குறளின் கதிர்களாய்… (271)

செண்பக ஜெகதீசன்
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
– திருக்குறள் -702 (குறிப்பறிதல்)
புதுக் கவிதையில்…
சந்தேகப்படாமல் ஒருவர்
சிந்தையிலிருக்கும் எண்ணமதைத்
திண்ணமாய் உணர்ந்தறியும்
வல்லமை கொண்டவன்,
மண்ணுலகில்
மாந்தராய் இருப்பினும்
அவனைத்
தெய்வத்துக்கு ஒப்பாக
மதித்துப் போற்றிடுக…!
குறும்பாவில்…
அடுத்தவர் மனத்திலிருப்பதை ஐயமின்றி
அறிந்துணரும் ஆற்றலுள்ளவரை, மனிதனாயிருந்தாலும்
தெய்வத்திற்கு ஒப்பாகப் போற்றிடு…!
மரபுக் கவிதையில்…
சற்றும் வராமல் சந்தேகம்
சார்ந்தவர் மனத்தின் எண்ணங்களைக்
கற்றே உண்மை உணர்ந்தறியும்
கலையது தெரிந்த வல்லவரை
மற்ற மனிதராய் எண்ணாதே,
மதிப்பில் உயர்ந்தே நாம்வணங்கும்
பற்று மிகுந்த தெய்வமதைப்
போல யெண்ணிப் போற்றுவாயே…!
லிமரைக்கூ..
பிறர்மன எண்ணங்களை ஏற்று
ஐயமின்றி உண்மையறிந்திடும் வல்லவரை,
தெய்வத்திற் கொப்பாகப் போற்று…!
கிராமிய பாணியில்…
அறிஞ்சிக்கோ அறிஞ்சிக்கோ
அடுத்தவர் மனச அறிஞ்சிக்கோ,
குறிப்பா அறிஞ்சிக்கோ..
சந்தேகம் கொஞ்சமும் வராம
அடுத்தவர் மனசில உள்ளத
அப்புடியே உள்ளபடி தெரிஞ்சிக்கிற
தெறம உள்ளவன
சாதா மனுசனா நெனச்சிடாத,
நாம கும்புடுற
சாமியப் போல ஒரு
சாமியாவே நெனச்சிக்கணும்..
அதால
அறிஞ்சிக்கோ அறிஞ்சிக்கோ
அடுத்தவர் மனச அறிஞ்சிக்கோ,
குறிப்பா அறிஞ்சிக்கோ…!