வித்யாசாகர்
ண்சோறு தின்ற நாட்களது..

சனி ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையெனில்
அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும்

‘வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும்

ஒளியும் ஒலியும் மாற்றி விட்டு
வேறு சானலில் –
வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று;

தொலைக்காட்சியை நிறுத்தி விட்டால்
திருடன் போலீஸ் விளையாட
பிளாட் போடாத இடங்கள் நிறைய இருந்தன;

தும்பி பிடித்துத் தலை திருகிப் போடுவதால்
ஒரு உயிர் போகிறதே என்று கூட
அத்தனை அறிந்திருக்காத நாட்களது;

ஓடும் தெருவில் கோவில் இருந்தால்
உள்ளே சாமிதான் இருக்கிறதென்று
முழுமையாக நம்பிய மனது அது;

மறைத்து வைக்கத் தெரியாத பொருட்களை
கொடுக்க மனமின்றி அழுத
அந்த நாட்கள்’ அந்த தலைதிருகிப் போட்ட
தும்பிபோல திரும்பிக் கிடைக்காமலே போனது; வருத்தம் தான்!

படிக்கும் புத்தகத்திற்கு நடுவே அதிரசமும்
சட்டைத் துவைக்கையில்
சட்டைப் பையினுள் ஒரு துண்டு முறுக்கோ இல்லாமலும்
நாட்கள் அப்போது போனதேயில்லை;

ஒரு காகிதம் கிழித்துக் கொடுத்து
வாங்கிக் குடித்த ஒரு மூடி தண்ணீர்
அன்று படித்த பாடத்தைவிட அதிகமாக இன்றும் நினைவிலுண்டு;

ஒரு கையில் தம்பியும் இன்னொரு கையில்
தங்கையும், தலையில் பையும் மாட்டிக் கொண்டு
ஓடிப்போய் வரிசையில் நின்று
இரண்டாம் மூன்றாம் வரியிலிருந்து பாடிய
தேசியகீதம் – தவறென்றெல்லாம் இன்றுவரை வருந்தவில்லை;

நாலு மணிக்குப் பள்ளி விட்டதும் 
ஓடிவந்து பையை வீட்டில் எறிந்து விட்டு
தெருவின் நீளத்திற்கும் வெவ்வேறு விளையாட்டை இறைத்து
காலெல்லாம்  மண்ணோடு வீட்டிற்கு வந்து கால் கழுவி
சாப்பிடத் தட்டெடுத்துக் கொண்டு அமர்கையில்
வயிற்றில் இருந்த பசியும்
மனதில் இருந்த நிறைவும் தொலைந்து
அப்பாவாகி தாத்தாவாகி என்னதான் வளர்ந்தாலும்

அந்த மண்சோறு தின்ற நாட்கள்; நாட்கள் தான்!!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *