நெல்லையப்பர் கோவிலிலே!
அண்ணாகண்ணன்
நெல்லையப்பர் கோவிலில் நேற்று (18.10.2019) நெல்லையப்பரைத் தரிசித்து, ஆதி சிவன் அருள் பெற்றேன்.
ஆலயத்தினுள் இசைத் தூண்களைக் கண்டு பிரமித்தேன். கற்களைக் கொண்டு மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தச் சிற்பிகளை, நாம் தலைமேல் தூக்கிக் கொண்டாட வேண்டும். இந்தக் கலைத்திறன் நம்முள் யாரிடமாவது எஞ்சியிருக்கின்றதா?
காணும் ஒவ்வோர் இடத்திலும் சிற்ப எழில், உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பிரகாரத்தில் இருந்த சிலைகளின் தலையலங்காரம் தனித்த அழகுடன் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் ஓதுக்கிய கிரீடம்போல் அவை இருந்தன. நம் முன்னோர்கள் இப்படியும் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழுந்தது.
பற்பல சந்நிதிகளில் அர்ச்சகர் பலரும் தீபாராதனை காட்டி, திருநீறு, குங்குமம் வழங்கினர். ஒரு சந்நிதியில் மட்டும், ஒருவர் குங்குமம் கொடுத்ததோடு, மடித்து வைத்த ஒரு குங்குமப் பொட்டலத்தையும் கொடுத்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் கொடுத்த திருநீறு, பிரசாதங்களைத் தனித் தனியே மடித்து வைக்கக் காகிதம் இல்லாமல், எல்லாவற்றையும் ஒரே காகிதத்தில் சேர்த்து வைத்திருந்தேன். அப்படி இருக்க, இவர் தனியே பொட்டலமாகவே கொடுத்தது உதவிகரமாக இருந்தது. எனக்குக் கொடுத்ததுடன் நில்லாமல், அடுத்தடுத்து அவர் பொட்டலம் மடித்துக்கொண்டே இருந்தார். சோர்விலாத அந்த அன்பரை வாழ்த்தினேன்.
எல்லா இடங்களிலும் எண்ணெய் என்பதை எண்ணை என்றே எழுதி வைத்துள்ளார்களே என்ற வருத்தம் எழுந்தது.
நேற்று கூட்டம் அதிகமில்லை. எளிதில் தரிசிக்க முடிந்தது. நெல்லையப்பரின் பிரகாரத்தைச் சுற்றி வருகையில் கவனித்தேன். அந்த நேரத்தில் நான் மட்டும் தனியாக நடந்துகொண்டிருந்தேன். லேசாகப் பசிப்பது போல் இருக்கிறதே என எண்ணினேன். அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் இடது பக்கச் சந்நிதியிலிருந்து அம்மாள் ஒருவர் படியிறங்கி வந்தார். என் முன் நின்று, வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தம் கையால் இரண்டு முறை அள்ளி என் கைநிறைய வைத்தார். ஆஹா, லட்டா என்றேன். பூந்தி என்றார். பேருவகையுடன் வணங்கிப் பெற்றுக்கொண்டு, ஆனந்தக் களிப்புடன் உண்டேன். பல முறைகள் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. எனக்குத் தேவையானதைத் தானே அளிக்கிறது தெய்வம். பிறகு நான் எதற்குத் தனியாக வேண்ட வேண்டும்?
பிறகு, அன்னை காந்திமதி அம்பாளை வணங்கி, குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியில் வந்தேன். படியின் அருகில் அம்மாள் ஒருவர், பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். “நான் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கியிருக்கிறேன், நன்றாக நடக்க வேண்டும்” எனக் கூறினார். பெரியவர், “நன்றாக நடக்கும்” என்றார். நானும் மனத்திற்குள் ‘நன்றாக நடக்கும்’ எனக் கூறிக்கொண்டேன்.
எங்கிருந்தோ தண்ணீர் பிரகாரம் வழியாக, திருக்குளத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. மழைநீரைக் குளத்திற்குள் விடுவதாகச் சொன்னார்கள். மிகுந்த சில்லிப்படன் இருந்தது. அதில் கால் நனைய நின்றுகொண்டேன்.
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா