எங்கே நிம்மதி?
ராதா விஸ்வநாதன்
தெரியாமல் சொல்வதை விட
தெரிந்து சொல்லும் பொய்
நிம்மதிக்குச் சாவு மணி
உண்மைக்குச் சவப்பெட்டி
தயாராகும் போது
தொங்கி விடுகிறது
நிம்மதி தூக்கில்…
பொய்களின் பூகம்ப அதிர்வில்
புதைந்து விடுகிறது நிம்மதி
செய்நன்றி மறந்த மறுகணம்
செத்து விடுகிறது நிம்மதி
நிம்மதியின்
நிழல் கூட நிற்பதில்லை
பிறர் மதிக்க நாம்
வாழ நினைத்தால்…
ஆசைகள்
பேராசையாக வளரும்போது
நிராசையாகி விடுகிறது
நம் நிம்மதியும்
தானத்திலும் கூட
நிதானம் தவறினால்
மயான வாழ்வுதான்
நிம்மதிக்கு
உழைக்க மறுத்து
உண்டு வாழ நினைக்கும் போது
உயிர்கள் தவிக்கும்
நிம்மதிக்காக
Photo courtesy: https://www.maxpixels.net