தன்னை அறிந்து இன்பமுற
சௌ.பூரணி
நிறைஞர் பட்ட ஆய்வாளர், யோகமும் மனித மாண்பும் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. |
முனைவர் வெ.இராமதாஸ்
நெறியாளர், இணைப்பேராசிரியர், யோகமும் மனித மாண்பும் துறை, விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம், அறிவுத் திருக்கோயில், ஆழியாறு. |
முன்னுரை
நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனையில் சிறந்து, பண்பில் பண்பட்டு, அறிவில் ஆண்டவனை அறிந்து இன்புற முடியும். அன்பையும் அறத்தையும் கொண்டு இந்த ஆனந்த நிலையை தானும் அனுபவித்து, பிறரும் அனுபவிக்க உதவ முடியும். இறைவனோடு இணையும் சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் ஆண்டவனை அடைய முடியாமல் செய்வது அவனிடம் உள்ள ஆணவம் என்னும் தன்முனைப்புதான். தன்முனைப்பு மனிதனிடம் அழியும்போது, அவன் தன்னை, தனது ஆன்ம சொரூபத்தை அறிந்து இன்பம் அடைகிறான். ஆணவத்திரை விலகும் போது இறைவனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு இன்புற முடியும் என்பது மகான்களின் கூற்றாகும்.
தான் என்னும் தன்முனைப்பு
தன்முனைப்பு என்பது இறைவனை மறந்த நிலையில், மனிதன் தனது சிறப்பிற்கெல்லாம் காரணம் தான் தானென்று எண்ணும் எண்ணம் ஆகும். தன்முனைப்பு ஆனது கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகைத் தோற்றுவித்து அதில் உயிர்களைப் படைத்து, அவற்றைக் காத்து, ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து, தனது அழகு, அறிவு, திறமை, புகழ், கல்வி இவற்றை நினைத்துத் தற்பெருமை கொள்வதே தன்முனைப்பாகும்.
”அறிவின் மயக்க செருக்கு தான் தன்முனைப்பாகும். இது ஒரு
திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது” 1
என்னும் வேதாத்திரி மகரிஷியின் கூற்றிலிருந்து தன்முனைப்பு நமது அறிவினை மறைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் மனிதன் மயக்கம் என்னும் மாயையில் சிக்கிக்கொண்டு துன்புறுகின்றான். இந்த மாயை அவனைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டி, பாவப் பதிவுகளை ஏற்படுத்துகிறது என்பது புலனாகிறது.
தன்முனைப்பு தகர்ந்து மனிதன் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர் நோக்கில் சித்தர்களும் மகான்களும் நன்னெறிகளை அருளியுள்ளார்கள். அவற்றுள் கர்வம் களைந்து கடவுளை அறிவதற்கு ஆறாறு தத்துவம் ஏது? என்னும் சைவ சித்தாந்த நூல் நல்கும் வழிமுறைகளை ஆராய உள்ளோம்.
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் என்பது முழுமுதற் கடவுளான சிவபெருமானை வணங்கும் சைவ சமயத்திற்கு அடிப்படையானது. சித்தாந்தம் – அந்தம் என்றால் முடிவு. சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை என்று பொருள் படும். சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவம் பதி, பசு, பாசம் என்பதாகும்.
- பதி – பேரறிவான இறைவனையும்
- பசு – அறிவுடைய உயிர்களையும்
- பாசம் – ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களையும் குறிக்கின்றது.
பாசம் என்னும் மலங்கள் உயிர்களின் அறிவை மறைத்து இறைவனை அடைய முடியாமல் தடுக்கின்றன. மலத்தினால் தோன்றும் ஆணவமே ஆண்டவனை அடைய விடாமல் தடுப்பது. ஆணவ, கன்மங்களின் கலப்பிற்கு ஏற்ப மாயை சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என வகைப்படுத்தப்படுகிறது.
அகங்காரமும் அதன் வகைகளும்
பிரகிருதி மாயையில் முதலில் சித்தியும், சித்தியிலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரம் என்னும் தன்முனைப்பும் தோன்றுகிறது.
“அகங்கார தத்துவமானது தைசத அகங்காரம், வைகரி அகங்காரம்,
பூதாதி அகங்காரம் என மூன்று வகைப்படும்” 2
அகங்காரமானது அதனிலிருந்து தோன்றும் தத்துவங்களுக்கேற்ப தைசத அகங்காரம், வைகரி அகங்காரம், பூதாதி அகங்காரம் எனப் பகுக்கப்பட்டுள்ளது. தைசத அகங்காரத்தில் மனம், அறிவுக் கருவிகளான தோல், வாய், கண், காது, மூக்கு ஆகியனவற்றில் இயங்கி, ஒளியாய் இருக்கிறது. வைகரி அகங்காரத்தில் மனம், கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகியனவற்றின் வழியாகப் புறத்தே செயல்பட்டு விகாரப்படுகிறது. பூதாதி அகங்காரத்தில் பஞ்சபூதங்களும் அவற்றின் தன்மாற்றங்களான தொடுவுணர்வு, ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகியனவும் தோன்றுகின்றன என அகங்காரத்தின் தோற்றமும், அதன் வகைகளும் ஆறாறு தத்துவம் ஏது? என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
மாயையிலிருந்து தோன்றிய முப்பத்தாறு ஆன்ம தத்துவங்கள், உயிருக்கு அறிவை விளக்கும் ஒளிப்பொருளாக இருந்தபோதும், ஆன்மாவின் ஆணவமே அதனை அறியாமை என்னும் மயக்கத்திற்கு ஆளாக்குகிறது.
“ஆறாறு தத்துவம் சொன்னோம் அடைவாக
மாறா மலம்இரண்டும், வா, சொல்லக் – கூறில்
அறியாமை ஆணவம்: நீ யான, சுகதுக்கம்
குறியா வினைஎன்று கொள்” 3
என்ற பாடலின் மூலம் அறியாமையால் தோன்றும் “தான் என்னும் தன்முனைப்பும்”, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் புரியும் “பழிச்செயல்களும்”தான் மனிதனின் துன்பத்திற்குக் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் தனது மூலத்தை உணராமல், மனிதன் தான் (நான்) என்று எண்ணுவதே ஆணவமாகும். தன்முனைப்பால் செயல்களைச் செய்து வினைப்பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வதே கன்மம் ஆகும் என்பதனையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
சிவ நடனம்
மனிதனிடம் உள்ள மலங்களுக்கு ஏற்ப சிவபெருமானின் சிவநடனம், ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என வகைப்படுத்தப்படுகிறது. ஊன நடனமானது உலகப் பற்று உடையவர்களுக்கானது. ஞான நடனமானது அருள்பற்று உடையவர்களுக்கானது. ஆனந்த நடனமானது சீவன் முக்தி நிலையை அடைவதற்காக ஆடப்படுகிறது எனச் சிவ நடனத்தை இந்நூல் விளக்குகிறது.
”மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான், அந்தம் ஆன, இடத்தே தங்கிடும் – ஆனந்தம்
மொண்டு, அருந்த நின்றுஆடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து” 4
என்ற பாடலானது ஆணவம், கன்மம், மாயை என்னும் தன்முனைப்பு, பாவப் பதிவுகள், மயக்கம் மறைந்து, தான் என்ற உணர்வும் மறைந்து மெய், வாய், மனம் அசையாது மகா மௌனத்தில் லயித்திருக்கும் முக்தர்கள் கண்டு களிப்புறும் பொருட்டு ஆடும் நடனம் ஆனந்த நடனம் என்பது புலனாகிறது. மேலும்,
“பரைஇடமா நின்றுமிகு பஞ்சாக்கரத்தால்
உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன் – வரைமகள் தான்
காணும்படியே கருணை உருக்கொண்டு, ஆடல்
பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு” 5
தான் என்னும் தன்முனைப்பு ஒழிந்து வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத ஒப்பற்ற இறைவனைச் சரணடைந்து, “சிவாயநம” என்னும் மகாமந்திரம் கொண்டு தொழும் ஞானிகள், உமை மட்டும் கண்டு களிக்கும் சிவக் கூத்தை உள்ளத்தில் கண்டு இன்புறுவார்கள். இவர்களுக்குப் பிறவித் தொடர் அறுபடும் என்பதை மேற்கண்ட வரிகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மும்மலங்கள் ஒழிந்து, முதலாம் மலமான ஆணவம் அழிந்த நிலையில் இறைவனின் திருநடனக் காட்சியை காண முடிகிறது. அஞ்ஞான நிலையில் தன்முனைப்புடன் வாழ்பவர்களுக்கு இறைவன் உருவ வடிவத்தில் ஊன நடனமாகக் காட்சி தருகின்றான். மனம் நுணுகி, தன்முனைப்பினை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அறச்செயல் புரிந்து வாழ்பவர்களுக்கு, இறைவன் தோற்றங்களுக்கு அடிப்படையான விண் துகள்களாகக் காட்சி தருகின்றான். இது பார்க்கும் அனைத்தும், அணுத்துகள்களின் கூட்டாகக் காணும் ஆனந்த நிலையான ஞான நடனமாகும். தன்னில் உள்ள தன்முனைப்பினை முற்றிலும் அழித்த நிலையில், விண்ணிற்கு அடிப்படையான இறைத்துகள்களை அனைத்திலும் காணும் பேரானந்த நிலையினை அடையலாம். தன்னிலும், தன்னைப் போன்று பிற உயிர்களிடத்திலும், இறைவனைக் காணும் உன்னத நிலையே ஆனந்த நடனமாகும். ஆணவம் அழியும் போது மட்டுமே தான் யார் என்பதை உணர்ந்து தன்னில் உள்ள இறைவனை அறிந்து இன்புற முடியும் என்பதனை இறைவனின் திருநடனக் காட்சியின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஆணவம் அழிந்தால் முக்தி
“அப்பாஇம் முக்திக்கு அழியாத காரணம்தான்
செப்பாய் அருளாலே; செப்பக்கேள் – ஒப்புஇல்
குருலிங்க வேடம்எனக் கூறில், இவைகொண்டார்
கருஒன்றி நில்லார்கள், காண்” 6
என்ற பாடலில் குரு வழிபாடு ஆணவத்தையும்; லிங்க வழிபாடு கன்மத்தையும்; சிவனடியார்களை வழிபடுவது மாயையையும் அழிக்க உதவும். இம்மூன்று வழிபாடுகளினால் மும்மலங்கள் நீங்கி முக்தி கிட்டும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு வழிபாடு செய்யும்போது அன்பினால் மனம் கசிந்து உருகி, தன்னை இழந்து, சரணாகதி என்ற நிலையில் நிற்கும் போது தன்முனைப்பு தகர்ந்து; ஆணவம் அழிந்து; முக்தி என்னும் வீடு பேறு கிட்டுகிறது.
“ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டுவிட்டால்
இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான்” 7
தன்முனைப்பு தகரும் போது தன்னை அறிவதற்கும் இறைவனை உணர்வதற்குமான தடைகள் நீங்கப்பெற்று தானே பிரம்மம் எனும் உண்மையை உணர முடிகிறது, அண்டத்தில் இருப்பதை பிண்டத்தில் காணும் ஆனந்த நிலையை அடையலாம் எனும் மகா பெரியவரின் வாக்கிற்கேற்ப, தன்முனைப்பு நீங்கி, இறைவனிடமும் குருவிடமும் சரணடைந்து, அடியார்க்கு அடியாராக வாழ்பவர்களுக்கு முழுமைப்பேறு எனும் முக்தி நிலை கிட்டும் என்பது புலனாகிறது.
முடிவுரை:-
தன்முனைப்பு தகரும் போது அறியாமை அழிந்து, அறிவில் உயர்ந்து அனைத்திலும் ஆண்டவனைக் காணும் ஆனந்த நிலையை அடைய முடியும். இந்நிலையில் பார்க்கும் உயிர்கள் அனைத்தையும் இறைவனாக காணும் அதாவது சீவனில் சிவனைக்காணும் பேரானந்த நிலையை அடைய முடியும். மனிதன், அகங்காரம் அழிந்தால் அன்பு பெருகும்; ஆணவம் ஒழிந்தால் ஆனந்தம் ஓங்கும்; இறுமாப்பு நீங்கினால் இன்பம் பொங்கும் என்பதை உணர்ந்து வாழும் போது தன்னை அறிகின்றான். தன்னில் உள்ள சிவத்தை உணர்கின்றான். இப்பேரானந்த நிலையை அடையவே இப்பிறவி எடுத்து வந்துள்ளோம் என்பதை உணர்ந்து தருக்கொழித்து தன்னை அறிந்து இன்புற்று வாழ்வோமாக!
அடிக்குறிப்பு
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், ப.354
- தா.ம.வெள்ளைவாரணம், ஆறாறு தத்துவம் ஏது?, ப.11
- மேலது, ப.32
- மேலது, ப.40
- மேலது, ப.41
- மேலது, ப.48
- ரா.கணபதி (தொ.ஆ), தெய்வத்தின் குரல் முதல் பகுதி, ப.49
துணைநூல் பட்டியல்
- தா.ம.வெள்ளை வாரணம், ஆறாறு தத்துவம் ஏது? திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், சிதம்பரம், ஆ.2008
- வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை பாகம் 1, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2003
- வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை பாகம் 2, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2003
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, ஆ.2011
- ரா.கணபதி (தொ.ஆ), தெய்வத்தின் குரல், முதல் பகுதி, வானதி பதிப்பகம், சென்னை ஆ.2012
- https://brseeth.blogspot.com
- www.thevaaram.org