-வெ.விஜய்

“கட்டழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம்”  என்கிற கண்ணதாசன் பாடலின் சந்தத்தில் எழுதியது…

தத்துவப் பாடலும் காதல் கவிதையும்
தந்தவன் தாசனடா – தமிழ்ச்
சாரதி தாசனடா – கவிக்
கத்தி எடுத்தவன் காலம் கடந்தவன்
கண்ணனின் தாசனடா- இவர்
கற்பனை ராசனடா

எத்தனை ஆயிரம் செந்தமிழ்ப் பாடல்கள்
எங்கெங்கும் வாழுகிறான் – இவன்
ஏழையை ஆளுகிறான் – இந்த
முத்தையன் பேச்சினில் கொட்டிக் கிடப்பது
முத்தமிழ்க் கீதையடா – அதில்
மூழ்குதல் போதையடா

திங்களைப் போல்முகம் கொண்டுள மங்கையின்
தேகத்தைப் பாடியவன் – நல்ல
திராவிடம் சூடியவன் – சிவ
கங்கையில் தோன்றிய காவிய நாயகன்
காதலின் ஓடமடா – கவிக்
காட்டினில் வேடனடா

மொட்டவிழ் தாவரம் முன்பொரு நாளினில்
முட்டி முளைக்கையிலே – மண்ணை
மோதி எழுகையிலே – அதைக்
கட்டுப் படுத்திடும் தன்மையென் றாலது
காதலில் மட்டுமடா – கண்ண
தாசனின் திட்டமடா

இந்தக் கவிஞனை எய்திய வேடனோ
என்னிறை கண்ணனடா – அவன்
இப்புவி மன்னனடா – அவன்
மந்திரம் செய்கையில் முந்திப் பிறந்தவன்
மாவீரன் தாசனடா – தென்றல்
வார்த்தையில் வீசுமடா!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *