சென்றதினி மீளாது
பாஸ்கர் சேஷாத்ரி
நீங்கள் தமிழுக்குத் தாலாட்டு என்றீர்கள்
கைகள் இன்னும் ஆட்டிக்கொண்டு இருக்கின்றன.
இந்திக்கு என்றும் வாலாட்டு என்றீர்கள்
வால் வளர்ந்து முகமே மூடிப்போனது.
சேட்டுக்கடையில் வாங்காதே என்றுரைத்தீர்
அண்ணாச்சிக்கடையே ஆஸ்தானமாய்ப் போனது.
பல்லுடைத்துப் பார் பார்ப்பானை என்றே கூவினீர்
நாங்கள் இங்கு பொக்கை வாயுடன் நிற்கிறோம்.
மேல்துணியில் கைதட்டிக் குதித்த போது
கொடியேற்ற நீங்கள் புழுதி பறக்க வந்தீர்கள்.
கண்களில் விழுந்த மண்ணை விலக்கும் முன்
கும்பலாய் வந்த ப்ளஷரில் ஏறிப் பறந்தீர்கள்.
பீடி இழுத்த உடலுக்கு, கொடியே இன்று பெருந்துணி
கோஷமிட்டே வருஷமெல்லாம் கரைந்தே போயின
கட்டாந்தரையில் இன்றும் கிடக்கிறோம் நாங்கள்
கட்டிபோட்ட பேச்சால் கனவிழந்து நிற்கிறோம்
மல்லாக்கக் கிடக்கும் எமைக் கட்டித் தழுவ வேண்டாம்
கொடியே கொண்டாரும்-உடலே சுருங்கிப் போச்சு
நிர்வாணம் நாங்கள் – கொடியாவது மறைக்கட்டும்.