நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72
நாங்குநேரி வாசஸ்ரீ
72. அவை அறிதல்
குறள் 711:
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
சொல்லுத வார்த்தையோட தன்மைய உணந்துக்கிட்ட அறிவாளிங்க சபையில உக்காந்து இருக்கவங்களோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு ஏத்தாமாரி பேசுவாங்க.
குறள் 712:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
சொற்களோட அர்த்தம் (பொருள்) தருத போக்க புரிஞ்சி வச்சிருக்க நல்லவங்க சொல்குத்தமும் பொருள் குத்தமும் வாராம கேக்குதவங்களோட நிலைமையயும் சரியா புரிஞ்சுக்கிட்டு பேசணும்.
குறள் 713:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
சபையில இருக்கவங்க தன்ம தெரியாம பேசுதவங்களுக்கு சொற்களோட வகையும் தெரியாது, பேசுத தெறமையும் கெடையாது.
குறள் 714:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்
அறிவாளிக்கு முன்ன தானும் அறிவாளி கணக்கா நடந்துக்கிடணும். புத்தியில்லாதவன் முன்ன வெள்ளசுண்ணாம்பு கணக்கா தன்னய அறிவில்லாதவனா காட்டிக்கிடணும்.
குறள் 715:
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல முந்திரிக்கொட்ட கணக்கா பேசாம இருக்க அடக்கம் எல்லா நன்மயிலயும் சிறந்த நன்ம.
குறள் 716:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
அறிவாளிங்க முன்ன பேசுதப்போ தப்பாயிடுச்சின்னா அது ஒழுக்கங்கெட்டதுக்கு சமானம்.
குறள் 717:
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
குத்தமில்லாத சொற்களச் சலிச்சு எடுத்து பேசுதவங்ககிட்ட தான் அவங்க படிச்ச படிப்போட பெரும வெளங்கும்.
குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
உணந்துக்கிடுத சக்தி உள்ளவுக கிட்ட பேசுதது வளருத பயிரு இருக்க பாத்தியில தண்ணியப் பாய்ச்சுதது கணக்கா பலனக் கொடுக்கும்.
குறள் 719:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்
நல்லவங்க சபையில மனசுல பதியுதமாரி பேசுத தெறம இருக்கவங்க முட்டாளுங்க கூட்டத்துல அறவே பேசாம இருக்கது நல்லது.
குறள் 720:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
அறிவுள்ளவங்க தனக்கு சமமில்லாத அறிவுகெட்டவங்க முன்ன பேசுதது அழுக்கான முற்றத்துல சிந்தின அமிழ்தம் கணக்கா வீணா போவும்.