குறளின் கதிர்களாய்…(288)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்… (288)
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
–திருக்குறள் –524 (சுற்றந்தழால்)
புதுக் கவிதையில்…
செல்வம் பெற்றதால்
பெற்ற பயனே,
சுற்றத்தார் நம்மைச்
சுற்றியிருக்கும் வகையில்
அவர்களைத்
தழுவி ஒழுகுதலே…!
குறும்பாவில்…
உறவினர் உடனிருக்கும் வகையிலவர்க்கு
உதவி ஒழுகுதலே ஒருவன் சேர்த்த
செல்வத்தால் பெற்ற பயனே…!
மரபுக் கவிதையில்…
அல்லும் பகலும் பாடுபட்டே
அளவ திலாதே சேர்த்திடும்
செல்வ மதனால் வருகின்ற
செப்பிடத் தக்க பயனொன்றே,
இல்ல மதிலே சுற்றத்தார்
இருந்தே நம்மைப் பிரியாமல்
நல்ல உறவாய்ச் சேர்ந்திருக்க
நன்மை யவர்க்குச் செய்வதுவே…!
லிமரைக்கூ..
செல்வமது சேர்த்தோமெங்கும் தேடி,
செல்வமதால் பெறுபயனே சுற்றத்தார்குச் செலவிடலே
சேர்ந்திருக்க அவர்நம்முடன் கூடி…!
கிராமிய பாணியில்…
ஒண்ணாயிரு ஒண்ணாயிரு
ஒறவுகளேட ஒண்ணாயிரு,
ஒருத்தருக்கொருத்தர் ஒதவிசெய்து
ஒறவுகளோட ஒண்ணாயிரு..
ஒடித்தேடி சம்பாதிச்ச
செல்வத்தால
நமக்குக் கெடச்ச பயனே,
நம்ம ஒறவுக்காரங்கயெல்லாம்
பிரியாம
நம்மச்சுத்தி இருக்கிறபடி
செய்யிறதுதானே..
அதால
ஒண்ணாயிரு ஒண்ணாயிரு
ஒறவுகளேட ஒண்ணாயிரு,
ஒருத்தருக்கொருத்தர் ஒதவிசெய்து
ஒறவுகளோட ஒண்ணாயிரு…!