வெ. பரமசிவம்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
து.கோ.வைணவக் கல்லூரி (தன்னாட்சி),
அரும்பாக்கம், சென்னை – 106.

உடம்படுமெய்கள்

முன்னுரை

மாந்தனின் வாழ்வினை வளப்படுத்தும் கருவிகள் பலவற்றுள் மிகவும் முதன்மையானது மொழி. அம்மொழியை வளப்படுத்துவன, சொற்கள். அச்சொற்களை நெறிப்படுத்துபவை, இலக்கணங்கள். அவ்விலக்கணங்களின் உயிர்நாடியாய்த் திகழ்வது, புணர்ச்சியிலக்கணம். அதன் ஒரு கூறாகிய உடம்படுமெய்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. தமிழில் உடம்படுமெய்களாகக் கொள்ளத்தக்கவை, அவை வருமிடங்கள், அவற்றைப் பற்றிய மரபிலக்கணிகள் மற்றும் அறிஞர்களின் கருத்துகள், உலக மொழிகள் சிலவற்றில் வழங்கும் உடம்படுமெய்கள், இன்றைய நிலையிலும் அவை தேவைப்படுவதற்கான கரணியம் (காரணம்) போன்றவை குறித்து மிக விரிவாக ஆய்ந்து விளக்குவதே  இக்கட்டுரையின் நோக்கம்.

தரவுகள்

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம், (இந்நூல்கள் பரவலாக அறியப்பட்டவை. ஆதலால், ஆசிரியர் பெயர் முதலானவை தரப்படவில்லை). தமிழ் நூல் (த.சரவணத் தமிழன், இயற்றமிழ்ப் பயிற்றகம்:1972), இலகு தமிழ் ஐந்திலக்கணம் (மு.வேங்கடராமன்:1990), தென்னூல் எழுத்துப் படலம் – சொற்படலம் (ச.பாலசுந்தரம், தாமரை வெளியீட்டகம்:1991), தமிழ்க் காப்பு இயம் (மி.காசுமான், காசுமான் பதிப்பகம்:2005) ஆகிய நூல்கள் உடம்படுமெய்கள் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் இக்கட்டுரைக்கு முதன்மைத் தரவுகளாகவும் உரையாசிரியர்கள் / அறிஞர்கள்தம் கருத்துகள் துணைத் தரவுகளாகவும் அமைகின்றன.

பயன்

உடம்படுமெய்கள் எவை?, இன்றைய நிலையிலும் அவை தேவையா? என்பன போன்ற பல கருத்துகளை விளங்கிக்கொள்ள இக்கட்டுரை பயன்படும்.

உடம்படுமெய் – விளக்கம்

“உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங்கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது. வருமுயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப் பொருள் கோடலுமுண்டு”1 என்றும் “நிலைமொழி ஈற்றிலும் வருமொழி  முதலிலும் உயிரெழுத்துகளே நிற்பின், அச்சொற்கள் புணருங்கால் அவ்விரு உயிர்களும் தம்முள் உடம்படாது நிற்கும். அவற்றை உடம்படச் செய்வதற்கு அவற்றிடையே ஒரு மெய்யெழுத்து தோன்றும் அதனை உடம்படுமெய் என்பர். அவ்வாறு தோன்றும் மெய்கள் யகர வகரங்களே”2 எனவும் உடம்படுமெய் என்பதற்கான விளக்கத்தினைத் தருவர்.

மரபிலக்கண நூல்களில் உடம்படுமெய்

தொல்காப்பியர்  உடம்படுமெய்கள் இவையென்றோ, இன்னின்ன உயிர்களுக்குப்பின் இவ்விவ்வெழுத்து வருமென்றோ தெளிவாகக் குறிப்பிடாமல்,

          “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (தொல்.எழுத்து.இளம்.141)

என்ற நூற்பாவைச் செய்தார். இந்நூற்பாவிற்கு, ‘உயிரீறு உயிர்முதன் மொழியோடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுதலிற்று. மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் முதன்மொழி வருமிடத்து இடை உடம்படுமெய் வடிவு கோடலை நீக்கார். உ-ம்: புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக் கொட்கும் என வரும்’ என்று உரை வரைந்தார் இளம்பூரணர். மேலும், ‘உரையிற் கோடல்’ என்பதனால் உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க. இகரவீறும் ஈகார வீறும் ஐகாரவீறும் யகரவுடம்படுமெய் கொள்வன, அல்லனவெல்லாம் வகரமெய் கொள்வன, ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என வரும். ‘வரையார்’ என்றதனால், உடம்படுமெய்கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என வரும்’ என்றும் விளக்கினார்.

இவர் கருத்திலிருந்து சிறிது மாறுபட்டு, ‘நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும்…’ என உரைவரைந்தபின்,

‘அவை யகரமும் வகரமுமென்பது முதனூல் பற்றிக் கோடும்;
உடம்படு மெய்யே யகார வகார
முயிர்முதன் மொழிவரூஉங் காலை யான

என்றும்

இறுதியு முதலு முயிர்நிலை வரினே
யுறுமென மொழிப வுடம்படு மெய்யே

எனவும் தொல்காப்பியத்தில் இல்லாத இரு நூற்பாக்களைத் தந்தார் நச்சினார்க்கினியர். இத்துடன் இளம்பூரணர் மொழியாத கருத்தாகிய ஏ முன் ய், வ் ஆகியவிரண்டும் வருமென்பதனையும் பதிவு செய்தார். மேலும், ‘ஒன்றென முடித்தல்’ என்பதனால் ‘விண்வத்துக்கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி உண்புழி என்பன வினைத்தொகையென மறுக்க’ எனக் கூடுதல் விளக்கமும் தந்தார். நச்சினார்க்கினியரின் இக்கருத்தினை, “…வினைத்தொகையில் சொற்கள் உடம்படு மெய்பெறா என்பது பொருத்தமாகப் பட்டிலது. ஏனெனில், எழு+அலை > எழுவலை என வரல் இயல்பே” என மறுக்கிறார் சூ. இன்னாசி.3

உடம்படுமெய்கள் பற்றிய இலக்கணத்தை முதன்முதலாகத் தெளிவாகவும் சிறப்பாகவும் சூத்திரமாக்கிய நூல் வீரசோழியமே (18). ‘வருமொழி முதலில் ஏதேனுமொரு உயிரெழுத்து வந்து, நிலைமொழியீற்றில் இ, ஈ, ஐ நின்றால் யகரமும் இவையல்லாத பிற உயிரெழுத்துகள் நின்றால் வகரமும் ஏ நின்றால் ய்,வ் ஆகியவிரண்டும் உடம்படுமெய்களாக வருமெனக் கூறியிருப்பதோடு, ஒரோவிடங்களில் நிலைமொழியின் ஈற்றிலுள்ளவை கெட்டு, உயிராக நின்று உடம்படுமெய் பெறுதலுமுண்டு’ என்பதே வீரசோழியத்தின் கருத்து. மேலும், வடமொழி மரபினடிப்படையில் உடம்படுமெய்யை ‘ஆகமம்’ என்ற சொல்லால் குறித்துள்ளது.

நேமிநாதம் (13), ‘இ, ஈ, ஐ முன் யகரமும் அ, ஆ, உ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றின்முன்  வகரமும் தோன்றுமெனவும் நிலைமொழியீற்றில் நின்ற மகரம் ஒரோவிடத்து அழிந்து வகரம் தோன்றுதலுமுண்டு’ என்றும் விதித்துள்ளது. நிலைமொழியீற்று மகரங் கெட்டு வகரந் தோன்றுவதற்கு, ‘மரவடி, குண்டலவொளி, வெண்கலவோசை’ ஆகிய சொற்களைச் சான்றுகளாகத் தந்துள்ளார் இந்நூலின் உரையாசிரியர்.4

வீரசோழியத்தைத் தழுவி நன்னூல் (162) நூற்பா யாத்திருக்க, இலக்கண விளக்கமும் (68) அதனைத் தழுவியே உரைத்துள்ளது. இ, ஈ, எ, ஐ ஆகியவற்றின்முன் யகரமும் பிறவெழுத்துகளின்முன் வகரமும் வருமென விதித்துள்ள தொன்னூல் விளக்கம் (20) ஏ முன் வகரம் வருவதை மட்டும் (யகரமும் வருவதைக் கூறாமல்) பதிவு செய்துள்ளது. மேலும், உடம்படுமெய் என்பதனை, ‘புணர்பெழுத்து’ என்ற சொல்லால் குறித்துள்ளது. நன்னூல் நூற்பாவையே வழிமொழிந்துள்ளதோடு (183), ‘கோ, மா ஆகியவற்றின்முன் வகரமேயன்றி யகரமும் உடம்படு மெய்யாக வரும்’ (184) என்கிறது முத்துவீரியம். இதனை, ‘கோயில் மாயிருஞாலம் ஆகிய சொற்களைக் கருத்திற்கொண்டு வழக்காறு தழுவி இவ்வாறு முத்துவீர உபாத்தியாயர் விதி கூறியது சுவை பயப்பதாகும்’ எனப் புகழ்ந்துரைத்துள்ளார் கு.சுந்தரமூர்த்தி.5

தொல்காப்பியம் முதலான எந்நூலும் ஓரெழுத்துக் குறில்(உயிர்) மட்டுமே நிலைமொழியாக நின்று வருமொழியோடு (உயிர்) புணரும்போது உடம்படுமெய்யினைப் பெறுமென விதிக்கவில்லை (விகாரப்பட்ட மொழி நீங்கலாக). அறுவகை இலக்கணம் (தண்டபாணி தேசிகர்) மட்டுமே அவ்வாறு விதித்துள்ளது. அதுவும் அ முதல் ஔ வரையிலான 12 உயிரெழுத்துகளையும்  ஐந்து (116 – 120) நூற்பாக்களில்  இலக்கணப்படுத்தியுள்ளது. மேலும், ஏ முன் யகரம் மட்டுமே (சான்று:ஏயிருளா) வருமென  மொழிந்திருப்பதும் சுட்டத்தக்கது.

தமிழ் நூல் (201), இலகு தமிழ் ஐந்திலக்கணம் (340), தென்னூல் (228,229), தமிழ்க் காப்பு இயம் (7) ஆகிய நூல்கள் நன்னூலைத் தழுவியே சூத்திரஞ் செய்துள்ளன. இவற்றுள் தமிழ் நூல் நூற்பாவிற்கு உரைகூறிச் சான்றுகளைத் தந்திருப்பதோடு, ‘கோவில்; கோயில் என்பது வழுவமைதி; கௌவெனல்; (கூவிற்று; கூயிற்று – என்பன இருநிலை). விரி: அவரா ஈவார்? தம்பி இளையன்; அந்த அரசன் – எனப் பிரிந்து நின்றும் நிலவுலகு (நிலவு+உலகு, நில+உலகு), அண்ணாவிழவு (விழா -விழவு; இழவு) எனப் பொருள் திரிந்தும் உடன்படுமெய் தோன்றாதென்க. கிடைக்க இல்லை; முடிய இல்லை என்பன பிழை’ எனவும் விளக்கியுள்ளது.

இலகு தமிழ் ஐந்திலக்கணம் ‘ஏனை உயிர்வரின்’ என்ற நன்னூல் தொடரை, ‘அ ஆ உ ஊ ஒ ஓ ஔ’ எனத் தெளிவாகவே தந்துள்ளது. அச்சூத்திரத்தின் முதலடியாகிய ‘இ, ஈ, ஐ பெறும் அகரம்’ என்பதன் கடைசிச்சொல் யகரம் என்றும் ஆறாவது அடியாகிய ‘வ – வரும் சில்லிடம் த -முன்’ என்பதன் கடைசிச்சொல் ‘ஏ – முன்’ எனவும் இருக்க வேண்டும்.

விரிவாகச் சான்றுகளைத் தந்தபின், ‘மன்னே என்றதனான் சிறுபான்மை கூயினான் கூவினான் – கோயில் கோவில் என உறழ்ந்து வருதல் கொள்க’ (228) என விளக்கியுள்ளது தென்னூல். மேலும், ஓரெழுத்தொருமொழியாக வரும் ஆகார ஈற்றின்முன் யகரம் உடம்படுமெய் ஒரோவழிவருதல் செய்யுள் வழக்காகும் எனுங் கருத்தினைச் சூத்திரமாக்கி (229), ‘மாயிருநாலம் – பாயினபுனலே (பரவின) என வரும்’ என்ற சான்றுகளையும் தந்துள்ளது. இவற்றுள் ‘மாயிருநாலம்’ என்பது மாயிரு ஞாலம் என்றிருக்க வேண்டும். தமிழ்க் காப்பு இயம் ஒவ்வோரீற்றிற்கும் தனித்தனியே சான்றுகளைத் தந்துள்ளது. இவ்வாறு, தொல்காப்பியம் (உரையாசிரியர்கள்) முதலான மரபிலக்கண நூல்களில் உடம்படுமெய்கள் பற்றிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் 1. நேமிநாதத்திற்கு முன் தோன்றிய வீரசோழியமே ஏ முன் ய், வ் ஆகியவிரண்டும் வருமென  விதித்திருக்க, நேமிநாதம் அதனை நீக்கியிருப்பது, 2. இ, ஈ, ஐ ஆகியவற்றோடு எ முன்னும் யகரம் வரும், ஏ முன் வகரம்  மட்டும் வரும் (யகரம் வராது) எனத் தொன்னூல் விளக்கம் பதிவு செய்திருப்பது, 3. ஏ முன் யகரம் மட்டுமே  வருமென (சான்று: ஏயிருளா) அறுவகை இலக்கணம் மொழிந்திருப்பதுமாகிய இவையனைத்தும் பொருத்தமற்றவையென்பது ய,வ வரும் சூழல் என்ற தலைப்பில் விளக்கவுள்ள கருத்துகளால் தெளிவுறும்.

அறிஞர்களின் கருத்துகள்

உடம்படுமெய்களைப் பற்றிய தொல்காப்பிய நூற்பாவில் வரும் ‘வரையார்’ என்ற சொல்லானது உயிரீற்று-உயிர்முதற் சொற்கள் உடம்படுமெய்களைப் பெறுதல் கட்டாயம் என்பதனை வலியுறுத்துவதாகக் கருதி, “எல்லா மொழிக்கும் எனப் பொதுமையை உள்ளடக்கிக் கூறியமையால் தொல்காப்பியர் உடம்படுமெய் கொள்ளுதலை இன்றியமையாததாகக் கருதினாரென எண்ணத் தோன்றுகிறது. மேலும், ‘வரையார்’ (தொல்.எழு.இளம்.நூ.141, 146, 266, 422) என்ற சொல் எழுத்ததிகாரத்துள் யாண்டும் மிகைச் சொல்லாக எடுத்தாளப்படாததாலும் இவ்வுண்மை புலனாகும்”6 எனக் கூறியிருப்பதோடு, இளம்பூரணர் ‘ஒருதலை அன்று’ எனக் கூறுவதால் அவர் காலத்தில் உடம்படுமெய் கொள்ளுவதும் கொள்ளாதிருத்தலுமாகிய இரு வகையான மொழியமைப்புகளும் நிலவியிருக்கலாம் எனவும் விளக்கியுள்ளார் சா.கிருட்டிணமூர்த்தி. அச்சொல் (வரையார்) உடம்படுமெய் பெறுதல் கட்டாயமன்று என்பதைச் சுட்டுவதாகத் தே.ஆண்டியப்பன்7 உள்ளிட்ட பலரும், உடம்படுமெய் அருகி வழங்கியதைக் குறிப்பிடுவதாகக் கா.கோ.வேங்கடராமன்8 முதலானோரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், ‘விண்வத்துக் கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளியீறும் உடம்படுமெய் பெறு மெனக் கூறிய நச்சினார்க்கினியரின் கருத்தினை,

ஒருகால் சிலமெய் யெழுத்துக்களின்பின்
உயிர்வரி னுடம்படு மெய்வரல் வழக்கே (இலக்கணக் கோவை : நூ.11)

எனச் சூத்திரமாக்கி, ‘விண்+அத்து = விண்வத்து, செல்+உழி = செல்வுழி’ எனுஞ் சான்றுகளையும் தந்துவிட்டார்  சுந்தர முதலியார்.9 மெய்க்குப்பின் வகர உடம்படுமெய் வருமெனும்  நச்சினார்க்கினியரின் கருத்து மோ.இசரயேலுக்கும்10 உடன்பாடானதே. ஆனால்,  “‘விண்வத்துக் கொட்கும்’ ‘சார்வுழி’ என்றாற்போல மெய்யீற்றின்முன் உடம்படுமெய் வருதலை உரையாசிரியர்கள் கூறுதலானும், அருகி ‘ஆயிடை’ என்றாற்போன்று உடம்படுமெய் மாறி வருதலானும் வகரம் உடம்படுமெய்யன்று; எழுத்துப் பேறாகலாம் என்ற கருத்தும் உண்டு” என்கிறார் சூ. இன்னாசி.11       

தொல்காப்பியத்தில் காணப்படும் சில சொற்புணர்ச்சிகள் இங்குச் சிந்திக்கத்தக்கன. ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து (பாயிரம்), ஆயிரண்டும் (94, 95, 96), ஆயீரியல (108, 152),  ஆயிருபண்பின் (113), ஆயிரண்டென்ப (118), ஆயிரு புள்ளியும் (148), ஆயியல் (208) என எழுத்ததிகாரத்திலும் ஆயிருதிணை (1) ஆயிருமுதலின், ஆயிரு பாற் சொல் (3) எனச் சொல்லதிகாரத்திலும் (இ,ஈ,ஐ,ஏ முன்னரன்றி) ‘ஆ’ அல்லது ‘அ’வின் முன்னர் யகரம் வந்துள்ளமையைக் காண முடிகிறது. இவ்விடங்களிலும் மெய்யீற்றின் முன்னும் வரும் வகரத்தை இன்னாசி மொழிந்துள்ளதைப் போல  எழுத்துப்பேறு என்று கொள்வதே மிகவும் பொருத்தமானது.      

வடமொழி, ஐரோப்பிய மொழிகளில் உடம்படுமெய்

“வடமொழியில் பெரும்பாலும் நிலைமொழியிலும் வருமொழியிலும் உள்ள இரண்டுயிரும் ஒன்று சேர்ந்து ஓருயிராக மாறி ஒலிக்கும். ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இவ்வாறு ஓர் உயிர் அடுத்துவரும் உயிரோடு இணைந்து ஒன்றுபடல் (assimilation of Vowels) உண்டு. அதனால் இரண்டு உயிரொலிகளுக்கு இடையே நேரும் விட்டிசை (hiatus) தவிர்க்கப்படுகிறது……

வடமொழியில் மட+அதிபதி > மடாதிபதி…” 12 எனப் புணரும் என்கிறார் மு.வரதராசன்.

திராவிட மொழிகளில் உடம்படுமெய்

‘திராவிட மொழிகள் எல்லாவற்றிலுமே இரண்டு உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறுவதைத் தடுப்பதற்குச் சில மெய்யொலிகளை அவ்விரு உயிரொலிகளுக்கிடையே புகுத்தும் வழக்கம் காணப்படுவதாகவும் ய், வ், ம், ர், ன் ஆகியனவே அவ்வாறு புகுத்தப்படும் மெய்கள்’ என்றும் மொழிந்துள்ள கால்டுவெல்லின் கருத்தினை அ.சண்முகதாசும்13, ‘ந்’ என்பதும் சந்தி உடம்படுமெய் என்ற  அவரின் கருத்தினைச்  சோமயாஜியும்14 எடுத்துக் காட்டியுள்ளனர்.

தமிழில் இன்று இயல்பாகவே கோயில், கோவில் போன்ற வழக்குகள் காணப்படுகின்றன. ஆறுமுக நாவலர் இலக்கணச் சுருக்கத்தில் கோ என்பதன்முன் இல் வந்தால் இடையில் வகரம் வராமல் யகரம்(கோயில்) வருமெனவும்(பக்கம்.34) ஒரோவிடத்துக் கோவில் என வருமென்றும் குறிப்பிட்டுள்ளார். இலக்கியத் தமிழில் காணப்படும் ‘தெரிவிலை’  (ஞா. தேவநேயர், தமிழ் நூல், மதிப்புரை) போன்ற சொல் வழக்குகளில் இகரத்திற்குப்பின் வகரம் வந்துள்ளமை குறிக்கத்தக்கது.

கம்பர் வினாவினான் என்ற சொல்லை வினாயினான் என அமைத்துள்ளமையைச் சுட்டியுள்ள மு.வை.அரவிந்தன்15 செல்வுழி என்பதில் வரும் வகரம், உண்புழி என்பதில் வரும் பகரம், முன்றில் என்பதில் வரும் றகரம் ஆகியனவும் உடம்படுமெய்களே என்கிறார். ஆனால், பிற திராவிட மொழிகளைப் போலவே தமிழில் ய், வ் மட்டுமின்றி ன், ஞ், ர் ஆகியன வருவதையும் அதற்குக் காரணம் அவற்றிற்கான ஒலித்திரிபுகளே என்பதையும், “ஒரு சொல்லில் ஈருயிர்கள் பொருந்துமிடத்து  ‘அரையுயிர்’ களான யவ்வும் வவ்வும் வருதலே பொதுக் கட்டளை. இவைதாம் உடம்படுமெய் எனப்படும். ஆயின் ஒலித்திரிபால் இவையிற்றினிடமாய் னவ்வும், ஞவ்வும் ரவ்வும் வரலுறும். உதாரணம்:-

இருக்கின்ற அ(வ)ன்      இருக்கின்றனன்

என்மான் (என்பார்)          என்மனார்

இளைய (வன்)                  இளைஞன்

காவும்                                   காரும்”

எனச் சான்று காட்டி விளக்கியுள்ள ஞானப்பிரகாசரின்16 கருத்து இங்குச் சுட்டத்தக்கது.

கால்டுவெல் உள்ளிட்ட பலரும் ய்,வ் மட்டுமன்றிப் பிறவெழுத்துகளும் உடம்படுமெய்களே எனக் கூறியிருக்க, “… யகர வகரங்களை ஒலி நூலார் அரையுயிர் (Semi vowels) எனக் குறிப்பிடுவர். அவை உயிரிடையே வரும் மெய்யாதற்கு உற்ற தகுதியை அது புலப்படுத்துகிறது”17 என மொழிந்து ய்,வ் மட்டுமே உடம்படுமெய்களென்பதையும்  அவை அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறார் மு.வரதராசன். இவரைப் போலவே, “தலைவன், கலைஞன், இயக்குநர் இவற்றை எவ்வாறு பிரிப்பது? தலை+அன், கலை+அன், இயக்கு+அர் எனப் பிரித்தால் ஐகாரம் அடுத்து வகரம், ஞகரமும் உகரத்தை அடுத்து நகரமும் வருகின்றன. இவை உடம்படுமெய்களா?

யகரம் வகரம் தவிர தனிச்சொல்லின் இரு ஒலிகளுக்கிடையில் வரும் மெய்யெழுத்துக்களை உடம்படு ஒலிகள் என்போம்”18 என வகைப்படுத்தியுள்ள க.வீரகத்தியின் கருத்தினை எடுத்துக் காட்டுகிறார் பெ.முத்துராஜ்.

ய, வ வரும் சூழல்

ஏகாரத்தைப் படுத்து உச்சரித்தால் யகரமும் எடுத்து உச்சரித்தால் வகரமும் உடம்படுமெய்களாக வருமெனவுரைத்து, சேயடி … சேவடி சேயுழுதது … சேவுழுதது எனும் சான்றுகளைத் தந்திருப்பதோடு, சும்மாயிருந்தேன்…. சும்மாவிருந்தேன் ஆயிடை… ஆயிருதிணை கூயினான்… கூவினான் கோயில் … கோவில் போன்றவற்றில் வகரமெய் நிற்க வேண்டியவிடத்தில் யகரமெய் வந்திருப்பது ஏனெனில் ஆ, ஊ, ஓ ஆகிய உயிரெழுத்துகளை எடுத்தும் படுத்தும் ஒலித்தலாலே யாகுமென மொழிந்துள்ளார் நடராசா.19 மேலும், உடன்பாட்டில் வகரமும் எதிர்மறையில் யகரமும் வருமெனக் கூறி,

உடன்பாடு            எதிர்மறை

அரிவேன்                அரியேன்

மடிவேன்                 மடியேன்

கடைவேன்               கடையேன்

அறைவேன்              அறையேன்”

எனுஞ் சான்றுகளைத் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரைப் போலவே, “நிலைமொழியின் ஈற்றில் ‘ஏ’ என்னும் ஒலி வந்து அது பெயர்ச்சொல்லாக இருந்தால் ‘வ்’ என்னும் உடம்படு மெய்யை யும், இடைச்சொல்லாக இருந்தால் ‘ய்’ என்னும் உடம்படு மெய்யையும் பெற்று வரும்”20 எனக் கூறி,

தே+ஆரம் = தேவாரம் (பெயர்ச்சொல்)

உப்பே+இல்லை = உப்பேயில்லை (இடைச்சொல்)

எனுங் காட்டுகளை வே.சங்கர் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரபிலக்கணிகளும் உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் உடம்படுமெய்களைப் பற்றிய கருத்துகளை ஆழ்ந்தாய்ந்து கூறியிருக்க, “அமெரிக்க மாணவர் மூவர் உடம்படுமெய் பற்றிய பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஊரையடைந்தேன்; வரவுடம்பட்டான்; பொருளையிங்கெல்லாம் கொட்டினான் என்னும் இடங்களில் உடம்படுமெய் வருவது செயற்கை அல்லவா? ஊரை அடைந்தேன் வர உடம்பட்டான் என்று இயல்பாக எழுதலாமே என்றனர். அவர்களின் சிந்தனை சரியென்றே தோன்றுகிறது. உடம்படுமெய்யை ஒரு தொகுதிக்கு உள்ளாக அமைத்துக்கொள்வது நல்லது. கிளி+ஐ  கிளியை என்றும் சே+அடி   சேவடி என்றும் நிறுத்த சொல்லின் உள்ளே நிறுத்திக்கொள்வது நன்று. அதனால்தான் காப்பியர் இவற்றைப் பிற பகுதிகளில் பேசாமல், புணர்மொழி இயலில் பேசுகிறார்”21 என்று தே.ஆண்டியப்பனும் “உடம்படுமெய்யைப் பொறுத்தவரையில் விட்டிசையைத் தடுக்கும் நோக்குடன் யகர, வகர உடம்படுமெய்களை உருவாக்க வேண்டியதில்லை.

மணி+அழகு = மணிஅழகு

மலை+அழகு = மலைஅழகு

பூ+அழகு    = பூ அழகு

என உயிரொலி இரண்டையும் விட்டிசைத்தால் ஒலிக்கும் முயற்சியில் கடினம் இருப்பதாகத் தெரியவில்லை”22 என வெ.இசக்கிமுத்துவும் உடம்படுமெய்கள் (பெரும்பாலும்) தேவையில்லை எனும் கருத்துப்படக்  கூறியுள்ளனர். ஆனால், உடம்படுமெய்களைப் பெறும்/பெறாச் சொற்கள்  நுட்பமான புணர்ச்சி வேறுபாடு, பொருள் வேறுபாடுகளைக் கொண்டிருப்பதனாலும்  சொற்கள் விட்டிசைத்தால் ஒரு பொருளையும் தொடர்ந்திசைத்தால் பிறிதொரு பொருளையும் தருவதனாலும் புணர்ச்சியிலக்கணம் கண்டிப்பாகத் தேவை. எனவே, இவர்களின் கருத்து பொருத்தமானதன்று.

முடிவுரை

உடம்படுமெய்களைப் பற்றிய இக்கட்டுரையில், மரபிலக்கணிகள் உயிரீற்று-உயிர்முதற் சொற்களை இணைக்க வரும் அரையுயிர்களான ய், வ் ஆகியவற்றை மட்டுமே உடம்படுமெய்களெனக் கொண்டனர்.  புலவன் / கவிஞன் தொடைநயம் நோக்கி அல்லது இன்னோசை கருதி அமைக்கும் சொற்களில் இயல்பாக அமையும் பிறவெழுத்துகளையோ, மெய்யீற்றின்முன் வருவனவற்றையோ அவ்வாறு (உடம்படுமெய்களென) கொள்ளவில்லை. எனவே, அத்தகைய எழுத்துகளைக் (ம்,ர்,ன்,ந்…) காட்டி அவையும் உடம்படுமெய்களே என வாதிடுவது சற்றும் பொருந்தாது. ஆதலால், அவற்றை உடம்படுமெய்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல ‘எழுத்துப்பேறு’ என்றோ, வீரகத்தி மொழிந்துள்ளதைப் போன்று ‘உடம்படு ஒலிகள்’ என்றோ வழங்குவது சாலப் பொருந்தும். சொற்களை விட்டிசைக்காமல்  ஒலிக்கவும் சரியான பொருளைக் குறிக்கவும் இன்றைய நிலையிலும் உடம்படுமெய்கள் கண்டிப்பாகத் தேவை போன்ற கருத்துகள் ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்புகள்

 1. வெள்ளைவாரணன்,க., 1978, தொல்காப்பியம் (உரை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ப.14.
 2. பொன்னையா, மோசசு., 1976, தமிழ் இலக்கணத் தெளிவு, அருள்நாதர் பதிப்பகம், ப.12.
 3. இன்னாசி, சூ., 1984, இலக்கணச் சிந்தனைகள், வளனருள் வெளியீடு, பக். 25 – 26.
 4. சீனிவாசனார், ச., (ப.ஆ.), 2004, நேமிநாதம் உரையுடன், ப.43.
 5. சுந்தரமூர்த்தி, கு., (ப.ஆ.), 1972, முத்துவீரியம், கழக வெளியீடு, ப.53.
 6. கிருட்டிணமூர்த்தி, சா., இளம்பூரணர் உரை – ஓர் ஆய்வு – ஆய்வேடு, அண்ணாமலைப்                   பல்கலைக்கழகம், ப.127.
 7. ஆண்டியப்பன், தே., 1976, காப்பியர் நெறி (எழுத்தியல்), வெற்றிவேல் பிரசுரம், ப.56.
 8. வேங்கடராமன், கா.கோ., சனவரி – பிப்ரவரி, 1970, ‘தொல்காப்பியத்தில் உயிரிணைகள்’,  ‘தமிழ்ப்பொழில்’, ப.334.
 9. சுந்தரமுதலியார், இலக்கணக் கோவை, சுகோதயம் புத்தக சாலை, நூ.11.
 10. சுப்பிரமணியம், வி.ஐ., (ப.ஆ.), 1978, திராவிட இலக்கணக் கொள்கை, அன்பு நூலகம், ப.27.
 11. இன்னாசி, சூ., 1973, எழுத்தியல், தமிழரசன் பதிப்பகம், ப.124.
 12. வரதராசன், மு., 2011, மொழிநூல், பாரி நிலையம், ப.59.
 13. சண்முகதாஸ், அ., 2008, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ப.7.
 14. சுப்பிரமணியம்(ப.ஆ.), வி.ஐ., 1978, திராவிட இலக்கணக் கொள்கை, அன்பு நூலகம்,ப.29.
 15. அரவிந்தன், மு.வை., 1977, மொழியியல் சிந்தனைகள், ப.17.
 16. ஞானப்பிரகாசர்,S.,2008,தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  ப.55.
 17. வரதராசன், மு., 2011, மொழிநூல், பாரி நிலையம், பக்.59 – 60.
 18. அழகேசன், சு., (ப.ஆ.), 2002 , ‘உடம்படுமெய்’, இலக்கண ஆய்வு: தொல்காப்பிய உரைகள், இரண்டாம் கருத்தரங்கக் கட்டுரைகள், பக்.290 – 293.
 19. நடராசா, F.X.C., மார்ச் – ஏப்ரல், 1959, ‘உடம்படுமெய்’, தமிழ்ப்பொழில், ப.365.
 20. சங்கர், வே., 2006, இயல் தமிழ் இலக்கணம், நன்மொழி பதிப்பகம், ப.189.
 21. ஆண்டியப்பன், தே., 1976, காப்பியர் நெறி (எழுத்தியல்), வெற்றிவேல் பிரசுரம், ப.56.
 22. இசக்கிமுத்து, வெ., 1982 , ‘உடம்படுமெய்’, ஆய்வுக்கோவை 14 – 4, பக். 25 – 29.

பின்னிணைப்பு

(ஆய்விற்குதவிய இலக்கண நூற்பாக்கள்)

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்.           (தொல். இளம்:141)

மூன்றொடுநான்கொன்ப தாமுயிர்ப்பின்னுயிர் முந்தினடு
வான்றயகாரம்வந் தாகமமாகுமல் லாவுயிருக்
கேன்றவகார மெட்டேற்குமிரண்டும் …                      (வீரசோழியம்:13)

மூன்றுநான்கு ஒன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற உயிர்ப்பின்னும் ஆவிவரின் – தோன்றும்
யகர வகரம் இறுதியிடத்து ஓரோர்
மகரங் கெடவகர மாம்.                                                  (நேமிநாதம்:13)

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்இருமையும்
உயிர்வரின் உடம்படு மெய் என்றாகும்.                      (நன்னூல்:162)

இ ஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் இருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென்று ஆதல்
வரைவின்று என்மனார் மதிக்குங் காலே.                     (இலக்கண விளக்கம்:68)

முதல் ஈற்று உயிரும் மொழியே சேர்புளி
இஈ எஐ ஈறு இயையும் யவ்வே
மற்றை உயிர்க் கீழ் வகரம் புணரும்.                            (தொன்னூல் விளக்கம்:20)

இஈ ஐவழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு  மேமுன்னிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.                      (முத்துவீரியம்:183)

கோமா முன்வரின் யகரமுங் குதிக்கும்.                        (முத்துவீரியம்:184)

இருபால் விகுதிகள் சுட்டில் அகரம்
ஒற்றின்றி வகரமாய் அணைதலும் வாய்பா(டு)
அவன்,இவன் எவள்எனள் உதாரணம் ஆமே.             (அறுவகை இலக்கணம்:116)

ஆஊ ஓஎனும் எழுத்தொரு மூன்றும்
பின்வரும் உயிர்களை வகரஒற் றுட்புகச்
செய்வன உதாரணம் ஆவாளி எனலும்
ஊவிட்டான் எனலும் ஓவென்றான் எனலுமே.            (அறுவகை இலக்கணம்:117)

ஈஏ எனும்இரு பொறியும் பின்வரும்
உயிர்களை யகர வருக்கம் ஆக்கும்.
ஈயல்ல எனலும் ஏயிருளா எனலும்
தகுமுதா ரணமெனச் சாற்றுதல் இயல்பே.                   (அறுவகை இலக்கணம்:118)

ஐஒள இரண்டும் அணைதரும் உயிர்கட்
செய்வ தொலியீற்றிற் றிகழ நின்றன
ஆயினும் ஐயனும் ஒளவையும் உதாரணம்.                 (அறுவகை இலக்கணம்:119)

ஒகரத் துடன் உயிர் மிகைபட ஒன்றா
ஒன்றினும் அகரத் தியல்பே ஒளிர்தரும்
ஒவ்வெழுத் தெனும்சொல் உதாரணம் ஆமே.              (அறுவகை இலக்கணம்:120)

உயிரோ டுயிர்வந் தொன்றுங்காலை
இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும்
ஒருமை யுறுஞ்சொலில் உடன்படு மெய்யாம்.              (தமிழ் நூல்:201)

இ, ஈ, ஐ பெறும் அகரம்
அ ஆ உ ஊ ஒ ஓ
ஒள வெலாம் பெற்றிடும் வகரம்
ஏபெறும் சில்லிடம் யகரம்.
வ-வரும் சில்லிடம் த-முன்.
இவ்வீர் வ் வும் ய் யும்
உடம்படுமெய்யென்றாமே.
உடம்பெனல் மெய்யாம் மெய்யை அடுமெய்
உடம்படுமெய் யென்றாமே தமிழில்.                             (இலகு தமிழ் ஐந்திலக்கணம்:340)

உயிர்வரின் இஈ ஐவழி யவ்வும்
ஏனைமுன் வவ்வும் ஏமுனவை விருமையும்
உடம்படு மெய்யெனும் உருபாம் மன்னே.                   (தென்னூல்–எழுத்துப்படலம்:228)

இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் இருமையும்
வருவுயிர் இணையின் உடம்படு மெய்யே.                   (தமிழ்க் காப்பு இயம்:07)

===================================================

ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:

தமிழில் உடம்படுமெய்களாகக் கொள்ளத்தக்கவை, அவை வருமிடங்கள், அவற்றைப் பற்றிய மரபிலக்கணிகள் மற்றும் அறிஞர்களின் கருத்துகள், உலகமொழிகள் சிலவற்றில் வழங்கும் உடம்படுமெய்கள், இன்றைய நிலையிலும் அவை தேவைப்படுவதற்கான கரணியம்(காரணம்) ஆகியவற்றை விரிவாக ஆராய்கின்றது கட்டுரை. கட்டுரையின் மையக்கருத்திற்கேற்றவாறு தரவுகளைச் சேகரித்து உடம்படுமெய்யினைக் கட்டுரையாளர் விளக்குகின்ற திறம் பாராட்டத்தக்கது.

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் உள்ளிட்ட மரபிலக்கண நூல்கள், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நூல், இலகு தமிழ் ஐந்திலக்கணம், தென்னூல் எழுத்துப்படலம்-சொற்படலம், தமிழ்க் காப்பு இயம் முதலிய இலக்கண நூல்கள், இலக்கண உரைகள், ஆய்வாளர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் முறையாகத் தொகுத்து உடம்படுமெய்மெயினை எளியமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் நிலையில் கட்டுரையாளர் விளக்கியிருக்கின்றார். உடம்படுமெய் குறித்த இலக்கண நூற்பாக்களைத் தொகுத்து தந்திருப்பதும் நன்று.

===================================================

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) உடம்படுமெய்கள்

 1. என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் தங்கள் இதழில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!. தொடரட்டும் உம் தமிழ்ப் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.