Jaffna airport

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

சிவ சேனையின் செய்தியறிக்கை

தொடர் வண்டிகள் இல்லை. எந்திரக் கப்பல்களோ, வள்ளங்களோ இல்லை வானூர்திகள் இல்லை.  மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள், உழவுந்துகள், மலையுந்துகள் எதுவுமே இல்லை.

ஆனாலும் பயணித்தார். மக்களுக்காகப் பயணித்தார். நாட்டுக்காகப் பயணித்தார். மரபுகளைப் பேணப் பயணித்தார். பண்பாட்டை வாழவைக்கப் பயணித்தார்.

தனக்காக எதையும் வைத்திருக்கவில்லை, சேமிக்கவில்லை, விட்டுப் போகவும் இல்லை.

நமது மண், நமது நீர், நமது வானம், நமது காற்று, நமது முன்னோர் இவற்றோடு வாழ்ந்தனர். ஒவ்வொரு செயலும் சோதனையே. நன்மை தருவனவோ? தீமை தருவனவோ? நன்மை தருவனவற்றைப் பெருக்குவதும் தீமை வருவனவற்றை ஒதுக்குவதும் ஆக, சோதனைகளின் விளைவுகளாகப் படிப்படியாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய தமிழ் மரபுகள், மண்ணின் மரபுகள் அழிந்து விடாமல் காப்பதற்காகப் பயணித்தவர்.

சொல்லில் வல்லவர். எழுத்தில் எழுஞாயிறு. சொல்லையும் செயலையும் வாழ்வாக்கியவர். சோர்விலர். அஞ்சா நெஞ்சினர். ஆற்றலர். பயணத்தையே வாழ்வாக்கியவர்.

அவரே ஆறுமுக நாவலர்.

சீனாவில் Wei Yuan (1794-1856), Li Hongzhang (1823-1901), Kang Youwei (1858-1927), Liang Qichao (1873-1929), and Tan Sitong (1865-1898) இந்தியாவில் Dayanand Saraswati  (1824-1883), Vishnu Bhikaji Gokhale (1825-1871) என ஆசிய நிலப் பரப்பில் வாழ்ந்த இவரின் சம காலத்தவர் போன்றே இவரும் அலையென வந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தனி ஒருவனாய் ஈழத்தில் தடுத்தவர்.

ஓடங்களில் வள்ளங்களில் படகுகளில் தோணிகளில் வடகடலைக் கடந்து தமிழகம் சென்று மீண்டவர்.

மாட்டு வண்டிகளில் குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக அலைந்தவர்.

யாழ்ப்பாணத்திற்கு அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் வந்துவிட்டதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

தன் பயணங்களால் நாட்டுக்காக, மக்களுக்காக, கால்கள் தேய்ந்து, உடல் நலம் குன்றி வாழ்ந்த ஆறுமுக நாவலரின் பெயரே யாழ்ப்பாணம் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பெயர் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம் என்று தம் வானூர்தி நிலையத்தை அழைக்க ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்கள்.

சைவ தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை வைப்பதால், இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் நாவலர் அனைத்துலக ஆறுமுக நாவலர் ஆவார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.