pal) 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் சிறையிலிருந்து விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதனை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினார். ஆங்கில அரசு அதனை விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைதுசெய்ய முடிவு செய்தது. ஆனால் தூத்துக்குடியில் அவரைக் கைதுசெய்தால் மக்களிடையே பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதிய மாவட்ட ஆட்சியர் வின்ச்சு (Winch), வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தம்மைச் சந்திக்கும்படி ஓர் ஆணை அனுப்பினார். அதனை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார் வ.உ.சி. அங்கே அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆதலால் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. மக்களைச் சமாதானப்படுத்திவிட்டுத் தம் நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் திருநெல்வேலிக்குச் சென்றார்.

மாவட்ட ஆட்சியர், வ.உ.சி.யும் சிவாவும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கண்டித்துக் கூறினார். அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார் வ.உ.சி. விளைவு? வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

அதனை அறிந்த மக்கள் கடுங்கோபம் கொண்டனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையமும், நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டன. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வு திருநெல்வேலி எழுச்சி (Tinnevelly riot of 1908) என்று குறிப்பிடப்படுகின்றது.

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், ஆங்கில அரசுக்கு எதிராகச் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை; சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமோர் 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை; மொத்தம் 40 ஆண்டுகள் (இரட்டை ஆயுள்) சிறைத்தண்டனை விதித்தது வ.உ.சி.க்கு. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் வ.உ.சி.யின் சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார்; அவரது நண்பர்கள் இலண்டனில் உள்ள பிரிவியூ கௌன்சிலில் முறையீடு செய்ததில் 6 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாக அது குறைந்தது.

வ.உ.சி. சிறையிலிருந்தபோது, அவர் ஆரம்பித்த சுதேசிக் கப்பல் நிறுவனம் அவருடைய பங்குதாரர்களால் சரியானமுறையில் நிர்வகிக்கப்படவில்லை. அதன் விளைவாய் வ.உ.சி. அரும்பாடுபட்டு வாங்கிய இரண்டு சுதேசிக் கப்பல்களும் வெள்ளையரிடமே விற்கப்பட்ட அவலம் நேர்ந்தது.  சுதேசிக் கப்பல்கள் விற்கப்பட்ட விவரம் பாண்டிச்சேரியில் இருந்த பாரதியின் காதுகளுக்கும் எட்டியது. அவர் தம்முடைய இந்தியா பத்திரிகையில்,

”கேவலம் காசுக்காகக் கப்பல்களை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டார்களே! அதைவிட அக்கப்பல்களை உடைத்து மன்னார்குடாக் கடலில் எறிந்திருக்கலாமே!” என்று கொதிப்புடன் எழுதினார்.

1908இல் சிறை புகுந்த வ.உ.சி., அங்கு அனுபவித்த சித்திரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. சணல் நூற்றார். அதனால் அவரது உள்ளங்கைகளிலிருந்து குருதிவெள்ளம் வழிந்தது. கல் உடைத்தார்; மாடுகள் இழுக்கும் செக்கினைத் தாம் இழுத்தார். அவரது எடை மிகவும் குறைந்துபோனது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்ததன் பேரில் அவருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது. வ.உ.சி. சிறையில் பட்ட பாட்டை ஒரு பாட்டாகவே வடித்திருக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

“எல்லோரும் தேசபக்தர் இந்த நாளில்
எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார்
சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத்
துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்
வல்லாளர் சிதம்பரனார் சிறையில் பட்ட
வருத்த மெலாம் விரித்துரைத்தால் வாய்விட் டேங்கிக்
கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டிக்
கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்”

பிறகு, சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி வ.உ.சி.க்குச் சில சலுகைகள் சிறையில் அளிக்கப்பட்டன. அதன் பயனாய்த் தமிழிலக்கியத்துறைக்கு அருங்கொடைகளை நல்கினார் அப்பெருமகனார்.

மக்கள் அல்லவை கடிந்து நல்லவை பெற உதவும் நோக்கில் குறளின் அடிப்படையில் ’மெய்யறம்’ என்ற அறநூலை சிறையில் அவர் இயற்றினார். இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் எனும் ஐந்தியல்களைக் கொண்டது.

வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது மற்ற கைதிகளுக்கு நீதி நெறிகளை விளக்குவார். அக் கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்குமே என்று வ.உ.சி.யிடம் கூற, அப்போது இயற்றப்பட்ட செய்யுட்களே ’மெய்யறிவு’ என்ற நூலாகும்.

தம்முடைய சுயசரிதையைக் கவிதை நடையில் அகவற்பாவில் எழுதியிருக்கின்றார் சிதம்பரனார். இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு வண்டமிழில் உரை வரைந்திருக்கின்றார். மணக்குடவர் உரையுடன் திருக்குறளையும், இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தையும் பதிப்பித்திருக்கிறார்.

சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் வ.உ.சி. திகழ்ந்திருக்கின்றார். ஜேம்ஸ் ஆலனின் (James Allen) ’As a man Thinketh’ என்ற நூலை ’மனம் போல் வாழ்வு’ என்று பெயரிலும், ’Out from the heart’ என்ற நூலை ’அகமே புறம்’ என்ற பெயரிலும், அவருடைய ’From Poverty to Power’ என்ற நூலின் முதற்பகுதியான ’The part of prosperity’யை ’வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும், அதன் இரண்டாம் பகுதியான ’The way to peace’ என்பதைச் ’சாந்திக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும் மொழிபெயர்த்திருக்கின்றார். திருக்குறள் அறத்துப்பாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார் வ.உ.சி.

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலையடைந்தார். சிறையிலிருந்து அவர் வெளிவந்தபோது சுப்பிரமணிய சிவா மட்டுமே அவரை வரவேற்கச் சிறைச்சாலையின் வெளியே காத்திருந்தார். அவருக்கும் உடல்நலம் குன்றித் தொழுநோய் கண்டிருந்தது. வ.உ.சி.யின் தேசிய உணர்வையும் தியாகத்தையும் அன்றைய தமிழக மக்கள், அந்தோ! முற்றாக மறந்துவிட்டிருந்தனர்!

அப்போதைய அரசியல் சூழ்நிலையும் பெரிதும் மாறியிருந்தது. திலகரின் தீவிரவாத விடுதலை அமைப்பை ஆதரித்தவரான வ.உ.சி.யால் அண்ணல் காந்தியாரின் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற மிதவாதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

1919இலிருந்து 1922வரை கோயம்புத்தூரில் வாழ்ந்த வ.உ.சி., பிறகு தூத்துக்குடியில் குடியேறி வழக்கறிஞராகத் தம் பணியைத் தொடர்ந்தார்; இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். 1935இல் அவர் உடல்நலம் குன்றியது. படுத்த படுக்கையானார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத் தூத்துக்குடி வந்தார். சிதம்பரனாரின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

”சிதம்பரனாரின் சேவையே தமக்கு ஓர் உந்து சக்தியாக இருந்தது” என்றும் ”தூத்துக்குடி மண்ணை மிதித்தது தமக்குக் கிடைத்த புண்ணியம்” என்றும் ம(நெ)கிழ்ந்தார் அம் மாபெருந்தலைவர்.

1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் வ.உ.சி. அமரரானார். அவருடைய இருபெரும் கனவுகளான இந்திய விடுதலையும், திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையை அச்சிட்டுவிட வேண்டும் என்பதும் அவர் காலத்திற்குப் பின்பே நிறைவேறின.

நாவீறு படைத்த வழக்கறிஞராகச் செல்வாக்கோடு விளங்கிய காலத்திலும், வெஞ்சிறையில் நெஞ்சுபதறச் செய்யும் வெங்கொடுமைகளுக்கிடையே வாடிய காலத்திலும், எல்லாமிழந்து வறுமையில் உழன்ற பொல்லாச் சூழலிலும் தாய் நாட்டையும் தாய்த்தமிழையும் தம் இரு கண்களாகவே போற்றித் தொண்டாற்றிய தன்னலமற்ற நன்னர் நெஞ்சினர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார்.

தோழர்களே! சிதம்பரனார்கள் மிக அரிதாகவே இம் மண்ணில் தோன்றுவார்கள். அவர்களின் தொண்டுகளை மறவாது போற்றுவதும், அவர்களைப்போல், இயன்றவரையில், பிறர்க்கென வாழ முயலுதலுமே அம் மாமனிதர்களுக்கு நாம் செய்யத்தக்க கைம்மாறாகும்!

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை:

  1. https://ta.wikipedia.org/wiki/ வ._உ._சிதம்பரம்பிள்ளை
  2. வ.உ.சி.யும் தமிழும் – முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம் – உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113
  3. வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை – முனைவர் எஸ். கண்ணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தரமணி, சென்னை – 600 113

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *