திருச்சி புலவர் இராமமூர்த்தி

மாதுடன் கூடி வைகி மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி

                                                                                                                            57(329)

இப்பாடலில் இறைவன் , சுந்தரர், பரவையார் தம் செயல்களின் சித்தாந்தச் சார்புடன் கூடிய விளக்கம் புலப்படுகின்றது. எல்லாக் காதலர்களும் குளம், சோலை, செய்குன்று ஆகிய இடங்களில் தம் காதல் அனுபவங்களை பெறுவர். இங்கும் சுந்தரர் மாளிகையின் அருகில் உள்ள சோலையில், பரவையாருடன் கூடி இருந்தார். அங்கே மொட்டுக்கள் மலர்ந்து நறுமணம் வீசின. அங்கே ஒரு குளக்கரையில் அமைந்த செய்குன்றின் மேல் ஓர் உயர்ந்த இடத்தில் உள்ள குளிர்ந்த முத்துப் பந்தலின் கீழே ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பெருங்காயப் பாண்டம் அப்பொருள் நீக்கிய போதும் அதன் மணம் நீங்காதது போலச் சுந்தரருக்கு இறையுணர்வு பூத்தது. சுந்தரர்தம் காதல் மயக்கத்திலிருந்து மனந்திரும்பி இறைவனின் பூங்கோயிலை அடைந்து வழிபாடு செய்ய விரும்பினார். ஆகவே அந்த இருக்கையிலிருந்து எழுந்தார்.

வாவி – செய்குன்று முதலிய இப்பொருள்கள், கூடிய நாயகன் நாயகிகள் அனுபவிக்கும் உலக அனுபவப் பொருள்களாம். மேலும் பரவையார் (கமலினியார்), சங்கிலியார் (அநிந்திதையார்) இவர்களின் பொருட்டே சுந்தரமூர்த்திகள் ஆணைவழி அவதரித்து அவர்களின் வழியே வேட்கை தீர மணக் கோலத்துடன் மண்மேல் விளையாடி வருகின்றார். ஆதலானும் இவை இவரது அனுபவங்களுக்கு மிக உரியவாயின. தவிசு செழுமையாய் இருந்தது; அது சீதளத் தாளப் பந்தர்க்கீழ் அமைந்திருந்தது; மேற்பந்தரும் கீழ்த் தவிசும் ஒரு தெற்றியில் அமைக்கப்பெற்றன; அத்தெற்றி ஒரு செய்குன்றின் புடையிருந்தது; செய்குன்று வாவியின் மாடு அமைந்தது; வாவி சோலையினிடை இருந்தது; சோலைதானும் மாளிகை மருங்கு நின்றது

எந்த மகனும் விட்டு நீங்கலாகாத உலக இன்பப் பொருள்களாகிய சோலை – வாவி -செய்குன்று – தவிசு இவற்றின் இடையேயும் பூங்கோயில் சென்று கும்பிடும் விருப்பமே நம்பிகளுக்கு மிக்கு எழுந்தது என்று கூறியவதனால்“ பிரான் சரணார விந்தமலர் சிந்தையினும் சென்னியினும் மலர் வித்து………கூடி விளையாடிச் செல்கின்றார்“ என்று முன் பாட்டில் கூறியதன் உண்மை விளக்கப்பெற்றது.

சித்தாந்த விளக்கம்:

எல்லார் உயிர்க்கும் இச்சை, அறிவு, செயல் என்ற மூன்று சத்திகள் உண்டு. இவை மூன்றும் வேலை செய்கின்ற மட்டிலே மேல் நிகழ்ச்சிகள் நிகழும். பொருள்களை முதலில் நிருவிகற்பக் காட்சியாகக் கண்ட உயிருக்கு அதிலே புத்தி கலந்து தொழில் செய்தபோது சவிகற்பக் காட்சி நிகழும். அதன்பின் அதில் ஞானம் உண்டாம். பின் அதில் இச்சை நிகழும். இங்கு நம்பிகளது அறிவிச்சை செயல்கள் அவ்வாறு தொடர்ந்து நிகழாது பரவையார் சார்வும், சோலை வாவி முதலிய பொருள்களும், கண்டபோது அவற்றின் சார்பினாலே முன்னை அறிவும் இச்சையும் செயலுமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கும்பிடும் விருப்பை எழுப்பப் பின்னர்த் திருத்தொண்டத் தொகை அருள ஏதுவாயினமை குறிக்கத்தக்கது.

உலகத்தில் நிற்கும்போதே சிவஞானிகளின் அறிவு இச்சை செயல்கள் உலகச் சார்பிலே செல்லாது சிவச்சார்பிலே செல்வனவாம். அவர்கள் உலகத்தைப் பாரார். அவர்களதுகண் விழித்தே யிருக்குமாயினும் உலகத்தை நோக்காது; உண்முகமாகவே நோக்கி நிற்றலால் உலகத்தார்க்குக் குருடாகவே காணும். “விழித்த கண்குரு டாய்த்திரி வீரரும் பலரால்“ என்பது இவர்களது இயல்பு. உயிர்களுக்கு உடம்புகள் அவ்வவற்றின் கருமத்திற்கீடாய் வரும்; அவ்வுடம்புகளே மேலும் கருமத்திற்குக் காரணமாயும் இருக்கும்.

ஆனால் சிவஞானிகளுக்கோ எனில் பிராரத்த வினையைத் தொலைப்பதன் பொருட்டு மட்டுமே செயல் செய்யக் காரணமாக உடம்புகள் பயன்படும். அவை மேல் விளைவுக்கு வித்தாகா. சூரிய வெளிச்சத்திலே விளக்கு ஏற்றிச் செய்யப்படும் கிரியைகளில் விளக்கின் காரியம் பயனற்றொழியச் சூரிய ஒளியினுதவி கொண்டே அவை செய்யப்படுவது போலச் சிவாஞ்ஞையாகிய அருள்நெறியிலே அதன் முன்னிலையிற் செய்யப்படும் அந்தப் பிராரத்த அநுபவம் செயலற்று நிற்கும். இங்கு நம்பிகள் செயலும் அவ்வாறே காண்க.

மேலும் “அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே“ என்று சிவஞானபோதம் பத்தாஞ்சூத்திரம் வகுத்தும், அதன் கீழ் “அவனருளால் அல்ல தொன்றையுஞ் செய்யா னாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா வாகலான்“ என்று அருளியதுங் காண்க.

பசுபாசங்களின் இயல்புகளை உள்ளவாறுணர்ந்து, செய்வனவெல்லாம் அவனருள் வழிநின்று செய்யப்படும் செயலாகக் கண்டுகொண்டிருப்பாராயின், அவ்விறைப்பணியாகிய அடிமைத் திறமுடையார் எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவை அவர்க்குப் பந்தமாதலில்லை;

பிராரத்தவினையுந் தன்னைக் கூட்டுவிக்கும் முதலவன் சந்நிதியில் உடலூழாய் ஒழிவதன்றி, ஏனையோர்க்குப் போல அவர்க்கு ஆதலில்லை யாகலான், பெருங்காயமிட்டு எடுத்தொழிந்த கலத்திலே அதன் வாசனை மங்கிப்போய் மெலிதாய் நாறுமாறுபோல, நானவ னென்றெண்ணிச் சிவோகம்பாவனை செய்தறியும் ஞானிக்குப் பிராரத்த வினையும் அதற்கிடமாகிய உடம்பு முதலிய மாயேயமும் வாசனை மாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்குமாயினும், அவ்வழி யேறுவதாகிய ஆகாமியவினை பிறவிக்கு வித்தாய் நிலைபெற்று முறுகுதலின்றிக் கெட்டொழியும். ஒளி இருளைத் துரக்குமாறு போல அவ்வுணர்வு ஆகாமியத்தைத் துரக்கும் என்று இக்கருத்தை விரித்து மாபாடியத்திலே எமது மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தருளியவற்றையுங் காண்க. விரிவு அங்குக் கண்டு கொள்க.

இதனைச் சேக்கிழார், மிகவும் நுட்பமாகப் புலப்படுத்த ,

மாதுடன் கூடி வைகி மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி

என்று பாடினார். மேலும் ஒரு விளக்கம் சி கே எஸ் உரையில் உள்ளது கீழே காண்க.

விளக்கம்:

‘வெளிமுகம் – உண்முகம்’ என்ற இருவகை நிலைகளையும் குறிப்பதற்காகப் “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்“ என்று மிக அழகுபெற ஒரே அடியிற் குறித்த ஆசிரியர், முன்பாட்டிலே அவற்றைப் பிரித்து “மலர்வித்து….. விளையாடிச் செல்கின்றார்“ என விரித்தனர். அதன் விளைவை இப்பாட்டிலே “கூட வைகிச்செழுந்தவிசிழிந்து கும்பிடும் விருப்பால் நம்பி“ என்று காட்டி, விளையாட்டு விளையாட்டின் மட்டிலே நிற்க, விருப்பம் பெருமானிடத்தே பதிந்து கிடந்ததை விரித்தோதினார்.

சரணாரவிந்தமலர் சிந்தையிலும் சென்னியிலும் மலர்வித்ததனால் கும்பிடும் விருப்பம் நிகழ்ந்தது. கும்பிடுதல் நனவில் நிகழ்வது. மலர்வித்தல் அதனோடு கனவு முதலிய நிலைகளினும் நிகழ்வது. சென்னி ஆயிரம்இதழுடையதாய் மேனோக்கி மலர்ந்த தாமரை போன்றதாகவும், சிந்தை -குவிந்த தாமரை போன்றதாகவும் கூறுவர். இது பற்றியன்றே பட்டினத்தடிகள் முதலிய பெருஞானிகளும் திருக்கோயில் வாயில் காத்திருந்தனர் என்க.

ஆகவே,

‘’எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் ,
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே ‘’

என்றதற்கேற்ப சுந்தரர் மனத்தில் எப்போதும் சிவ சிந்தனையே இருந்தது என்பதும்,அவர் பன்னாளும் யோகமே பயின்றார் என்பதும், சிவ சிந்தனை இருந்தால் நாமும் அந்நிலையை எய்தலாம் என்ற ஊக்கமும் இப்பாடலின் தொகு பொருளாகி நயத்துடன் விளங்குகிறது.

(தொடரும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *