வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

சக்தி சக்திதாசன்
“இங்கிலாந்து”, “லண்டன்”, “ஐக்கிய இராச்சியம்” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஐக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே!
இராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜாவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலக நாடுகளில், முன்னணியில் இருப்பது ஐக்கிய இராச்சியம் என்றால் அது மிகையில்லை.
எனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை, கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வரும் நாடுகளில் ஐக்கிய இராச்சியம் முதன்மையானது என்பதுவே.
இந்த இராஜ குடும்பத்தினைப் பராமரிப்பதனால் நாட்டிற்கென்ன நன்மை எனும் கேள்வி எழலாம். 2017ஆம் ஆண்டு ஒரு நிதியறிக்கை சமர்ப்பிக்கும் ஸ்தாபனத்தின் கணிப்புப்படி இராஜ குடும்பத்தினால் சுமார் 330 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் உல்லாசப் பிரயாணிகளின் வரவினாலும் மேலும் சுமார் 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் இராஜ குடும்பத்தினரின் தாக்கத்தினால் கிடைக்கும் வர்த்தக உடன்படிக்கைகளினாலும் நாட்டின் நிதிக் களஞ்சியத்துக்குக் கிடைக்கிறது என்கிறது.
அப்படிப் பார்க்கையில் இராஜ குடும்பத்தினரால் நாட்டிற்கு நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த இராஜ குடும்பத்தைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறது.
இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகம் அபார வேகத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய ஒரு வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இத்தனை செலவு செய்து இராஜ குடும்பத்தைப் பேணுவது அவசியமா? எனும் கேள்வி முடியாட்சிக்கு எதிரானவர்களிடம் இருந்து பலமுனைகளில் எழுவதையும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள சலசலப்பு எங்கே இதுதான் இராஜ குடும்பத்தின் சிதைவுக்கு வழிகோலிவிடுமோ என்று பல இராஜ குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் சம்பிரதாயத் தலைவியாக இருக்கும் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் திடகாத்திரமான வழிநடத்துதலையும், உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது.
நான்கு குழந்தைகளுக்குத் தாயாரான எலிசபெத் மகாராணியாரின் மூத்த புதல்வரும் மகாராணிக்கு அடுத்து முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸ் 1981ஆம் ஆண்டு டயானா அவர்களை மணம் முடித்தார். அதேபோல மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ 1986ஆம் ஆண்டு சாரா அவர்களை மணம் முடித்தார்.
1992ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியாரின் பிரச்சினைகள் பூதாகாரமாகின. 1992 மார்ச் மாதம் மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான ஆண்ட்ரூவும், அவரது மனைவியும் தாம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். அதே வருடம் டிசம்பர் மாதம் மகாராணியாரின் மூத்த புதல்வரும் முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவியும் சமரசமாகப் பிரிந்து செல்வதாக அன்றைய பிரதமர் டோனி பிளேயர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர்,
1993ஆம் ஆண்டு நாட்டிற்கான புதுவருடச் செய்தி அளித்த எலிசபெத் மகாராணியார், நடந்து முடிந்த 1992ஆம் ஆண்டை “Annus Horriblis“ என்று வருணித்தார். லத்தீன் மொழியில் மிகவும் பாரதூரமான வருடம் என்று குறிப்பதாகும். அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதலில் இளவரசர் ஆண்ட்ரூவும், அடுத்து இளவரசர் சார்ல்ஸ்ம் தமது மனைவியரை விவாகரத்து செய்தார்கள்.
இளவரசர் சார்ல்ஸின் மனைவியான லேடி டயானா விவாகரத்தின் பின்னாலும் ஊடகங்களின் பரிசோதனைக்கு உள்ளானார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களில் அவதானிக்கப்பட்டு, அதன் தாக்கங்களை இராஜ குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியதாகியது.
இவையனைத்தையும் தனக்கேயுரிய மனோதைரியத்துடன் எதிர்கொண்டார் எலிசபெத் மகாராணியார். விவாகரத்து பெற்ற டயானா, காதல் விவகாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை மகாராணியார் தனது குடும்பத்தின் சார்பில் எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது.
பாரிஸ் நகரத்தில் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த டயானா அவர்களின் மீது வீசிய மக்களின் அனுதாப அலையின் தாக்கத்தினால் மகாராணியார் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுவும் அவரைக் கடந்து போகும் வகையில் உறுதி குலையாமல் தனது விவகாரங்களைக் கையாண்டார்.
இங்கே எலிசபெத் மகாராணியரைப் பற்றி முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 93 வயதான எமது மகாராணியார் 21 வயதில் திருமணமாகி அவரது தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னால் 27 வயதாகும் போது இங்கிலாந்தின் மகாராணியானார். அந்த இளம் வயதில் போதிய அனுபவமின்றிப் பாரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவர், தனது இங்கிலாந்தின் மகாராணி எனும் பாத்திரத்தினுள் தன்னை வளர்த்துக்கொண்டார். வெறுமனே வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் தன்மீது எவ்விதமான பாதகமான விமர்சனம் வராமல் நடந்துகொண்டார்.
இங்கிலாந்து மட்டுமல்ல பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பதவியேற்று, தமது தலைமையின் கீழ் அவரது முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியாட்சி பெற்ற நாடுகளை அனுசரித்து அரவணைத்துக் கொண்டார்.
இத்தகைய பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரத்தில் அதிக காலம் அரசிலமர்ந்தவர் எனும் சாதனை படைத்த எலிசபெத் மகாராணியார், அவரது 93ஆவது வயதில் புதுச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மகாராணிக்கு பின்னால் அரசிலமரும் உரிமை கொண்டவர், இளவரசர் சார்ல்ஸ். இவரது இரண்டாவது புதல்வர் இளவரசர் ஹாரி. இவர் மணந்துகொண்டது கலப்பின மங்கையான மெகேன். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அமெரிக்க ஹாலிவுட்டில் நடிகையாயிருந்தவர். விளம்பரங்களில் இடம்பெற்ற ஒரு மாடல் ஆவார்
இவர்தான் ஐக்கிய இராச்சிய இராஜ குடும்பத்தில் இணைந்த முதலாவது கலப்பு இனத்தவர் ஆவார். இவரின் தந்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெள்ளை இனத்தவர், இவரின் தாயார் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவர் தன்னை ஒரு கறுப்பு இனப் பெண்மணி என்று கூறிக்கொள்வதில் பெருமையடைபவர்.
இவர்களின் திருமண வைபவமே சிறிய சலசலப்புடன்தான் நடந்தேறியது. வழக்கமான ஐக்கிய இராச்சிய அரச குடும்பத் திருமணங்கள் ஆங்கில கிறீஸ்தவ பாதிரிமாரால் நடத்தப்படும். ஆனால் இவர்களது திருமணம் கறுப்பு இனப் பாதிரியொருவரால் இவஞ்சலிக்கல் சேர்ச் எனும் முறையில் கிறீஸ்தவ பாடல்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. அத்துடன் வழக்கம் போலல்லாது அப்பாதிரியாரின் வைபவப் பேச்சு நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது, பலரின் புருவத்தையுயர்த்தியது. இத்திருமண வைபவத்தில் மணமகளான மெகன் மார்க்கல் அவர்களின் விருப்பமே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. காலத்தின் கட்டாயமாக இங்கிலாந்து அரச குடும்பமும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால்தான் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. அதற்கேற்ப அவர்கள் தமது நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் உண்மையே.
ஆனால் இம்மாற்றங்கள் எனும் பெயரில் இக்காலாச்சார விழுமியத்தின் அடிப்படையையே ஆட்டிப் பார்க்க முயல்கிறார்களோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. மெகன் மார்க்கல் அவர்களின் வருகை, அரச குடும்பத்தினுள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதலாவதாக இளவரசர் சார்ல்ஸ்க்கு அடுத்து முடியுரிமை கொண்டவரான இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் விழுந்துள்ளது என்கிறார்கள், அரச அவதானிகள். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இளவரசர் ஹாரி தாம் விலகிக் கொள்வதாகக் கூறியது இதற்குச் சான்றாகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் வெள்ளை இனத்தவரிடையே தேசியவாத மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் உலகில் பல நாடுகளை வெற்றிகொண்டு உலகின் அதிமுக்கிய நாடாக வலம் வந்த நாட்களே தமது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவை என்றே இவர்கள் எண்ணுகிறார்கள். தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்கும் உள்ள எல்லைக்கோடு மிக மெல்லியதே.
இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் மனத்தில் தமது இராஜ குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானம், ஒரு பக்தி என்றே கூறலாம். அந்த இராஜ குடும்பம், கலப்பில்லாத ஒரு வெள்ளை இனத்தவரின் வெளிப்பாடு என்பதில் இவர்களுக்குப் பெருமை இருந்தது.
ஐக்கிய இராச்சியத்தில் பல இனத்தவர் குடியேறி இன்று அது ஒரு பல்கலாச்சார நாடாகக் கருதப்பட்டாலும் தமது இராஜ குடும்பம், தமது நாட்டின் தனித்தன்மையைப் பழமையை எடுத்துக் காட்டுகிறது என்றே அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது
இந்நிலையில்தான் இளவரசராக இருந்த ஹாரி, இராஜ குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர், ஒரு கலப்பு இனத்துப் பெண்மணி, அதுவும் தன்னைக் கறுப்பு இனப்பெண்மணி என்று இனங்காட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணான மெகன் மார்க்கல் அவர்களை மணமுடித்து இராஜ குடும்பத்தில் இணைத்துள்ளார்.
வெள்ளை இனத்தவரின் மேன்மையே தமது தேசியவாதத்தின் அடிப்படை எனக் கொண்டவர்களால் இதனை ஜீரணிக்க முடியுமா என்ன? மெகன் மார்க்கல் பற்றிய விமர்சனங்கள், அவரின் பின்னணி, குடும்ப உறுப்பினர்களின் கருத்து எனப் பலதரப்பட்ட விடயங்கள் ஊடகங்களிலே ஆராயப்பட்டன.
இவை ஒருபுறமிருக்க, புதிதாய் இராஜ குடும்பத்தில் இணைந்துகொண்ட மெகன் மார்க்கல் அவர்களின் செயற்பாடுகள் இவ்வூடகத்துறையின் விமர்சனங்களுக்கு வலுச் சேர்ப்பவையாக இருந்தன, இந்தக் குடும்பத்தில் தான் ஒரு வித்தியாசமானவராக நடப்பதற்கு எத்தனித்தார். இராஜ குடும்பத்தின் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட பொது நடைமுறைகளை விமர்சித்து தான் அதனை ஏற்றுக்கொள்ளாதது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்
இளவரசர் ஹாரியும் தம் மனைவியின் விருப்புக்கு எதிராக நடக்க விரும்பாதவராக, தானும் இராஜ குடும்பத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
இளவரசர் ஹாரி, போரினால் அங்கவீனர்களாக்கப்பட்ட முன்னாள் போர்வீரர்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் தூதுவராகச் செயற்படுகிறார். அதேபோல மெகன் மார்க்கல் ஆப்பிரிக்க நாட்டின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இத்தம்பதியருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மெகன் மார்க்கல் அவர்களைப் பற்றி ஒரு சாராருக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இராஜ குடும்பத்தின் புதிய வரவினை , வம்ச விருத்தியை நாடு முழுவதும் கொண்டாடியதோடு உலக நாடுகளும் மிகவும் ஈடுபாடு கொண்டு நிகழ்வுகளை அவதானித்தன.
வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் இராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் மகாராணியார் இல்லத்தில் ஒன்றுகூடுவார்கள். மெகன் மார்க்கல் அவர்களின் வரவு, இக்கலாச்சார நடைமுறைக்கு முட்டுக்கட்டையானது. முதன்முறையாக இளவரசர் ஹாரி, மெகன் மார்க்கல் அவர்களது குழந்தை கிறிஸ்துமஸ் சமயத்தை, மெகன் மார்க்கல் வளர்ந்த நாடான கனடாவில் 2019ஆம் ஆண்டு கழித்தார்கள்.
இதைப் பற்றிப் பல கருத்துகள் ஊடகங்களில் விவாதங்களாகவும் விமர்சனங்களாகவும் இடம்பெற்றன..
இதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரியினதும், மெகன் மார்க்கலினதும் அறிவித்தல் தான் அனைவரின் மனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தான் இராஜ குடும்ப சம்பிரதாயங்களிலிருந்து முற்றாக விலகப் போவதாகவும், இராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களாகத் தமது எஞ்சிய வாழ்க்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.
தமக்கான தமது உத்தியோக இல்லத்தை 25 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து திருத்தியமைத்தார்களே அது பொதுப் பணமல்லவா? எப்படி அவர்கள் திடீரென இப்படி அறிவிக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அப்பணத்தைத் தாம் திரும்ப அரசாங்கத்துக்கு அளிக்கப் போகிறோம். அத்தோடு இனி தமது சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து தாம் கனடா தேசத்தில் வாழ்வை அமைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார்கள்..
இவ்வறிவித்தல்களுக்கு உத்தியோகப்பூர்வமாக பதிலிறுக்க வேண்டிய நிலைக்கு மகாராணியார் தள்ளப்பட்டார். இளவரசர் ஹாரியினதும், அவரது மனைவியினதும் விருப்பத்தைப் புரிந்து கொள்கிறோம். இளவரசர் ஹாரி உத்தியோகப்பூர்வமாக தாம் இராஜ குடும்பத்தினர் எனும் அடையாளத்தை உபயோகிக்க முடியாது என்று அறிவித்தார்கள். ஹாரி அவர்கள், இராஜ குடும்பத்தின் சார்பாகப் பங்கு கொள்ளவிருக்கும் அனைத்து உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகளிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறார் என்றும் அறிவித்தார்.
அனைத்தும் ஓரளவு சுமூகமாக நடந்தேறி விட்டது என்று இருக்கும்போது சிலநாட்களின் முன்னாள் இளவரசர் ஹாரியினதும் அவர் மனைவியினதும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. தம்மை இராஜ குடும்பத்தினர் அதாவது ஆங்கிலத்தில் Royals என்றழைக்க முடியாது என்று சொல்லும் உரிமை, இராஜ குடும்பத்துக்கு இல்லை என்று அந்த அறிக்கை கூறியதோடு, இராஜ குடும்பத்தின் தூரத்து உறவுகளே தம்மை இராஜ குடும்பத்தினர் என்று அழைக்கும்போது நாம் அழைப்பதில் என்ன தப்பு என்கிறார்கள்.
இத்தனையையும் மெளனமாக எதிர்கொண்டு எந்த விதமான கருத்துகளையும் பொதுவில் கூறாமல் அனைத்தையும் சாதுரியமாக நாகரீகமாக கையாண்டு கொண்டிருக்கும் 93 வயதான எமது எலிசபெத் மகாராணியார் இராஜதந்திரத்துக்கே ஓர் எடுத்துக் காட்டாகிறார்.
இளவரசர் ஹாரியின் நடவடிக்கைகளுக்குக் காரணமிருக்கலாம். அவரது அன்னையும், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்னைநாள் மனைவியும் மறைந்தவருமான லேடி டயானா அவர்களின் மீதான தொடர்ந்த ஊடகங்களின் ஆர்வமும், விமர்சனங்களுமே அவரது மறைவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய மனைவியும், குழந்தையும் அத்தகைய ஒரு ஊடகத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அது நியாயமானதாகக் கூட இருக்கலாம்.
ஆனால் இங்கே பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பம் என்பது ஒரு சாதாரண கலாச்சார விழுமியமில்லை. நாட்டின், மக்களின், கலாச்சாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. வெளிநாட்டவரின் ஐக்கிய இராச்சியத்தின் மீதான பார்வைக்கு ஓர் அத்திவாரமாகிறது. இத்தகைய ஒரு குடும்பத்தோடு இணையும் போது அதனோடு சேர்ந்து வரும் ஊடகங்களின் உபத்திரவத்தை எதிர்பார்க்காமலா மெகன் மார்க்கல் அவர்கள், இளவரசர் ஹாரி அவர்களை மணமுடிக்க விரும்பியிருப்பார்?
ஒருநாட்டின் பாரம்பரிய கலாச்சார விழுமியத்துடன் இணைகையில் தாமும் அந்நாட்டினுடன் தம்மை இணைத்துக்கொள்கிறோம் என்பதை அறியாமலா மெகன் மார்க்கல் இருந்திருப்பார்?
இதையெல்லாம் அறிந்துகொண்டு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசரரை மணந்துகொண்ட மெகன் மார்க்கல், அக்குடும்பத்தின் நல்ல மருமகளாக அக்குடும்பப் பெருமைகளைக் காப்பாற்ற முடியாமல் தமது இச்சைக்கு ஏற்ப, தொன்மை மிக்க இராஜ குடும்பத்தினையே மாற்றியமைக்க முயல்வது போலத் தென்படுகிறது.
இத்தகைய செயற்பாடுகள் நடுநிலையாக இருக்கும் வெள்ளை இனத்தவர் பலரைக்கூடக் கொஞ்சம் இனவேற்றுமை எனும் நிலைக்குத் தள்ளுகிறது. இதுவரை தமது விதிமுறைகளைக் கடைப்பிடித்து வந்த இராஜ குடும்பத்தினுள் நுழைந்த வேற்றுநிறப் பெண்மணி, குழப்பத்தை உண்டாக்குகிறார் எனும் வகையில் எண்ணுகிறார்கள்.
இத்தகைய எண்ணம் பொதுவாக நாட்டில் நிலவும் நிறத் துவேஷத்தினை அதிகரிக்கச் செய்கிறது போலவும் தோன்றுகிறது. நாட்டில் கலக்கும் வேற்று இனத்தவரால் நாட்டின் பாரம்பரியத் தன்மை மாற்றப்படுகிறது எனும் இவர்களது வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.
ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்ப அமைப்பினை முற்றாகக் கலைத்து விடவேண்டும் எனும் கருத்துக் கொண்ட பலர், அரசியல்வாதிகள் உட்பட இருக்கிறார்கள். ஹாரி தம்பதியினரின் செயற்பாடு அவர்களுக்கெல்லாம் மேலும் உந்துசக்தியாக இருக்கப் போகிறது.
இந்தச் செயற்பாடுகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரமே அதன் மக்களின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. அத்தகைய வழியில் சட்ட திட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க உதவிய கலாச்சார அடிப்படையை அழித்துவிடுவது அந்நாட்டின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்ப்பது போலாகாதா?
எது எப்படியிருப்பினும் தமது அறிவித்தலை இவர்கள் தெரிவித்தது ஒரு சரியான நேரமா? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
நாடு ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கு முகம் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துள்ளது.
நாட்டின் மக்களிடையே இந்நிகழ்வு கொடுத்த பிரிவினையின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.
ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு ஏற்படுத்திய ஒரு இனத்துவேஷ உணர்வு இன்னும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இம்முடிவில் மெகன் மார்க்கல் வகித்த பங்கு, எரிகின்ற இந்த இனத்துவேஷ நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகாதா?
இராஜ குடும்பக் கலாச்சாரக் கட்டுப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வது இளவரசர் ஹாரியினது தனிமனித உரிமைக்கு உட்பட்டது என்றாலும் இதனை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் தவிர்த்து தமது இராஜ குடும்பத்து ஈடுபாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மெதுவாக இதனைச் செய்திருக்கலாம்.
இந்தத் தலைமுறை, கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறதோ?