படக்கவிதைப் போட்டி – 246
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முகம்மது ரஃபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
அசைந்தாடும் நதிநீரை
அணைத்தப்படி கட்டிடங்கள்
அழகழகாய் தெரிகிறதே
அதில் நம் மனமும் லயிக்கிறதே
இடைவிடாது ஒடுகின்ற
இந்நதி நீரீன் பளபளப்பு
இறைவன் தந்த பரிசளிப்பு
நம்மிரு கண்ணில் ஜொலிஜொலிப்பு
மரங்களும் தான் தெரிகிறதே
மறைக்கும் கட்டிடங்கள் பின்புறத்தில்
சில்லென்று காற்றடிக்க
சீறியெழ சிரிக்கிறதே
கதிரவனின் ஒளிவீச்சால்
தங்கக்குவியலாய் இந்நதிநீரோ
அதனுடே நீலநிறம்
அதற்குத்தான் முத்தாய்ப்போ!
படகுகளும் ஒரம் நின்று
நதியைத்தான் ரசிக்கிறதோ
ஆலயங்கள் கரை மீது
அமைதியைத்தான் தருகிறதோ!
அழகென்று எதைச் சொல்ல
அற்புதப் படப்பதிவில்
அருமையான காட்சியே என்று
அறுதியிட்டுக் கூறுகின்றேன்
இவண்
சுதா மாதவன்
மனிதனுக்குப் பாடம்…
ஆற்றல் மிகுந்த அலைகடலே
அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
ஏற்றம் வந்தால் மனிதனவன்
ஏதும் தெரியா தாடுகின்றான்,
கூற்றின் வரவு தெரியாதே
குற்றம் பலவும் செய்கின்றான்,
நேற்றுச் செய்தோர் இன்றில்லை
நெறியாம் பாடம் சொல்வாயே…!
செண்பக ஜெகதீசன்…
பஞ்சபூதங்களில்
நிலமும் நீரும்
வீசும் காற்றும் வானும்
வந்து நின்று போஸ் கொடுக்க
தீமை விலகி நன்மை பெறுக
தீ மட்டும் விலகி சென்றதோ
நித்திரையில் கூட
யாத்திரை என்றதும்
நினைவில் வரும்…. காசி
கங்கையில் தினம்
கறைகள் நீராட
புனிதமாய் மாறி
புண்ணிய ஸ்தலமானதோ
குற்றங்கள் பெருகி பாவங்கள் நிறைந்திட
புனித நீராடி
பாவங்களை துறந்து பரிசுத்தம் ஆகும்
நம்பிக்கையை
பலர் நெஞ்சில் விதைத்தவன்
தன்னம்பிக்கை விதைக்க மறந்ததென்ன
எதிர்காலம் பற்றி
சிந்தையேதும் இன்றியே
பொருள் தேடி ஓடியே
இளமை முழுதும் கழியுமே
வந்து போக மனமின்றி
தங்கிவிட்ட சக்தி யாவும்
ஒன்று சேர்ந்து உருவான ஊரு இது
முதுமை வந்து முத்தமிட
அமைதி தேடி அலைந்திடும்
மனங்கள் அனைத்திற்கும்
புகலிடமாய் அமைந்திடும்
காசி எனும் இத்தலமே……
புலன்களால் புழுதியேறி
அடர்ந்திருந்த அழுக்காற்றுக் கறையை
படித்துறையிலே துலக்கி,
சினம் தொலைத்து; மோகம் களைந்து,
பக்தியெனும் கடலில் மூழ்கி,
முக்தியெனும் நல்முத்தெடுக்க,
தமது முறைக்காக
வரிசையில் காத்திருக்கும்
கட்டிடங்கள்.
– சக்திப்ரபா
ஜீவநதி
காட்சிகள் மாறினாலும்
காலங்கள் மாறினாலும்
மாட்சிமையை நிலத்து நிற்க
மன அழுக்கை அடித்து ஓட்டு …
சலசலத்து
பொங்கியோடி
வையகத்தின் வளம் சேர்க்க
தினம் தினம் புதிப்பித்துக் கொள்…
ஓரிடத்தில் ஒடுங்கி
பழமைச் சேர்ந்து
பாசிபடிந்து
குட்டையாய் தேங்கிடாமல்
ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு…
வல்லென மனிதன் வனைந்த கட்டிடங்கள் வானம் தொட. முனைந்து நிற்கும் இவ்வகையைப் பார்க்கையிலே…. உள்ளூர ஓர் உணர்வெழுகின்றது.
இக் கட்டிடக் காட்சியெல்லாம் கரையிலே நிலைத்திருத்தல்,
கண்ணியம் காக்கும் கடல் கரை தாண்டா வரையிலேயே………….